மேற்கு வங்கத்தின் கல்வித் துறையில் மோசடி நடந்ததாக எழுந்த புகார்களின் அடிப்படையில், சிபிஐ விசாரணை நடத்திவருகிறது. இந்நிலையில், தொடக்கப் பள்ளிக்கான ஆசிரியர் தகுதித் தேர்வில் வெற்று விடைத்தாளைக் கொடுத்தவர்களுக்கும் பணிநியமனம் வழங்கப்பட்டிருப்பதாக சிபிஐ உயரதிகாரி ஒருவர் தெரிவித்திருக்கிறார்.
தொடக்கப் பள்ளி ஆசிரியர் வேலை விற்கப்படுவதாக, வடக்கு 24 பரகனாஸ் மாவட்டத்தைச் சேர்ந்த ஒருவர் தொடர்ந்த வழக்கை விசாரித்துவரும் கொல்கத்தா உயர் நீதிமன்றம், இது தொடர்பாக விசாரணை நடத்துமாறு புதன்கிழமை (ஜூன் 8) உத்தரவிட்டது. இவ்வழக்கின் அடுத்த கட்ட விசாரணை ஜூன் 15-ல் நடக்கவிருக்கும் நிலையில், அன்றைய தினம் இது குறித்த அறிக்கையை தாக்கல் செய்யுமாறும் சிபிஐக்கு நீதிமன்றம் உத்தரவிட்டிருக்கிறது.
இது தொடர்பாக இன்று பிடிஐ செய்தி நிறுவனத்திடம் பேசிய சிபிஐ அதிகாரி, “தொடக்கப் பள்ளி ஆசிரியர்களின் நியமனத்தில் நடந்த முறைகேடுகளில் குமாஸ்தாக்கள் உள்ளிட்ட இளநிலை ஊழியர்கள் பலர் ஈடுபட்டிருப்பது விசாரணையில் தெரியவந்திருக்கிறது. இதில் பல விடைத்தாள்களில் தேர்வர்களின் பெயர் மற்றும் பதிவு எண் மட்டுமே எழுதப்பட்டிருந்தது. இந்தத் தேர்வர்களுக்கும் பணி நியமன ஆணை வழங்கப்பட்டிருக்கிறது” என்று கூறினார். இதில் பெரும் தொகை கைமாறியிருப்பதாகவும், இது குறித்த ஆதாரங்கள் சிபிஐ-க்குக் கிடைத்திருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.
கல்வித் துறை முன்னாள் அமைச்சர் பார்த்தா சாட்டர்ஜியும் சிபிஐ விசாரணை வளையத்துக்குள் கொண்டுவரப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.