மருத்துவமனையில் ஆம்புலன்ஸ் வழங்காததால் தனது 4 வயது மருமகள் உடலை அவரது தாய்மாமன் 4 கிமீ தோளில் சுமந்து சென்ற சோகநிகழ்வு மத்திய பிரதேசத்தில் நடைபெற்றுள்ளது.
மத்திய பிரதேசம் சத்தர்பூரைச் சேர்ந்த சிறுமி ராதா(4). காய்ச்சலால் அவதிப்பட்டு வந்த அவர் சத்தர்பூரில் உள்ள பக்ஸ்வாஹாவில் உள்ள சமூக சுகாதார மையத்தில் அனுமதிக்கப்பட்டார். ஆனால், அவரது அவரது உடல்நிலை மோசமடைந்ததால், மாவட்ட மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.
ஆனால், மாவட்ட மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்ட ராதா, சிகிச்சை பலனின்றி நேற்று உயிரிழந்தார். இதனால் உயிரிழந்த சிறுமியின் உடலை 4 கிமீ தொலைவில் உள்ள அவரது சொந்த ஊருக்குக் கொண்டு செல்ல ஆம்புலன்ஸ் வேண்டும் என்று முறையிட்டனர். ஆனால், மருத்துவமனை நிர்வாகம் கண்டு கொள்ளவில்லை. இதனால் சிறுமி ராதா உடலை தாய்மாமன் தோளில் சுமந்தவாறு 4 கிமீ சென்றார். இதுகுறித்து சமூக ஊடகங்களில் தகவல் பரவியதையடுத்து நகராட்சியினர் ஆம்புலன்ஸ் வழங்கினர். இதன் பின் சிறுமியின் உடல் சொந்த ஊருக்கு கொண்டு செல்லப்பட்டது.
இதுகுறித்து சத்தர்பூர் தலைமை மருத்துவ அதிகாரி விஜய் பதோரியா கூறுகையில்," ஆம்புலன்ஸ் ஏன் வழங்கப்படவில்லை என்பது குறித்து உரிய விசாரணை நடத்தப்படும்" என்று கூறினார்.