பாலியல் வன்கொடுமையால் பாதிக்கப்பட்ட பெண்ணின் அடையாளத்தை வெளியிட்ட பாஜக எம்எல்ஏ மீது வழக்கு!


ரகுநந்தன் ராவ்

பாலியல் வன்கொடுமையால் பாதிக்கப்பட்ட பெண்ணின் அடையாளத்தை பொதுவெளியில் வெளிப்படுத்திய பாஜக சட்டப்பேரவை உறுப்பினர் ரகுநந்தன் ராவ் மீது போலீஸார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

தெலங்கானா மாநிலம் ஹைதராபாத்தில் உள்ள ஜூப்ளி ஹில்ஸ் பகுதியில் பத்து நாட்களுக்கு முன்பு 17 வயது சிறுமியை காரில் 5 பேர் கொண்ட குடும்பல் பாலியல் வன்கொடுமை செய்ததாக கூறப்படுகிறது. இவ்வழக்கில் இதுவரை 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இந்த நிலையில், கடந்த வாரம் பாஜக தலைமை அலுவலகத்தில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பின் போது பாஜக சட்டப்பேரவை உறுப்பினர் ரகுநந்தன் ராவ், ஜூப்ளி ஹில்ஸ் பகுதியில் பாலியல் வன்கொடுமையால் பாதிக்கப்பட்ட பெண்ணுடன் ஒரு சட்டப்பேரவை உறுப்பினரின் மகன் காரில் இருந்ததற்கான ஆதாரம் என ஊடகவியலாளர்களுக்கு புகைப்படம் மற்றும் வீடியோவை காட்டினார். அத்துடன் சட்டப்பேரவை உறுப்பினர் மகனைக் காப்பாற்ற போலீஸார் முயற்சிப்பதாகவும் அவர் குற்றம் சாட்டினார்.

பாஜக சட்டப்பேரவை உறுப்பினர் ரகுநந்தன் ராவ் வெளியிட்டவற்றை பலர் சமூக ஊடகங்களில் பகிர்ந்தனர். இதற்கு பல்வேறு அமைப்பினர், கட்சியினர் கண்டனம் தெரிவித்தனர். ரகுநந்தன் ராவ் வெளியிட்ட வீடியோவை சமூக ஊடகங்களில் வெளியிட்ட 2 யூடியூப்பர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

இந்தநிலையில், பாதிக்கப்பட்டவரின் அடையாளத்தை வெளிப்படுத்துவது தொடர்பான இந்திய தண்டனைச் சட்டத்தின் 228 -ஏ பிரிவின் கீழ் ரகுநந்தன் ராவ் மீது போலீஸார் இன்று வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

x