அரசியல் தலைவர்களின் பூடகமான ஆரூடங்கள் எப்போதும் ஆர்வத்தைக் கிளப்புபவை. அந்த வகையில் இன்னும் இரண்டு மூன்று மாதங்களில் தேசிய அரசியல் தொடர்பாகப் பரபரப்பான செய்தி கிடைக்கும் எனப் பத்திரிகையாளர்களிடம் தெலங்கானா முதல்வர் கே.சந்திரசேகர் ராவ் கூறியது விவாதங்களைக் கிளப்பியிருக்கிறது. பாஜகவையும், காங்கிரஸையும் எதிர்த்துக் களமாடும் சந்திரசேகர் ராவ், மூன்றாவது அணியை உருவாக்கும் முயற்சியில் தொடர்ந்து ஈடுபட்டிருப்பவர்தான். இந்த முறை அந்த முயற்சியில் கூடுதல் வேகம் சேர்ந்திருக்கிறது. வியூகமும் பலமாக இருக்கிறது.
போராட்ட குணம் கொண்டவர்
2001-ல் தெலுங்கு தேசம் கட்சியிலிருந்து விலகி தெலங்கானா ராஷ்ட்ரிய சமிதி கட்சியை (டிஆர்எஸ்) சந்திரசேகர் ராவ் தொடங்கியபோது, பெரிதாக என்ன சாதித்துவிடப்போகிறார் என்றுதான் பலரும் அவநம்பிக்கை கொண்டிருந்தனர். எனினும், அவரது அநாயாசமான போராட்ட குணம் தெலங்கானா எனும் பல்லாண்டுகால தனி மாநிலக் கனவை நனவாக்கியது. 2009 நவம்பரில் தெலங்கானா தனி மாநிலக் கோரிக்கையை வலியுறுத்தி சாகும்வரை உண்ணாவிரதத்தை அவர் தொடங்கியபோது அவர் மீதான மக்களின் நம்பிக்கை பன்மடங்கு அதிகரித்தது. தெலங்கானா மாநிலத்தை உருவாக்குவதாக 2009 டிசம்பர் 9-ல் மத்திய அரசு அறிவித்தது அவரது போராட்டத்துக்குக் கிடைத்த பெரும் பலன். அதன் பின்னரும் தாமதம் நீடித்ததால் மீண்டும் களமிறங்கிப் போராடினார் சந்திரசேகர் ராவ்.
ஒருவழியாக 2014 ஜூன் 2-ல் புதிய மாநிலமாக தெலங்கானா உருவானது. அந்த ஆண்டு நடந்த சட்டப்பேரவைத் தேர்தலில், மொத்தம் உள்ள 119 தொகுதிகளில் 63-ல் வென்று ஆட்சியைப் பிடித்தது டிஆர்எஸ். நம்பிக்கையூட்டும் வகையிலான ஆட்சியைத் தந்ததால் மக்களிடம் செல்வாக்கை அதிகரித்துக்கொண்டார். ரயது பந்து, ரயது பீமா, ஷாதி முபாரக், கல்யாண லக்ஷ்மி என்பன உள்ளிட்ட வளர்ச்சித் திட்டங்கள் சந்திரசேகர் ராவ் தலைமையிலான ஆட்சி மீண்டும் அமைய உறுதிசெய்தன. அந்தத் துணிச்சலில், ஆட்சிக்கு வந்து 51 மாதங்களில் அடுத்த சட்டப்பேரவைத் தேர்தலை முன்கூட்டியே நடத்தினார். 2018-ல் நடந்த அந்தத் தேர்தலில் 88 இடங்களில் வென்று ஆட்சியைத் தக்கவைத்துக்கொண்டார். டிஆர்எஸ் கட்சியின் செல்வாக்கு பிற கட்சி எம்எல்ஏ-க்களையும் அக்கட்சியில் சேரவைத்தது. காங்கிரஸைச் சேர்ந்த 12 எம்எல்ஏ-க்கள், தெலுங்கு தேசம் கட்சியின் இரண்டு எம்எல்ஏ-க்கள், ஒரு சுயேச்சை எம்எல்ஏ அக்கட்சியில் சேர்ந்தனர். இன்றைய தேதியில் 103 எம்எல்ஏ-க்கள் கொண்ட கட்சியாக அசுர பலத்துடன் இருக்கிறது டிஆர்எஸ்.
இந்நிலையில், தேசிய அரசியலில் தடம்பதிக்கும் முயற்சியில் இறங்கியிருக்கிறார் சந்திரசேகர் ராவ். இதற்காகத் தனது மகன் கேடிஆரை சொந்த மண்ணில் நிலைபெறச் செய்துவிட்டு தனது எல்லைகளை விரிக்க அவர் முயல்கிறார். ஏறத்தாழ 45 ஆண்டுகள் அரசியல் அனுபவம் கொண்ட அவர் தேசிய அரசியல் தொடர்பாகக் கொண்டிருக்கும் பார்வையும் காத்திரமானது.
ஒன்றியத்தின் தப்பாலே...
மாநில எல்லைகளைத் தாண்டி தேசிய விவகாரங்களை சந்திரசேகர் ராவ் நுட்பமாகப் பகுப்பாய்வு செய்கிறார். நீர் மேலாண்மையை மத்திய அரசு சரிவரக் கையாளவில்லை என்று குற்றம்சாட்டும் அவர், இவ்விஷயத்தில் பாஜக, காங்கிரஸ் என இரு கட்சிகளும் தோல்வியடைந்துவிட்டதாகக் கூறுகிறார். நதிநீர் தீர்ப்பாயங்களின் செயல்பாட்டையும் கண்டிக்கிறார். அதேபோல, இந்தியா சுதந்திரமடைந்து இத்தனை வருடங்களுக்குப் பின்னரும் சீனா போன்ற நாடுகளில் இருப்பது போல நெடுஞ்சாலை வசதிகள், கப்பல் போக்குவரத்து வசதிகள் மேம்படுத்தப்படவில்லை என்றும் குற்றம்சாட்டுகிறார். கூடவே, மாநில உரிமைகள் குறித்தும் தொடர்ந்து குரல் கொடுத்துவருகிறார். கல்வி, விவசாயம், சுகாதாரம், ஊரக வளர்ச்சி, நகர்ப்புற வளர்ச்சி போன்றவற்றின் முழு அதிகாரமும் மாநிலங்கள் வசம்தான் இருக்க வேண்டும் என்று வலியுறுத்துகிறார். முக்கிய விஷயங்கள் பொதுப் பட்டியலில் வைக்கப்பட்டிருப்பதை அவர் கடுமையாகச் சாடுகிறார். இதுபோன்ற பல்வேறு பிரச்சினைகளுக்குத் தன்னிடம் தீர்வுகள் இருப்பதாகவும் பேசிவருகிறார்.
காங்கிரஸுக்குப் பின்னர் பாஜகவின் செல்வாக்கு வளர்ந்திருக்கும் சூழலில், தேசிய அளவில் அந்த இரு கட்சிகள் மட்டுமே முக்கியத்துவம் கொண்டிருப்பது ஜனநாயகத்துக்கு நல்லதல்ல என்று கருதும் சந்திரசேகர் ராவ், அதற்கு எதிரான வியூகத்தையும் வகுக்கிறார். மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி, சமாஜ்வாதி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ், மகாராஷ்டிர முதல்வர் உத்தவ் தாக்கரே, தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் என அவ்வப்போது பிற கட்சித் தலைவர்களைச் சந்தித்துப் பேசிவருகிறார். தேசிய அளவில் ஒரு மாற்று அரசியலை உருவாக்குவதில் கவனம் செலுத்துகிறார். 2019 மக்களவைத் தேர்தலில் மூன்றாவது அணி முயற்சி தோல்வியைத் தழுவினாலும், மீண்டும் மீண்டும் அதில் முனைப்பு காட்டுகிறார்.
இரு புறமும் எதிரிகள்
தனது செல்வாக்கைப் பறைசாற்ற தெலங்கானா உருவான தினமான ஜூன் 2-ல் தேசிய அளவில் பல்வேறு நாளிதழ்களில் தனது அரசின் நலத் திட்டங்கள், வளர்ச்சித் திட்டங்கள், சாதனைகள் என அனைத்தையும் மூன்று பக்க விளம்பரமாக வெளியிட்டிருக்கிறார் சந்திரசேகர் ராவ். ஆனால், தெலங்கானா அரியணையைக் குறிவைத்து பாஜகவும், காங்கிரஸும் அரசியல் அரங்கில் காய் நகர்த்திவருவது அவருக்குச் சவால்தான்.
டுபக்கா சட்டப்பேரவைத் தொகுதி இடைத் தேர்தலில் பாஜக வேட்பாளர் மாதவவேனி ரகுநந்தன் ராவ், டிஆர்எஸ் வேட்பாளர் சோலிபேட்டா சுஜாதாவை 1,079 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியுறச் செய்தார். இத்தனைக்கும் டிஆர்எஸ் கட்சிக்கு அந்தத் தொகுதியில் செல்வாக்கு அதிகம். அதேபோல ஹுஜுராபாத் தொகுதி இடைத்தேர்தலில் பாஜகவின் ஈட்டல ராஜேந்தர் டிஆர்எஸ் கட்சியின் கெல்லு ஸ்ரீனிவாஸை 23,855 வாக்குகள் வித்தியாசத்தில் வென்றார். சந்திரசேகர் ராவ் அரசில் நிதி மற்றும் சுகாதாரத் துறை அமைச்சர் பதவிகளை வகித்த ஈட்டல ராஜேந்தர் பாஜகவுக்குத் தாவி இடைத்தேர்தலில் வென்றது டிஆர்எஸ் கட்சியினருக்கு அதிர்ச்சி ஏற்படுத்தியது. அந்தத் துணிச்சலில்தான் 70 இடங்களைக் கைப்பற்றப்போவதாக பாஜக சூளுரைக்கிறது. சந்திரசேகர் ராவின் மகன் கே.டி.ராமராவ், மருமகன் ஹரீஷ் ராவ், மகள் கவிதா ஆகியோரின் அரசியல் செல்வாக்கைத் தனது ஆயுதமாக பாஜக பயன்படுத்திவருகிறது.
டிஆர்எஸ் கட்சிக்குக் கூடுதல் சவாலாக உருவெடுக்க காங்கிரஸ் முயற்சிக்கிறது. முன்பெல்லாம் காங்கிரஸ் விஷயத்தில் சந்திரசேகர் ராவ் அதிகம் அலட்டிக்கொண்டதில்லை. ஆனால், வாரங்கல்லில் சமீபத்தில் நடந்த கூட்டத்தில் உரையாற்றிய ராகுல் காந்தி, டிஆர்எஸ் ஆட்சியைக் கடுமையாக விமர்சித்தது சந்திரசேகர் ராவைத் துணுக்குறச் செய்தது. அந்தக் கூட்டத்தில் ஏராளமானோர் கலந்துகொண்டது டிஆர்எஸ் தலைமையைச் சற்று ஆச்சரியப்படுத்தியது. எனவே, இப்போது இரு முனைத் தாக்குதலாக பாஜகவுடன் காங்கிரஸையும் சாடிவருகிறார் சந்திரசேகர் ராவ். பாஜகவை விமர்சிப்பது போலவே காங்கிரஸையும் காய்ச்சி எடுக்கிறார்கள் டிஆர்எஸ் தலைவர்கள். ராகுல் காந்திக்குக் கட்சி நடத்தவே தெரியவில்லை என்று சுகாதாரத் துறை அமைச்சர் ஹரீஷ் ராவ் கிண்டலடித்திருக்கிறார்.
காங்கிரஸைப் பொறுத்தவரை 2023 சட்டப்பேரவைத் தேர்தலைத் தாண்டி 2024 மக்களவைத் தேர்தலில் தெலங்கானாவில் கணிசமான தொகுதிகளைக் கைப்பற்றலாம் எனக் கணக்குப் போடுகிறது. பழங்குடி மக்களைச் சந்திப்பது உள்ளிட்ட வியூகங்களை வகுக்க காங்கிரஸ் திட்டமிடுகிறது. கிட்டத்தட்ட அதே போன்ற திட்டத்தில் பாஜகவும் இருக்கிறது. ஆனால், பழங்குடியினர், பட்டியலினத்தவருக்குப் பல்வேறு நலத்திட்டங்களைக் கொண்டுவந்திருக்கும் சந்திரசேகர் ராவை இந்த விஷயத்தில் வீழ்த்துவது அத்தனை எளிதல்ல.
எதிர்கொண்டிருக்கும் சவால்கள்
மின்வெட்டுப் இல்லாத மாநிலமான தெலங்கானா, புதிய ஐடி நிறுவனங்கள், தொழிற்சாலைகள், சாலைவசதிகள், மேம்பாலங்கள் எனப் பல முன்னேற்றங்களைச் சந்தித்திருக்கிறது. பெரிய அளவில் மத ரீதியான வன்முறைச் சம்பவங்கள் நடக்கவில்லை என்பது இன்னொரு ஆறுதல். உருவாகி 8 ஆண்டுகளில் ஒரு புதிய மாநிலம் இந்த அளவுக்குத் தாக்குபிடித்து வளர்ந்திருப்பது பெரிய விஷயம்.
அதேசமயம் சவால்களுக்கும் குறைவில்லை. ‘கே.ஜி முதல் பி.ஜி’ வரை கல்வி இலவசம், அனைத்து இளைஞர்களுக்கும் வேலைவாய்ப்பு என்பன உள்ளிட்ட பல முக்கிய வாக்குறுதிகள் இன்னமும் நிறைவேற்றப்படவில்லை. 1 லட்சம் கோடி ரூபாய் மதிப்பீட்டில் உருவாகிவரும் காளேஸ்வரம் உயர்மட்ட நீர்ப்பாசனத் திட்டம் உள்ளிட்ட திட்டங்கள், பாகீரதா குடிநீர்த் திட்டம் போன்றவற்றின் பணிகள் போதுமான நிதி இல்லாமல் சுணங்கிக் கிடப்பதாகத் தகவல்கள் வெளியாகியிருக்கின்றன. இந்தத் திட்டங்களில் முறைகேடுகள் நடந்திருப்பதாக எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டிவருகின்றன. ஊழல் குற்றச்சாட்டில் சந்திரசேகர் ராவைச் சிறைக்கு அனுப்பப்போவதாக தெலங்கானா பாஜக தலைவர் பண்டி சஞ்சய் மிரட்டிவருகிறார். மாநில காங்கிரஸ் தலைவர் ரேவந்த் ரெட்டியும் கடுமையாக விமர்சித்துவருகிறார்.
நிதிப் பற்றாக்குறை காரணமாக அரசு ஊழியர்களுக்கு ஊதியம் தாமதமாக வழங்கப்படுவது ஒரு பெரிய பிரச்சினையாக வெடித்திருக்கிறது. கடன் பத்திரங்களை ஏலத்தில் வெளியிட மத்திய அரசு மறுப்பதுதான் இந்த நெருக்கடிக்குக் காரணம் என தெலங்கானா அரசு குற்றம்சாட்டுகிறது.
மோடியுடன் மோதல்
இத்தனைக்கும் பின்னணியில் மோடிக்கு நேரடியாகச் சவால் விடும் மாநில்த் தலைவராக சந்திரசேகர் ராவ் உருவெடுத்திருக்கிறார். மோடி ஹைதராபாத் சென்றிருந்தபோது சந்திரசேகர் ராவ், பெங்களூரு பறந்துவிட்டார். அங்கு தேவகவுடாவையும், குமாரசாமியையும் சந்தித்து குடியரசுத் தலைவர் தேர்தல் குறித்த ஆலோசனையில் ஈடுபட்டார். ஹைதராபாதில் நடந்த கூட்டத்தில் பேசிய பிரதமர் மோடி, வாரிசு அரசியலை முன்னிறுத்தி சந்திரசேகர் ராவ் குடும்பத்தைக் கடுமையாக விமர்சித்தார்.
ஆனால், பெங்களூருவிலிருந்து மோடிக்குப் பதிலடி கொடுத்த சந்திரசேகர் ராவ், “பிரதமர் பேசிக்கொண்டே இருக்கிறார். ஆனால் பிரச்சினைகள் அதிகமாகிக்கொண்டேதான் இருக்கின்றன” என்று சொல்லி விலைவாசி உயர்வு, டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பில் சரிவு உள்ளிட்ட பிரச்சினைகளைப் பட்டியலிட்டார். மேலும், தேசிய அளவில் நிச்சயம் மாற்றம் வரும் என்றும் சூளுரைத்தார். “இரண்டு மூன்று மாதங்களுக்குப் பின்னர் உங்களுக்குப் பரபரப்பான செய்தி கிடைக்கும்” என்று செய்தியாளர்களிடம் கூறினார் ராவ். தேசிய அரசியலில் கால் பதிப்பதன் மூலம், பிரதமர் பதவியைக் குறிவைத்து அவர் காய்நகர்த்துகிறாரா எனும் விவாதமும் எழுந்திருக்கிறது. அவரே சொல்வது போல சில மாதங்களில் அவரது திட்டம் என்ன எனத் தெரிந்துவிடும்!