குஜராத்தை சேர்ந்த இளம்பெண் ஷாமா பிந்து தன்னைத்தானே திருமணம் செய்துகொள்ள முடிவு செய்துள்ளார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ள பாஜக தலைவர் சுனிதா சுக்லா, "இந்த திருமணம் இந்து மதத்திற்கு எதிரானது, இது போன்றவை இந்துக்களின் மக்கள்தொகையை குறைக்கும்" என தெரிவித்துள்ளார்.
குஜராத்தின் வதோதராவைச் சேர்ந்த தனியார் நிறுவன ஊழியரான 24 வயது பெண் ஷாமா பிந்து ஜூன் 11-ம் தேதி ஹரிஹரேஷ்வர் கோயிலில் தன்னைத்தானே 'சுய திருமணம்' செய்து கொள்ள முடிவு செய்துள்ளார்.
இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள பாஜக தலைவர் சுனிதா சுக்லா, "அவர் எந்த கோயிலிலும் சுய திருமணம் செய்து கொள்ள அனுமதிக்க மாட்டோம். இதுபோன்ற திருமணங்கள் இந்து மதத்திற்கு எதிரானது. இது இந்துக்களின் மக்கள்தொகையைக் குறைக்கும். இந்து மதத்திற்கு எதிராக எதுவும் நடந்தால் எந்த சட்டமும் செல்லாது” என்று கூறினார். ஷாமா பிந்துவை "மனநலம் பாதிக்கப்பட்டவர்" என்று அழைத்த பாஜக தலைவர் சுனிதா சுக்லா, இந்து கலாச்சாரத்தில் ஒரு பையனை பையனே திருமணம் செய்யலாம் அல்லது ஒரு பெண் பெண்ணையே திருமணம் செய்யலாம் என்று எங்கும் எழுதப்படவில்லை என்று கூறினார்.
பெராஸ், சிந்தூர் முதல் கோவா தேனிலவு வரை இந்து திருமணத்தின் அனைத்து சடங்குகள் மற்றும் பழக்க வழக்கங்களுடன் சோலோகேமி எனப்படும் சுயதிருமணம் செய்ய பிந்து முடிவு செய்துள்ளார். இது தொடர்பாக பேசிய ஷாமா பிந்து, "திருமணத்தில் ஒருவரை ஒருவர் காதலிப்பது அவசியம். நான் என்னை காதலிக்கிறேன். அதனால்தான் என்னை திருமணம் செய்து கொள்கிறேன்" என்று கூறியுள்ளார்.
ஷாமா பிந்துவின் சுயதிருமணம் பற்றிய செய்திகள் சமூக வலைதளங்களில் பெரிய அளவில் வைரலானதுடன், கடும் எதிர்வினைகளையும் சந்தித்து வருகிறது.
இந்த சூழலில், இந்தியாவில் சோலோகேமி எனப்படும் சுய திருமணத்துக்கு எந்த சட்டப்பூர்வ அங்கீகாரமும் இல்லை என்று சட்ட நிபுணர்கள் கூறியுள்ளனர். “இந்திய சட்டங்களின்படி, உங்களை நீங்களே திருமணம் செய்து கொள்ள முடியாது. ஒரு திருமணத்தில் இரண்டு பேர் இருக்க வேண்டும். எனவே சோலோகேமி என்பது சட்டப்பூர்வமானது அல்ல” என்று உயர் நீதிமன்றத்தின் மூத்த வழக்கறிஞர் கிருஷ்ணகாந்த் வகாரியா தெரிவித்துள்ளார்.