மக்களவையில் பிரதமர் மோடி பேசும்போது எதிர்க்கட்சிகள் கடும் அமளி: சபாநாயகர் கண்டனம்


புதுடெல்லி: “மூன்றாவது முறையாக தேர்தலில் தோல்வியடைந்ததால் சிலர் வேதனையடைந்துள்ளனர்” என மக்களவையில் பிரதமர் மோடி உரையாற்றினார். பிரதமர் பேசத் துவங்கியதும் எதிர்க்கட்சியினர் கடும் அமளியில் ஈடுபட்டதால் சபாநாயகர் கண்டனம் தெரிவித்தார்.

மக்களவையில் குடியரசுத் தலைவர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது, பிரதமர் நரேந்திர மோடி இன்று உரையாற்றினார். அப்போது அவர் பேசியது: “சிலரது வலியை என்னால் புரிந்து கொள்ள முடிகிறது. பொய்களைப் பரப்பிய பின்னரும் அவர்கள் தோல்வியைச் சந்தித்தனர். மூன்றாவது முறையாக பணிபுரியும் வாய்ப்பை இந்திய மக்கள் எங்களுக்கு வழங்கியுள்ளனர். எங்கள் 10 ஆண்டு சாதனையை மக்கள் பார்த்தனர். 25 கோடி பேர் வறுமையில் இருந்து வெளியே வந்தனர். சுதந்திரத்துக்குப் பிறகு இது நடக்கவில்லை” என பிரதமர் மோடி கூறியதும், எதிர்க்கட்சி உறுப்பினர்கள் பெரும் முழக்கங்களை எழுப்பினர்.

இதனால் அவையில் கூச்சல் குழப்பமாக இருந்தது. இதற்கு மத்தியில் பிரதமர் மோடி தொடர்ந்து பேசுகையில், “நமது ஒரே இலக்கு தேசம் முதலில்... இந்தியா முதலில். நமது ஒவ்வொரு கொள்கையும், முடிவும், நமது பணியும் 'இந்தியா முதலில்' என்ற ஒரே நோக்கத்தை கொண்டுள்ளது. கடந்த 10 ஆண்டுகளில், 'அனைவரின் பங்களிப்பு, அனைவருக்குமான வளர்ச்சி' என்ற நோக்கத்துடன் நமது அரசு செயல்பட்டு வருகிறது. இந்த நாடு நீண்ட காலமாக சமாதான அரசியலைப் பார்த்தது. சமாதானம் என்ற எண்ணத்துடன் அல்லாமல் திருப்தி என்ற எண்ணத்துடன் நாம் முன்னேறிவிட்டோம்” என்றார்.

இந்நிலையில், எதிர்க்கட்சிகளின் அமளி சத்தம் கடுமையாக இருந்ததால் பிரதமர் மோடி பேச்சை நிறுத்தி இருக்கையில் அமர்ந்தார். அதைத் தொடர்ந்து அவையில் கோஷங்களை எழுப்பி, கடும் அமளியை ஏற்படுத்திய எதிர்க்கட்சிகளின் எம்பி-க்களுக்கு சபாநாயகர் ஓம் பிர்லா கடும் கண்டனங்களை தெரிவித்தார்.