‘நபிகள் சர்ச்சை விவகாரத்தில் பிரதமர் முன்பே தலையிட்டிருந்தால் வன்முறை ஏற்பட்டிருக்காது’ -ப.சிதம்பரம்


ப.சிதம்பரம்

முகமது நபி குறித்து பாஜக செய்தித் தொடர்பாளர்கள் ஆட்சேபத்துக்குரிய கருத்துகள் தெரிவித்ததைத் தொடர்ந்து எழுந்த சர்ச்சை பெரிய அளவில் வெடித்திருக்கும் நிலையில், “இந்த விவகாரத்தில் பிரதமர் மோடி உடனடியாகத் தலையிட்டிருக்க வேண்டும்” என்று காங்கிரஸ் மூத்த தலைவர் ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார்.

நபிகள் நாயகம் குறித்த பாஜகவின் முன்னாள் செய்தித் தொடர்பாளர்களான நுபுர் ஷர்மா மற்றும் நவீன் ஜிந்தல் ஆகியோரின் கருத்துக்கள் நாட்டில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளன. இதற்கு எதிராக நாட்டில் பல இடங்களில் போராட்டங்களும், வன்முறையும் ஏற்பட்டு வருகிறது.

இந்த விவகாரம் குறித்து ஒரு செய்தி நிறுவனத்திடம் பேசிய ப.சிதம்பரம், “நபிகள் குறித்து இரண்டு பாஜக செய்தித் தொடர்பாளர்களின் கருத்துக்கள் வெளிவந்தவுடன் பிரதமர் உடனடியாகப் பேசி நடவடிக்கை எடுத்திருக்க வேண்டும். இஸ்லாமிய வெறுப்புக்கு முற்றுப்புள்ளி வைக்குமாறு எதிர்க்கட்சிகள், எழுத்தாளர்கள், அறிஞர்கள் மற்றும் பொதுமக்கள் ஆகியோர் இந்த அரசாங்கத்தை எச்சரித்தபோதும் அரசு செவிசாய்க்காதது வருத்தமளிக்கிறது.

இஸ்லாமிய வெறுப்பை நிறுத்த இந்திய முஸ்லிம்கள் வெளிநாடுகளை எதிர்பார்க்க வேண்டுமா? மதச்சார்பின்மையை நிலைநிறுத்துவதில் அரசாங்கம் நேர்மையற்றது என்பது இந்த நிகழ்வுகளால் அம்பலப்படுத்தப்பட்டுள்ளது. நுபுர் ஷர்மாவுக்கு ஆதரவாக சாத்வி பிரக்யா பேசியதாக நான் படித்தேன். இது தொடர்பாக பிரதமர் மற்றும் உள் துறை அமைச்சரின் மௌனம், நீக்கப்பட்ட செய்தித் தொடர்பாளர்களுக்கு ஆதரவாக பாஜகவில் உள்ள குரல்கள் ஆகியவை பாஜகவின் நிலைப்பாடு அனைத்தையும் கூறுகின்றன” என்று கூறினார்.

மேலும், "இது ஒன்றும் புதிதல்ல, ஆர்எஸ்எஸ் தலைவர்களின் எழுத்துக்களில் இருந்து இதைக் கண்டுபிடிக்க முடியும் இயற்கையாகவே, சமூகத்தில் ஏற்படும் கலகம் பற்றி நான் கவலைப்படுகிறேன். சிறுபான்மையினருக்கு உறுதியளித்து அமைதியை மீட்டெடுப்பது அரசாங்கத்தின் பொறுப்பு" என்று ப.சிதம்பரம் தெரிவித்தார்

x