அரபு நாடுகளில் கடும் எதிர்ப்பு: நபிகள் பற்றி அவதூறாகப் பேசிய 2 பாஜக செய்தித் தொடர்பாளர்கள் இடைநீக்கம்


பாஜக தேசியப் பொதுச் செயலாளர் அருண் சிங்

முகமது நபி மற்றும் அவரது மனைவி குறித்து அவதூறான கருத்துகளை வெளியிட்ட பாஜக செய்தித் தொடர்பாளர்களான நுபுர் சர்மா மற்றும் நவீன் ஜிண்டால் ஆகிய இருவரையும் இடைநீக்கம் செய்து அக்கட்சி உத்தரவிட்டுள்ளது.

நுபுர் சர்மா மற்றும் நவீன் ஜிண்டால் ஆகியோருக்கு எதிராக இந்தியாவில் பல இடங்களில் புகார்கள் பதிவு செய்யப்பட்டது. இது மட்டுமின்றி குவைத், கத்தார் மற்றும் சவுதி அரேபியா போன்ற பல அரபு நாடுகளிலும் கடுமையான எதிர்ப்பு கிளம்பியுள்ளது. பாஜக செய்தித் தொடர்பாளர்களின் கருத்துக்கு எதிராக அரபு நாடுகளில் ஹேஷ்டேக்குகள் டிவிட்டரில் ட்ரெண்டாகின.

இந்நிலையில், பாஜக தேசியப் பொதுச் செயலாளர் அருண் சிங் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘இந்தியாவில் மோதல்கள் மற்றும் வெளிநாட்டில் அதிர்ச்சியை ஏற்படுத்திய சர்ச்சைக்குரிய கருத்துகளை தெரிவித்த செய்தித் தொடர்பாளர்களான நுபுர் ஷர்மா மற்றும் நவீன் ஜிண்டால் ஆகியோர் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர். பாரதிய ஜனதா கட்சி எந்தவொரு பிரிவினரையும் அல்லது மதத்தையும் அவமதிக்கும் அல்லது இழிவுபடுத்தும் எந்தவொரு சித்தாந்தத்திற்கும் எதிரானது. பாஜக அத்தகைய நபர்களையோ அல்லது தத்துவத்தையோ ஊக்குவிப்பதில்லை. இந்தியாவின் ஆயிரக்கணக்கான வருட வரலாற்றில் ஒவ்வொரு மதமும் மலர்ந்து வளர்ந்திருக்கிறது. பாரதிய ஜனதா கட்சி அனைத்து மதங்களையும் மதிக்கிறது’ என்று கூறப்பட்டுள்ளது.

x