ஹஜ் யாத்திரையை ரத்து செய்துவிட்டு இப்படியும் ஒரு சேவை!: நெகிழ்ச்சியூட்டிய தம்பதி


இஸ்லாமியர்களின் புனித யாத்திரையான ஹஜ் பயணத்திற்கு செல்வதை ரத்துசெய்துவிட்டு, ஏழைகளுக்கு இஸ்லாமிய தம்பதியினர் நிலம் வழங்கியச் சம்பவம் நெகிழ்ச்சியடைய வைத்துள்ளது.

கேரளத்தின் ஆரண்முளா பகுதியைச் சேர்ந்த ஜாஸ்மின், ஹனிபா தம்பதியினர் ஹஜ் புனித யாத்திரை செல்வதற்காக நீண்டகாலமாக திட்டமிட்டு வந்தனர். இஸ்லாம் மதம், அதை பின்பற்றுவோருக்கு ஐந்து கட்டளைகளை முன்வைக்கிறது. அதில், ஹஜ் புனித யாத்திரை செல்வதும் ஒன்று.

இந்நிலையில் இந்த தம்பதி, ஹஜ் யாத்திரை செல்வதைவிட நிலமற்ற ஏழை மக்களுக்கு நிலம் வழங்கும் முடிவை எடுத்தனர். கேரள இடதுசாரி, நிலமற்ற மக்களுக்கு 'லைப் மிஷன்' என்னும் பெயரில் நிலம் வழங்கி வருகிறது. இந்தத் தம்பதியினர் தங்கள் குடும்ப மூதாதையர்கள் வழியாகத் தங்களுக்கு பாத்தியப்பட்ட 28 சென்ட் நிலத்தை அந்த திட்டத்திற்கு தானமாக வழங்கியுள்ளனர்.

இதுகுறித்து ஜாஸ்மின், ஹனிபா ஆகியோர் கூறுகையில், “எங்கள் வீட்டின் பக்கத்தில் வாடகை வீட்டில் ஒருகுடும்பம் வசித்து வருகிறது. அவர்கள் வீட்டில் அண்மையில் ஒரு இறப்பு நடந்தது. அதற்குக்கூட அவர்கள் மிகவும் சிரமப்பட்டனர். அப்போதுதான் இந்த பூர்வீக இடத்தை விற்று ஹஜ் யாத்திரை செல்வதைவிடவும், இந்த நிலத்தை ஏழைகளுக்குக் கொடுப்பதே அல்லாவுக்கு நிறைவைக் கொடுக்கும் என இந்த முடிவை எடுத்தோம் ”என்றனர்.

'லைப் மிஷன்' திட்டத்திற்காக பூர்விக நிலத்தை ஒப்படைக்கும் தம்பதியின் முடிவுக்கு மதிப்பளிக்கும் வகையில் கேரள மாநில சுகாதாரத்துறை அமைச்சர் வீணா ஜார்ஜே, தம்பதியினரின் வீட்டிற்கு நேரடியாகச் சென்று இந்த ஒப்பந்தத்தைப் பெற்றார். கேரளத் தம்பதியின் இந்த செயல் நெகிழ வைத்துள்ளது.

x