மும்பையில் உள்ள அனைத்துக் கடைகள் மற்றும் வணிக நிறுவனங்களில் மராத்தியில் பெயர்ப் பலகைகளை அமைப்பதற்கான காலக்கெடுவை ஜூன் 30 வரை நீட்டித்து மும்பை மாநகராட்சி உத்தரவிட்டுள்ளது.
இது தொடர்பான அறிவிப்பினை வெளியிட்டுள்ள மும்பை மாநகராட்சி ஆணையர் இக்பால் சிங் சாஹல்,“பெரும்பாலான கடை உரிமையாளர்களிடம் தற்போதுள்ள பெயர்ப் பலகைகளை உடனடியாக புதியதாக மாற்றுவதற்கான நிதி ஆதாரம் இல்லை. மும்பை நகரத்தில் ஐந்து லட்சத்திற்கும் அதிகமான கடை உரிமையாளர்கள் உள்ளனர். அவர்களில் பெரும்பாலோர் சிறு வணிக உரிமையாளர்கள். எனவே அவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுப்பது நீதிமன்றம் மற்றும் மாநகராட்சி நிர்வாகம் மீதான சுமையை மட்டுமே அதிகரிக்கும்" என்று விளக்கமளித்திருக்கிறார்.
மேலும், “அவர்களுக்கு ஜூன் 30 வரை கால நீட்டிப்பு வழங்க முடிவு செய்துள்ளோம், இதற்கிடையில் வார்டு அளவிலான மாநகராட்சி அதிகாரிகள் கடை உரிமையாளர்களை அணுகி அவர்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்துவார்கள். அதன் பிறகு, ஜூலை 1 மற்றும் 15-ம் தேதிக்கு இடையில் ஏதேனும் கடைகள் மற்றும் வணிக உரிமையாளர்கள் இந்த விதிகளை பின்பற்ற தவறியிருந்தால் அவர்கள் மீது சோதனை நடவடிக்கை எடுப்போம்” என்றும் அவர் கூறினார்.
முன்னதாக ஜூன் 10-ம் தேதிக்குள் மராத்தி மொழியில் பெயர்ப் பலகைகளை அமைக்காத கடைகளுக்குத் தலா 2,000 ரூபாய் அபராதம் விதிக்கப்படும் என்று கடந்த மாதம் மும்பை மாநகராட்சி உத்தரவிட்டிருந்தது.
பிரதான சாலைகள், வணிக வளாகங்கள், தெருக்கள் மற்றும் சிறிய சாலைகளில் அமைந்துள்ள வணிக நிறுவனங்கள் இந்த விதிகளைக் கட்டாயமாகப் பின்பற்ற வேண்டும் என்று இக்பால் சிங் சாஹல் வலியுறுத்தியிருக்கிறார். இது தொடர்பாக சில்லறை விற்பனையாளர்கள் சங்கங்கள் மற்றும் நகரத்தின் வணிக உரிமையாளர்களுடன் பலமுறை ஆலோசனைக் கூட்டங்களை நடத்தியிருப்பதாகவும், இதில் எழும் சிக்கல்களைக் கண்காணிக்க சிறப்புக் குழு மற்றும் வழிகாட்டுதல்கள் உருவாக்கப்படும் என்றும் அவர் தெரிவித்திருக்கிறார்