அரசியலும் மதமும் ஒன்றுடன் ஒன்று கலக்கக் கூடாது என சமீபத்தில் ஓய்வுபெற்ற உச்ச நீதிமன்ற நீதிபதி எல்.நாகேஸ்வர ராவ், சட்டக் கல்வி மாணவர்கள் மத்தியில் உரையாற்றியபோது வலியுறுத்தியிருக்கிறார். மத விஷயத்தில் அரசுகள் கவனத்துடன் செயல்படாவிட்டால் விரும்பத்தகாத விளைவுகள் ஏற்படும். குறிப்பாக, வெறுப்புப் பேச்சுக்குக் கடிவாளம் போடவில்லை என்றால் அதற்கான விலையை அரசு கொடுத்தாக வேண்டும். நபிகள் நாயகம் குறித்த அவதூறுக் கருத்துகளும், அதன் பின்னொட்டாக எழுந்திருக்கும் பின்விளைவுகளும் அதைத்தான் சொல்கின்றன.
ஆங்கில செய்தி சேனல் விவாதத்தின்போது, நபிகள் நாயகம் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசிய பாஜக செய்தித் தொடர்பாளர் நுபுர் ஷர்மாவும், நபிகள் நாயகத்தை அவமதிக்கும் வகையில் ட்வீட் செய்த டெல்லி பாஜக ஐடி பிரிவின் தலைவர் நவீன் ஜிந்தலும்தான் இந்த விவகாரத்தின் முக்கிய கர்த்தாக்கள். இருவருமே சிறுபான்மையினருக்கு எதிரான கருத்துகளை இதற்கு முன்பும் வெளியிட்டுவந்தவர்கள்தான். இருவரும் பாஜகவை பொதுவெளியில் பிரதிநிதித்துவம் செய்யும் பொறுப்பில் இருந்தவர்கள் என்பதால், இவர்களை அந்தப் பதவிக்குக் கொண்டுவந்தவர்கள் உட்பட பாஜகவின் முக்கியத் தலைவர்கள் தற்போது விமர்சனத்தை எதிர்கொண்டிருக்கிறார்கள்.
கட்சியின் தலைமையின் கவனத்தை ஈர்க்க, எதிர்த் தரப்பை எல்லை தாண்டி விமர்சிக்கும் ஆட்கள் எல்லா கட்சிகளிலும் உண்டு. இந்த முறை விவகாரம் வேறு வடிவம் எடுத்துவிட்டது. ஆளுங்கட்சி என்பதைத் தாண்டி நாட்டுக்கே இக்கட்டான சூழலை ஏற்படுத்திவிட்டது.
தாமதத்தால் நிகழ்ந்த தவறு
இவ்விவகாரத்தில் ஆரம்பத்தில் பாஜகவின் பிரதானத் தலைவர்களோ மத்திய அரசோ எந்தக் கருத்தையும் தெரிவிக்காமல் அமைதி காத்தனர். உடனடியாக சுதாரித்துக்கொண்டு இருவர் மீதும் நடவடிக்கை எடுக்கப்பட்டிருந்தால், இந்திய அளவில் சமூக ஊடக அளவிலேயே இந்த விவகாரம் முடிவுக்கு வந்திருக்கும். ஆனால், மத்திய அரசும் பாஜக தலைமையும் உடனடியாகச் செயலாற்றத் தவறியது இவ்விஷயத்தில் நுபுர் ஷர்மாவுக்கும் நவீன் ஜிந்தலுக்கும் தார்மிக ஆதரவை அவை தருகின்றன எனும் வாதத்தை வலுப்பெறச் செய்துவிட்டன.
கத்தார், ஓமன், பாகிஸ்தான் உள்ளிட்ட 57 நாடுகள் அடங்கிய இஸ்லாமிய நாடுகளின் கூட்டமைப்பு (ஓஐசி) கடும் கண்டனம் தெரிவித்ததுடன், மன்னிப்பு கேட்க வேண்டும் என்று இந்தியாவை வலியுறுத்தியது. இந்தோனேசியாவில் சந்திப்புகள் ரத்து செய்யப்பட்டிருக்கின்றன, துருக்கிக்குச் சென்றிருந்த இந்திய அதிகாரிகள் குழுவுக்கு எதிராகப் போராட்டங்கள் நடத்தப்பட்டிருக்கின்றன. இந்தியத் தூதர்களுக்கு சம்மன் அனுப்புவது, இருதரப்பு சந்திப்புகளை ரத்து செய்வது, இந்தியப் பொருட்களுக்குத் தடை விதிப்பது எனப் பல்வேறு விதமாகத் தங்கள் எதிர்ப்பை இஸ்லாமிய நாடுகள் வெளிப்படுத்தின. குடியரசுத் துணைத் தலைவர் வெங்கய்ய நாயுடு கத்தாரில் தரையிறங்கிய சமயத்தில் இந்த விவகாரம் வெடித்தது அவருக்கும் தர்மசங்கடத்தை ஏற்படுத்திவிட்டது.
இத்தனைக்கும் உக்ரைன் போர் விவகாரத்தில் ரஷ்யா தொடர்பாக இந்தியா எடுத்த நிலைப்பாட்டுக்கு மேற்கத்திய நாடுகள் மத்தியில் உருவான கடும் அதிருப்தியைச் சமாளித்து இந்தியாவின் முடிவு குறித்து விளக்கமளித்தனர் இந்திய வெளியுறவுத் துறை அதிகாரிகள். ஆனால், இவ்விஷயத்தில் அவர்களால் எதுவும் செய்ய முடியாததற்குக் காரணம் இந்த விவகாரம் மத அடிப்படையில் மிகவும் உணர்வுபூர்வமானது.
லவ் ஜிஹாத், மாட்டிறைச்சி, குடியுரிமைத் திருத்தச் சட்டம், ஹிஜாப் தடை என பல்வேறு பிரச்சினைகளை இந்திய முஸ்லிம்கள் எதிர்கொண்ட தருணங்களில்கூட முஸ்லிம் நாடுகள் எதிர்வினையாற்றவில்லை. இந்த முறை உலக முஸ்லிம்கள் அனைவருக்கும் புனிதமானவரும் பொதுவானவருமான நபிகள் நாயகம் குறித்து, பிரதான ஊடகத்தில் ஆளுங்கட்சியைச் சேர்ந்தவர் அவதூறாகப் பேசியது முஸ்லிம் நாடுகளை வெகுண்டெழச் செய்துவிட்டது.
பாஜக செய்த தவறுகள்
இவ்விவகாரத்தில் இந்தியாவுக்குக் கண்டனம் தெரிவித்த முஸ்லிம் நாடுகளில் பெரும்பான்மையானவை, மத அடிப்படைவாதம் குறித்து கேள்வி எழுப்பும் அளவுக்கு ஜனநாயகத் தன்மை கொண்டவை எனச் சொல்ல முடியாது. சொல்லப்போனால், மத அடிப்படைவாதத்துக்குப் பேர் போன தாலிபான்கள் இந்தியாவுக்கு அறிவுரை சொல்லும் அளவுக்கு நிலைமை சென்றதுதான் இன்னும் மோசம். ஆம் மதச்சார்பற்ற தேசம் என்றும், வேற்றுமையில் ஒற்றுமை காணும் நாடு என்றும் சர்வதேச வெளியில் அறியப்பட்ட இந்தியாவில் இப்படி நிகழ்வதுதான் தார்மிக ரீதியில் நமக்குத் தலைக்குனிவை ஏற்படுத்திவிட்டது.
பாஜகவைப் பொறுத்தவரை கட்சி அளவிலும் முஸ்லிம்களுக்கு வாய்ப்பு மறுப்பதை பகிரங்கமாகவே செய்துவருகிறது. மக்களவையில் உள்ள 301 பாஜக உறுப்பினர்களில் ஒருவர்கூட முஸ்லிம் அல்ல. மாநில அளவிலும் பாஜக சார்பில் ஒரு முஸ்லிம் எம்எல்ஏ கூட இல்லை. மாநிலங்களவையில் இதுவரை இருந்த 3 முஸ்லிம் எம்.பி-க்களின் பதவிக்காலமும் முடிவுக்கு வருகிறது.
இந்தியா போன்ற மதச்சார்பற்ற ஜனநாயக நாட்டில் ஒரு தேசியக் கட்சியின் நிலைப்பாடு இப்படி இருப்பது கேள்விக்குட்படுத்தப்படுகிறது. பசு குண்டர்கள் நிகழ்த்திய கும்பல் கொலைகள் உள்ளிட்ட விரும்பத்தகாத நிகழ்வுகளில் பாஜக அரசு உரிய நடவடிக்கை எடுக்கவில்லை எனும் விமர்சனம் தொடர்கிறது.
2015 டெல்லி சட்டப்பேரவைத் தேர்தலில், அர்விந்த் கேஜ்ரிவாலுக்கு எதிராக பாஜக சார்பில் போட்டியிட்டுத் தோற்றுப்போனவரும், அக்கட்சியின் செய்தித் தொடர்பாளராகப் பல்வேறு தொலைக்காட்சி விவாதங்களில் பங்கேற்றவருமான நுபுர் ஷர்மாவையும், டெல்லி பாஜக் ஐடி பிரிவின் தலைவராக இருந்த நவீன் ஜிந்தலையும் ‘உதிரி சக்திகள்’ என எப்படி அரசு குறிப்பிட முடியும் எனப் பலரும் கேள்வி எழுப்புகிறார்கள். கட்சி ரீதியாக அவர்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை மட்டும் போதாது என்று கூறுகிறார்கள்.
மத்திய உள் துறையின் கட்டுப்பாட்டில் டெல்லி போலீஸ் இருக்கும் நிலையில், நுபுர் ஷர்மாவுக்கு போலீஸ் பாதுகாப்புதான் போடப்பட்டிருக்கிறதே தவிர, அவர் கைதுசெய்யப்படவில்லை. பிரதமர் மோடியை விமர்சித்து ட்வீட் செய்ததற்காக அசாம் போலீஸார் குஜராத் சென்று ஜிக்னேஷ் மேவானியைக் கைது செய்தனர். இப்படிப் பலர் கைதுசெய்யப்பட்டிருக்கிறார்கள். ஆனால், நுபுர் ஷர்மாவுக்கு எதிராக வழக்கு பதிவுசெய்யப்பட்டிருக்கிறதே தவிர அவர் கைதுசெய்யப்படவில்லை. மாறாக, அவரது சர்ச்சைக் கருத்துக்கு எதிராகப் போராடியவர்கள் கைதுசெய்யப்பட்டிருக்கிறார்கள்.
கவலைக்குரிய சூழல்
இந்த விவகாரத்தில் உணர்வெழுச்சியின் அடிப்படையில் உருவான போராட்டங்களில் வன்முறை நடப்பது கவலை தருகிறது. கூடவே, சமூக ஊடகங்களில் பரவும் வெறுப்புக் கருத்துகள் ஆயாசம் தருகின்றன. ஞானவாபி மசூதி விவகாரத்திலும் இரு தரப்பையும் சேர்ந்த பலர் மத ரீதியாக அநாவசியமான கருத்துகளை சமூகவலைதளங்களில் பகிர்ந்துகொண்டதைப் பார்க்க முடிந்தது. கூடவே, இதுபோன்ற உணர்வுபூர்வமான விவகாரங்களில் பொறுப்பற்று நடந்துகொள்வதாக ஊடகங்களும் கண்டனத்தை எதிர்கொண்டிருக்கின்றன. விவாதம் எனும் பெயரில் விஷக் கருத்துகளை வெளியிடப்படுவதை செய்தி சேனல்கள் இனியும் அனுமதிக்க வேண்டுமா எனும் கேள்விகள் எழுந்திருக்கின்றன.
காஷ்மீரில் சிறுபான்மை இந்துக்களுக்கு எதிராக பயங்கரவாதிகள் நடத்தும் தாக்குதல்கள், பாகிஸ்தானிலிருந்து ட்ரோன் மூலம் கொண்டுவரப்படும் ஆயுதங்கள், விரைவில் தொடங்கவிருக்கும் அமர்நாத் யாத்திரை என நிலைமை மோசமாக இருக்கிறது. இப்படியான சூழலில், நுபுர் ஷர்மா விவகாரம் வெடித்திருப்பது அங்கும் நிலைமையை மோசமாக்கியிருக்கிறது.
சரியும் மோடி பிம்பம்
2002 குஜராத் கலவரத்தைத் தடுக்கத் தவறிவிட்டதாக எழுந்த விமர்சனங்களின் அடிப்படையில் பல நாடுகள் மோடி தங்கள் நாட்டுக்கு வருவதைத் தடை செய்திருந்தன. 2014-ல் அவர் பிரதமரான பின்னர் அந்தத் தடை நீங்கியது மட்டுமல்லாமல், அவரது தொடர் பயணங்கள், சர்வதேசத் தலைவர்களுடனான உறவை மேம்படுத்தியது, பெருந்தொற்று, உக்ரைன் போர் உள்ளிட்ட தருணங்களில் உலக நாடுகளுக்குத் துணை நின்றது என அவரது பல முன்னெடுப்புகள் அவருக்கு மட்டுமல்ல, இந்தியாவுக்கும் மதிப்பைப் பெற்றுத் தந்ததை மறுக்க முடியாது. அதேசமயம், வெறுப்பை அடிப்படையாகக் கொண்ட கொள்கை அவரது கட்சியின் பல்வேறு மட்டங்களில் எதிரொலிக்கவே செய்கிறது. சமீகாலமாக இந்துத்துவ அமைப்புகள் நடத்தும் கூட்டங்களில் வெளிப்பட்ட பகிரங்க வெறுப்புப் பிரச்சாரங்கள், பாடல்கள் வடிவிலான அறைகூவல்கள் மதநல்லிணக்கத்தை விரும்புபவர்கள் மத்தியில் ஆழ்ந்த கவலையை ஏற்படுத்தியிருக்கிறது.
‘சப் கா சாத் சப் கா விகாஸ்’ (அனைவருக்குமான ஒருங்கிணைந்த வளர்ச்சி) எனும் கொள்கையுடன் செயல்படுவதாக பாஜக அரசு சொல்லிக்கொண்டாலும், முஸ்லிம்களுக்கு எதிரான மனநிலையைக் கட்டமைப்பதில் இந்துத்துவர்கள் தீவிரமாகச் செயல்படுவதாகத் தொடர்ந்து விமர்சனங்கள் முன்வைக்கப்படுகின்றன.
இரட்டை நிலைப்பாடு
இவ்விஷயத்தில் இஸ்லாமிய நாடுகளின் கூட்டமைப்பின்(ஓஐசி) இரட்டை நிலைப்பாடும் விமர்சிக்கப்படுகிறது. சீனாவில் உய்குர் முஸ்லிம்களுக்கு எதிராக எடுக்கப்படும் கடும் நடவடிக்கைகளை இந்நாடுகள், குறிப்பாக பாகிஸ்தான், துருக்கி, மலேசியா போன்ற நாடுகள் இதுவரை கண்டிக்கவில்லை. சீனாவின் சிறுபான்மை முஸ்லிம்களின் உரிமைகளைவிடவும் அந்நாட்டுடனான பொருளாதார உறவுகளை அந்நாடுகள் முக்கியமாகக் கருதுகின்றன என்று சிலர் விமர்சிக்கிறார்கள். சீனாவை ஒப்பிட இந்தியாவின் பொருளாதார வலிமை குறைவு என்பதால், இதுபோன்ற விவகாரங்களில் இந்தியா எளிய இலக்காகிறது என்றும் பேசப்படுகிறது. இத்தனைக்கும் அந்நாடுகளுடனான இந்தியாவின் வணிகப் பரிவர்த்தனை 87 பில்லியன் டாலருக்கும் அதிகம். இதற்கிடையே இனி முஸ்லிம் நாடுகளில் மோடிக்குப் பழைய வரவேற்பு கிடைக்குமா என்பது சந்தேகம்தான் என்றும் சொல்கிறார்கள் சர்வதேசப் பார்வையாளர்கள்.
நம்பிக்கை தரும் மாற்றங்கள்
எனினும், முஸ்லிம் நாடுகள் கண்டனம் தெரிவித்தவுடன் உடனடியாக அது தொடர்பாக இந்தியா நடவடிக்கை எடுத்தது ஆரோக்கியமான விஷயம். கூடவே, குறிப்பிடத்தக்க மாற்றங்களும் நிகழத் தொடங்கியிருக்கின்றன. முஸ்லிம்களுக்கு எதிரானவர் எனும் விமர்சனத்தை எதிர்கொண்டிருக்கும் உத்தர பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத், ஜூன் 7-ல் கிருஷ்ண பக்தரான சையத் இப்ராஹிம் கான் எனும் முஸ்லிமின் தர்காவுக்குச் சென்று வழிபட்டிருக்கிறார். “பக்தியில் ஜாதி மத பேதம் கிடையாது” என்றும் பேசியிருக்கிறார். நுபுர் ஷர்மாவின் அவதூறு கருத்துக்கு எதிராக அம்மாநிலத்தின் கான்பூர் நகரில் நடந்த போராட்டங்கள் வன்முறை வடிவெடுத்த சூழலில் யோகி ஆதித்யநாத்தின் இந்தப் பயணம் கவனம் ஈர்த்திருக்கிறது.
இந்தத் தருணத்தைப் பயன்படுத்தி இந்தியாவில் இனி மத அடிப்படையிலான வெறுப்பு வேரூன்றாது எனும் நம்பிக்கையை மோடி அரசு ஏற்படுத்த வேண்டும். அதற்கு அனைத்துத் தரப்பினரும் ஒத்துழைப்பு தர வேண்டும்!