கண்ணைக் கவரும் ‘லிப்ஸ்டிக்’ செடி: 100 ஆண்டுகளுக்குப் பின்னர் மீண்டும் கண்டறிந்த இந்திய ஆய்வாளர்கள்!


உதட்டுச் சாயத்தை நினைவுபடுத்தும் வகையிலான அடர் ரத்தச் சிவப்பில் கவனம் ஈர்க்கும் ‘லிப்ஸ்டிக்’ செடி, 100 ஆண்டுகளுக்குப் பின்னர் அருணாசல பிரதேசத்தில் மீண்டும் கண்டறியப்பட்டிருப்பது தாவரவியல் ஆர்வலர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியிருக்கிறது.

அருணாசல பிரதேசத்தின் அஞ்சாவ் மாவட்டத்தில், இந்தச் செடியை இந்தியத் தாவரவியல் கணக்கெடுப்பு நிறுவனத்தைச் சேர்ந்த ஆய்வாளர்கள் இந்தச் செடியை மீண்டும் கண்டறிந்திருக்கின்றனர். பொதுவாக லிப்ஸ்டிக் செடி என அழைக்கப்படும் இந்தச் செடியின் அறிவியல் பெயர் ‘ஏசினாந்தஸ் மானெட்டாரியா டன்’ (Aeschynanthus monetaria Dunn) ஆகும்.

பிரிட்டனைச் சேர்ந்த தாவரவியல் நிபுணர் ஸ்டீபன் டன் 1912-ல் இந்தச் செடியை முதன்முறையாகக் கண்டறிந்தார். மற்றொரு தாவரவியல் நிபுணரான ஐஸக் ஹென்றி பர்க்கில் அருணாசல பிரதேசத்திலிருந்து திரட்டித் தந்த தாவரத் தொகுப்பிலிருந்து இந்தச் செடியை ஸ்டீபன் கண்டறிந்தார்.

ஏசினாந்தஸ் பேரினத்தைச் சேர்ந்த சில செடிகள் லிப்ஸ்டிக் செடிகள் என அழைக்கப்படக் காரணம், அவற்றின் குழாய் வடிவிலான சிவப்பு நிற இதழ்கள்தான் என இந்தியத் தாவரவியல் கணக்கெடுப்பு நிறுவனத்தைச் சேர்ந்த விஞ்ஞானியான கிருஷ்ணா செளலு தெரிவித்திருக்கிறார்.

இதுதொடர்பாக, ‘கரன்ட் சயின்ஸ்’ எனும் அறிவியல் இதழில் எழுதிய கட்டுரையில் இந்தச் செடி குறித்து பல்வேறு தகவல்களைப் பதிவுசெய்திருக்கும் கிருஷ்ணா செளலு, பசுமையான வெப்ப மண்டலக் காடுகளில் வளரும் ஆசிய பேரினத்தைச் சேர்ந்த இந்தச் செடியில் 174 இனங்கள் உண்டு என்றும், அவற்றில் பெரும்பாலானவை சீனாவின் தெற்குப் பகுதியில் காணப்படுபவை என்றும் தெரிவித்திருக்கிறார்.

1912-க்குப் பிறகு இந்த வகைச் செடிகளைத் திரட்டும் பணிகள் நடைபெறவில்லை. கடந்த சில ஆண்டுகளாக மீண்டும் அதற்கான முயற்சிகளில் இந்தியத் தாவரவியல் நிபுணர்கள் ஈடுபட்டனர். அதன் பலனாக மீண்டும் இந்தச் செடி அருணாசல பிரதேசத்தில் கண்டறியப்பட்டிருக்கிறது.

வளமான பல்லுயிர்ச் சூழலைக் கொண்ட மாநிலமான அருணாசல பிரதேசத்தில் இதுபோல் மேலும் பல அரிய செடிகள் வளர்கின்றன என்றும், அர்ப்பணிப்புடன் கூடிய ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டால் அவற்றை வெளிக்கொணர முடியும் என்றும் தாவரவியல் நிபுணர்கள் தெரிவித்திருக்கிறார்கள்.

x