2022-ம் ஆண்டுக்கான சுற்றுச்சூழல் செயல்திறன் குறியீட்டெண் பட்டியலில் இந்தியாவுக்குக் கடைசி இடம் வழங்கப்பட்டிருப்பதை மத்திய அரசு கடுமையாகக் கண்டித்திருக்கிறது.
சுற்றுச்சூழல் சட்டம் மற்றும் கொள்கைக்கான யேல் மையம், கொலம்பியா பல்கலைக்கழகத்தின் சர்வதேச புவி அறிவியல் தகவல் வலைப்பின்னல் மையம் ஆகியவை இணைந்து நடத்திய ஆய்வின் முடிவுகளின்படி, 180 நாடுகளில் இந்தியாவுக்குக் கடைசி இடம் கிடைத்திருக்கிறது. பட்டியலில் 18.9 புள்ளிகள் பெற்று 180-வது இடத்தில் இந்தியா இருக்கிறது. மியான்மருக்கு 19.4 புள்ளிகள், வியட்நாமுக்கு 20.1 புள்ளிகள், வங்கதேசத்துக்கு 23.1 புள்ளிகள், பாகிஸ்தானுக்கு 24.6 புள்ளிகள் கிடைத்திருக்கின்றன.
டென்மார்க் முதலிடம் பெற்றிருக்கும் நிலையில், பிரிட்டன், பின்லாந்து ஆகிய நாடுகள் முறையே இரண்டாம் மற்றும் மூன்றாம் இடம் பிடித்திருக்கின்றன.
சுற்றுச்சூழல் சார்ந்த 11 பிரச்சினைகளின் அடிப்படையில், செயல்திறன் குறிகாட்டிகளின் துணையுடன் இந்தப் பட்டியல் தயாரிக்கப்பட்டிருப்பதாகக் கூறப்படுகிறது. பருவநிலை மாற்றத்துக்கு எதிரான செயல்பாடுகள், சுற்றுச்சூழல் சுகாதாரம் மற்றும் சுற்றுச்சூழல் அமைப்பின் உயிர்சக்தி ஆகியவற்றின் அடிப்படையில் இந்த ஆய்வின் முடிவுகள் தீர்மானிக்கப்பட்டிருப்பதாகச் செய்திகள் வெளியாகின.
இந்நிலையில், இந்த ஆய்வறிக்கையை மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகம் கடுமையாகக் கண்டித்திருக்கிறது. இதில் பயன்படுத்தப்பட்டிருக்கும் குறிகாட்டிகள் தவறான மதிப்பீட்டை அடிப்படையாகக் கொண்டவை என்றும், ஊகங்கள் மற்றும் அறியல்பூர்வமற்ற முறைகளின் அடிப்படையில் பெறப்பட்டவை என்றும் அமைச்சகம் தெரிவித்திருக்கிறது.
2050-ம் ஆண்டுவாக்கில் பசுங்குடில் வாயு வெளியேற்றத்தின் அளவு குறித்த கணிப்பின் அடிப்படையில் புதிய குறிகாட்டி சேர்க்கப்பட்டிருப்பதாகச் சுட்டிக்காட்டியிருக்கும் மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகம், பசுங்குடில் வாயு வெளியேற்றத்தில் இந்தியா குறைந்த அளவு பங்களிப்பு செய்தது குறித்த தரவுகள் இந்த ஆய்வில் இடம்பெறவில்லை என்றும் குறிப்பிட்டிருக்கிறது. இவற்றின் அடிப்படையில் இந்த ஆய்வு முடிவை நிராகரிப்பதாகவும் தெரிவித்திருக்கிறது.