தவித்த வாய்க்குத் தண்ணீர்: பேரன்பு கொண்ட பேருந்து நடத்துநர்!


இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் கடும் வெப்பம் நிலவுகிறது. மார்ச் முதல் மே வரை இந்தியாவில் வீசிய வெப்ப அலை, கோதுமை உள்ளிட்ட உணவுப் பொருள் ஏற்றுமதியைத் தடை செய்யும் அளவுக்கு விளைச்சலில் பாதிப்பை ஏற்படுத்தியது. குறிப்பாக, வட இந்திய மாநிலங்களில் நிலவும் வெப்பம், வாகன ஓட்டிகளுக்கும் பயணிகளுக்கும் பெரும் சிரமத்தை ஏற்படுத்தும். அப்படியான தருணங்களில் யாரேனும் ஒரு குவளை தண்ணீர் கொடுத்தால் அவர் ஆபத்பாந்தவனாகவே கருதப்படுவார்.

ஹரியாணா ரோடுவேஸில் பணிபுரியும் நடத்துநர் சுரேந்திர ஷர்மா அப்படித்தான் சமூக வலைதளங்களில் வைரலாகியிருக்கிறார். ஹரியாணாவின் ரோஹ்தக்கைச் சேர்ந்த சுரேந்திர ஷர்மா, தான் பணிபுரியும் அரசுப் பேருந்தில் பயணிக்கும் பயணிகள் அனைவருக்கும் குவளையில் தண்ணீர் வழங்குவதை வழக்கமாக வைத்திருக்கிறார்.

சுரேந்திர ஷர்மாவின் சேவை குறித்து ட்வீட் செய்திருக்கும் ஐஏஎஸ் அதிகாரி அவனிஷ் சரண், ‘பேருந்தில் ஒரு பயணி ஏறியதும், சுரேந்திர ஷர்மா முதல் வேலையாக அவருக்கு ஒரு தம்ளர் தண்ணீர் கொடுத்துவிடுவார். பணியில் சேர்ந்தது முதல் கடந்த 12 ஆண்டுகளாக இந்தச் சேவையை ஆன்மிக ரீதியில் கடைப்பிடிக்கிறார்’ என்று அதில் குறிப்பிட்டிருக்கிறார். அவரைப் பற்றி அவனிஷ் சரண் வழங்கிய அறிமுகம், சமூகவலைதளங்களில் அவருக்கு நற்பெயரைப் பெற்றுத் தந்திருக்கிறது.

சில நாட்களுக்கு முன்னர் வெளியான இந்த ட்வீட்டுக்குப் பெரும் வரவேற்பு. இதுவரை 8,000-க்கும் மேற்பட்டோர் அந்தப் பதிவை லைக் செய்திருக்கின்றனர். நடத்துநர் சுரேந்திர ஷர்மாவைப் பாராட்டி ஏராளமானோர் பின்னுட்டம் எழுதியிருக்கிறார்கள்.

பலர் பேருந்து பயணத்தின்போது அவரை நேரில் பார்த்ததாகவும் பதிவுசெய்திருக்கிறார்கள். ’ரோஹ்தக்கிலிருந்து குர்காவ் (குருகிராம்) செல்லும் பேருந்தில் அவரைப் பார்த்ததாக ஒருவர் குறிப்பிட்டிருக்கிறார். இன்னொருவர் சண்டிகரிலிருந்து டெல்லி செல்லும் பேருந்தில் அவரைப் பார்த்ததாகப் பதிவிட்டிருக்கிறார். எல்லோரும் சொல்லும் பொது விஷயம், பயணிகளுக்கு அவர் தண்ணீர் வழங்குவதைப் பார்த்ததுதான். தன்னலம் பாராது பிறருக்கு நன்மை செய்பவர்கள் என்றேனும் ஒரு நாள் அதற்கான அங்கீகாரத்தைப் பெறுவார்கள் என்பதற்கு உதாரணமாகியிருக்கிறார் சுரேந்திர ஷர்மா.

x