80 அடி ஆழ்துளைக் கிணற்றில் விழுந்த சிறுவன்: 20 மணி நேரமாக தொடரும் மீட்புப் போராட்டம்


சத்தீஸ்கரின் ஜான்ஜ்கிர் சம்பா மாவட்டத்தில் உள்ள பிஹ்ரிட் கிராமத்தில், தனது வீட்டின் பின்புறத்தில் இருந்த மூடப்படாத ஆழ்துளை கிணற்றில் நேற்று மாலையில் ராகுல் சாஹு என்ற 11 வயது சிறுவன் விழுந்தான். கடந்த 20 மணி நேரமாக அச்சிறுவனை மீட்கும் பணிகள் நடந்து வருகிறது.

நேற்று மாலை ராகுலின் அலறல் சத்தம் கேட்டு அவரது குடும்பத்தினர் ஆழ்துளை கிணற்றில் விழுந்ததை அறிந்து அக்கம் பக்கத்தினருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பின்னர் மாவட்ட நிர்வாகம் மற்றும் காவல்துறை அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு வந்து நேற்று மாலை 4 மணியளவில் மீட்பு பணியை தொடங்கினர்.

80 அடி ஆழமுள்ள அந்த ஆழ்துளைக் கிணற்றில் விழுந்த சிறுவனை நேற்று மாலை முதல் மீட்கும் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. தேசிய பேரிடர் மீட்புப் படை (NDRF) மற்றும் மாநில பேரிடர் மீட்புப் படை (SDRF) குழுக்கள் மீட்புப் பணியில் ஈடுபட்டுள்ளது. இந்திய ராணுவத்தைச் சேர்ந்த நிபுணர்களும் மீட்புப் பணியில் இணைந்துள்ளனர்.

தற்போது 20 மணி நேரத்திற்கும் மேலாக மீட்புப் பணிகள் நடந்து வரும் நிலையில், ஆழ்துளைக் கிணற்றின் பக்கவாட்டில் 50 அடி ஆழம் வரை குழி தோண்டப்பட்டுள்ளதாகவும், 60 முதல் 65 அடி வரை குழித் தோண்டுவதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

மீட்புப்பணிகள் குறித்து பேசிய ஜான்ஜ்கிர் சம்பா காவல் கண்காணிப்பாளர் விஜய் அகர்வால், "மீட்புப் பணிகள் தொடர்ந்து தீவிரமாக நடைபெற்று வருகிறது. சிறுவன் உயிருடன் உள்ளான். பைப் மூலம் அந்த சிறுவனுக்கு போர்வெல்லுக்குள் ஆக்ஸிஜன் வழங்கப்படுகிறது" என தெரிவித்தார்.

இதுபற்றி சத்தீஸ்கர் முதல்வர் பூபேஷ் பாகேல், “ஒடிசாவில் இருந்து தேசிய பேரிடர் மீட்புக் குழு பிஹ்ரிட் கிராமத்திற்கு வந்திருப்பதாகவும், மீட்பு நடவடிக்கை நிபுணர் மொஹந்தி ஜியின் கண்காணிப்பில் இருப்பதாகவும் எனக்குத் தகவல் கிடைத்தது. ராகுலை ஆழ்துளை கிணற்றில் இருந்து மீட்க கூட்டு முயற்சிகள் நடந்து வருகின்றன. நேற்று மாலையில் இருந்து மீட்பு பணி நடந்து வருகிறது. தகவலின்படி, நாங்கள் ராகுலை அடைய 5-6 மணி நேரம் ஆகலாம். குழந்தைக்கு வாழைப்பழம் மற்றும் பழச்சாறு வழங்கப்பட்டுள்ளது, மேலும் சிறுவனிடம் குடும்பத்தினர் பேசி நம்பிக்கையூட்டி வருகின்றனர். அவரது நலனுக்காக நாம் அனைவரும் பிரார்த்திக்கிறோம்” என்று ட்விட் செய்துள்ளார்.

x