தனியார் லாபம் பெறத்தான் இறக்குமதியாகிறதா ரஷ்ய எண்ணெய்? - ஓர் அலசல்


இந்திய எண்ணெய் சுத்திகரிப்புத் தொழிலில் தனியார் நிறுவனங்கள் லாபம் ஈட்டுகின்றன, அரசுத் துறை நிறுவனங்கள் இழப்புகளையே பெறுகின்றன. இது வழக்கமாக எல்லாத் துறைகளிலும் நடப்பதுதானே, இதில் என்ன புதிய தகவல் என்கிறீர்களா? இந்த லாபம் ரஷ்யாவிடம் கச்சா பெட்ரோலிய எண்ணெயை வாங்கி விற்பதன் மூலம் இந்தியத் தனியார் எண்ணெய் சுத்திகரிப்பு நிறுவனங்களான ரிலையன்ஸ், நயாரா ஆகியவற்றுக்குக் கிடைக்கின்றன என்பதுதான் புதிய தகவல்.

மத்திய அரசு வேண்டுமென்றே தனியார் நிறுவனங்களுக்குச் சாதகமாக நடக்கிறதா, அரசுத் துறை நிறுவனங்கள் லாபம் பெற முடியாமல் தடுக்கிறதா எனும் கேள்விக்கும் விடையளிப்பதும் கடினம். காரணம் இதில் வியாபாரம் மட்டுமில்லை, வெளிவிவகாரமும் சேர்ந்திருக்கிறது.

உக்ரைன் மீது பிப்ரவரி 24 முதல் ரஷ்யா எடுத்துவரும் ராணுவ நடவடிக்கைகளுக்கு உலக அளவில் கடும் எதிர்ப்பும் கண்டனமும் நிலவுகிறது. இதனால் ரஷ்யாவிடமிருந்து கச்சா பெட்ரோலிய எண்ணெய் - இயற்கை நிலவாயு ஆகியவற்றையும் பிற உற்பத்திப் பொருட்களையும் வாங்கக் கூடாது என்று அமெரிக்கா தலைமையிலான மேற்கத்திய நாடுகள் அறிவித்தன. அந்த அறிவிப்பால் அதிகம் பாதிக்கப்பட்டது ஐரோப்பிய நாடுகள்தான். ஐரோப்பிய நாடுகள் அதிலும், கிழக்கு ஐரோப்பிய நாடுகள் இன்னமும் ரஷ்ய எண்ணெய், நிலவாயுவைத்தான் நம்பியிருக்கின்றன.

இந்திய நிலை

இந்த நிலையில் ரஷ்யாவின் தாக்குதலை ஆதரிக்காமலும் அதே சமயம் வன்மையாகக் கண்டிக்காமலும் நடுநிலை வகித்த இந்தியா, தனக்குத் தேவைப்படும் கச்சா பெட்ரோலிய எண்ணெய்யை ரஷ்யா விலை மலிவாகத் தரும்போது வாங்கிக்கொள்ள உரிமை உண்டு என்று வாதிட்டது. இதற்குக் காரணம் தடையை விதித்த நாடுகள் பலவும், இன்னமும் அப்படி வாங்கிக் கொண்டிருப்பதுதான். இந்த ஆண்டு இறுதிக்குப் பிறகு முற்றாக நிறுத்திவிட வேண்டும் என்று அவை ஐரோப்பிய நாடுகளைக் கேட்டுக் கொண்டிருப்பதே, அதுவரை வாங்கலாம் என்று அனுமதிப்பதாகும். இதனால் இந்தியாவை வெளிப்படையாகக் கண்டிக்க முடியாத மேற்கத்திய நாடுகள், இந்தியாவைத் தங்கள் பக்கம் ஈர்க்க வேறு ராஜதந்திர முயற்சிகளில் ஈடுபட்டுள்ளன.

ரஷ்யாவை ஒரேயடியாகப் பகைத்துக்கொள்ள விரும்பாத இந்தியா, இந்தச் சூழலில் புதிய உத்தியைக் கையாண்டது. அதுவே இந்தியத் தனியார் எண்ணெய் சுத்திகரிப்பு நிறுவனங்கள் லாபம் ஈட்ட நல்ல வாய்ப்பாக அமைந்துவிட்டது. ரஷ்யாவிடம் எண்ணெய் வாங்கும் இந்திய தனியார் எண்ணெய் சுத்திகரிப்பு நிலையங்கள் அவற்றை இந்தியாவில் விற்பதைவிட வேறு வெளிநாடுகளுக்கே அதிகம் விற்கின்றன. சர்வதேசச் சந்தையில் எண்ணெய் விலை எக்கச்சக்கமாக உயர்ந்துவிட்டதால் இந்தியத் தனியார் எண்ணெய் நிறுவனங்களுக்குக் கொள்ளை லாபம் கிடைக்கிறது. அந்த எண்ணெயையும்கூட அவை பெரும்பாலும் ஐரோப்பிய நாடுகளுக்கே விற்கின்றன. எனவே லாபம் உடனடியாகக் கைக்குக் கிடைத்துவிடுகிறது.

இந்திய அரசுத் துறை எண்ணெய் நிறுவனங்கள், எண்ணெய் கொள்முதல் தொடர்பாக சவுதி அரேபியா, குவைத், கத்தார் உள்பட பல நாடுகளுடன் ஏற்கெனவே நீண்ட கால ஒப்பந்தம் செய்துகொண்டுள்ளன. எனவே அவற்றை மீற முடியாமல் அவற்றிடமே வாங்குகின்றன. அந்த விலை சர்வதேச சந்தை விலை என்பதால் அவை அதிகம் பணம் கொடுத்து வாங்கி, அரசின் கட்டுப்பாட்டுக்கேற்ப விற்கிறது. அந்த விலையும்கூட இந்திய நுகர்வோருக்கு அதிகமாகவே இருக்கிறது. இந்தியாவால் எண்ணெய் வாங்கவாவது முடிகிறது. பல நாடுகள் அன்னியச் செலாவணி கையிருப்பு போதாமல் பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு ஆகியவற்றின் விநியோகத்தைத் தொடர முடியாமல் திணறுகின்றன. இந்திய அரசுத் துறை நிறுவனங்களும் ரஷ்யாவின் கச்சா பெட்ரோலிய எண்ணெயை சர்வதேசத் தரகர்கள் மூலம் வாங்குகின்றன. ஆனால் அவை வாங்கும் அளவு மிக மிகக் குறைவு. எனவே அவற்றால் லாபம் சம்பாதிக்க முடியவில்லை. பிற நாடுகளிடமிருந்து வாங்கி, கட்டுப்பட்ட விலைக்கு விற்பதால் ஏற்படும் இழப்பை ஈடுகட்டக்கூட இது உதவவில்லை.

625 லட்சம் பீப்பாய்

பிப்ரவரி 24-க்குப் பிறகு இதுவரையில் ரஷ்யாவிடமிருந்து இந்தியா 625 லட்சம் பீப்பாய் கச்சா பெட்ரோலிய எண்ணெய் வாங்கியிருக்கிறது. கடந்த ஆண்டு இதே காலத்தில் வாங்கியதைவிட இது மூன்று மடங்கு அதிகம். இதில் சரிபாதிக்கும் மேல் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ், நயாரா எனர்ஜி நிறுவனங்கள் வாங்கியவை. அரசுத் துறை நிறுவனங்கள் அதிக விலை கொடுத்து வாங்குவதால் அவற்றால் வெளிநாடுகளுக்கு லாபத்துக்கு ஏற்றுமதி செய்ய முடியவில்லை. அந்த இடத்தை இந்திய தனியார் எண்ணெய் சுத்திகரிப்பு நிறுவனங்கள் நிரப்புகின்றன. இதனால் ரஷ்யாவுக்கும் கச்சா எண்ணெய் விற்பனையாகிறது, இந்தியாவிடம் வாங்கிய வெளிநாடுகளுக்கும் எண்ணெய் கிடைக்கிறது. அரசுத் துறை நிறுவனங்களுக்கு எண்ணெய் ஏற்றுமதியால் ஏற்படக்கூடிய இழப்பு குறைகிறது, தனியார் நிறுவனங்கள் லாபம் ஈட்ட முடிகிறது. அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள், ‘ரஷ்யாவிடம் எண்ணெய் வாங்குவது சரியா?’ என்று இந்திய அரசிடம் கேட்கும்போது, ‘என்ன செய்வது! சர்வதேசச் சந்தையில் தனியார் விற்கிறார்கள் – வாங்குகிறார்கள், எங்கள் தேவைக்காக மிகக் குறைந்த அளவுக்கே வாங்குகிறோம், மாற்று இடத்திலிருந்து எண்ணெய் கிடைத்தால் ரஷ்யாவிடம் வாங்குவதை நிறுத்திவிடுவோம்’ என்று சொல்லிச் சமாளிக்கிறது.

இந்தியச் சந்தையில், தங்களுடைய மொத்த உற்பத்தியில் 10 சதவீதம் அளவுக்கு பெட்ரோலிய எண்ணெய் விற்றுக்கொண்டிருந்த தனியார் எண்ணெய் சுத்திகரிப்பு நிறுவனங்கள் அதை இப்போது 7 சதவீதமாகக் குறைத்துக்கொண்டுள்ளன. அதாவது 3 சதவீத எண்ணெய்யைத்தான் ஐரோப்பிய நாடுகளுக்கு ஏற்றுமதி செய்கின்றன, அதுவே அவற்றுக்கு இப்போது லாபம் பெற்றுத்தருகிறது.

அரசு நிறுவனங்களுக்கு இழப்பு

அரசுத் துறை எண்ணெய் நிறுவனங்கள் உள்நாட்டில் பெட்ரோல் – டீசல் விற்பனையில் லிட்டருக்கு 20 ரூபாய், காசோலின் விற்பனையில் லிட்டருக்கு 17 ரூபாய் இழப்பைச் சந்திப்பதாக அரசுத் துறை எண்ணெய் நிறுவன அதிகாரி தெரிவிக்கிறார். தனியார் நிறுவனங்களோ கச்சா எண்ணெய் வாங்கி சுத்திகரித்து ஏற்றுமதி செய்வதன் மூலம் ஒரு பீப்பாய்க்கு 30 அமெரிக்க டாலர்கள் வீதம் லாபம் சம்பாதிக்கின்றன. இதனால் பங்குச் சந்தையில் ஊக வியாபாரிகள் அரசின் ஐஓசி நிறுவனப் பங்குகளுடைய மதிப்பைக் குறைத்துவிட்டனர். ‘ஐஓசி உள்ளிட்ட இந்திய அரசு நிறுவனப் பங்குகளை வாங்க வேண்டாம், அதற்குப் பதிலாக ரிலையன்ஸ் உள்ளிட்ட தனியார் நிறுவனப் பங்குகளை வாங்குங்கள்’ என்று ஆலோசனைகளை அளித்து வருகின்றனர்.

உக்ரைன் மீது ரஷ்ய நடவடிக்கை தொடங்கியபோது இந்திய எண்ணெய் நிறுவனங்களிடமும் வியாபாரிகளிடமும் போதிய கையிருப்பு இருந்தது. சர்வதேசச் சந்தையில் விலை அதிகரித்ததால், ஏற்கெனவே குறைந்த விலையில் வாங்கியிருந்த சரக்கைப் புதிய விலைக்கு விற்று அனைவரும் லாபம் சம்பாதித்தனர். இப்போது கச்சா பெட்ரோலிய எண்ணெய் விலையும் உயர்ந்துவிட்டது, கையிருப்பும் வற்றிவிட்டது. ஒன்றிய அரசும் கூடுதல் உற்பத்தி வரியைக் குறைத்துவிட்டதால் விற்பனை விலை குறைந்துவிட்டது.

இந்த விலையின் அடிப்படையில்தான் வியாபாரிகளுக்குக் கமிஷன் தரப்படுகிறது. எனவேதான் கமிஷனை உயர்த்தித்தரக் கோரி சில்லறை பெட்ரோல் – டீசல் வியாபாரிகள் அரசிடம் வற்புறுத்துகின்றனர். அரசுத் துறை எண்ணெய் நிறுவனங்களே லாபம் ஈட்டாதபோது அரசாலும் உதவ முடியவில்லை. கமிஷனுக்காக விற்பனை விலையை உயர்த்தினால், நுகர்வோர் ஆதரவை இழக்க நேரும். ஏற்கெனவே விலை உயர்வு குறித்த பிரச்சினை அரசியல் ஆகிவிட்டதால் ஒன்றிய அரசு கூடுதல் உற்பத்தி வரியை முடிந்தவரை இப்போது குறைத்திருக்கிறது.

தனி நபர்களுக்கும் நிறுவனங்களுக்கும் நாடுகளுக்கும் இது மிகவும் சோதனையான காலம். ஆனால் எண்ணெய் சுத்திகரிப்பு நிலையங்கள் அதிலும் தனியார் நிறுவனங்கள் மட்டும் லாபம் ஈட்டுகின்றன. அந்த வாய்ப்பும் இந்திய அரசுத் துறை நிறுவனங்களுக்குக் கிடைக்கவில்லை என்பதுதான் இதில் கவனிக்கப்பட வேண்டியது.

x