லெஸ்பியன் ஜோடி சேர்ந்து வாழ தடையில்லை: கேரள உயர் நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு


லெஸ்பியன் (தன் பாலின உறவாளர்கள்) ஜோடி சேர்ந்து வாழ கேரள உயர்நீதிமன்றம் அனுமதி வழங்கி உத்தரவிட்டுள்ளது.

கேரளாவைச் சேர்ந்தவர்கள் ஆதிலா நஸ்ரின், பாத்திமா நூரா. இருவரும் சவூதி அரேபியாவில் மாணவிகளாக இருந்தபோது சந்தித்துள்ளனர். இருவரும் காதலிக்கத் தொடங்கிய பின்னர் பட்டப்படிப்பு முடித்ததும் ஒன்றாக வாழ முடிவு செய்தனர். இந்த உறவுக்கு பெற்றோர்கள், உறவினர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். அண்மையில், ஆதிலாவுடன் இருந்த பாத்திமா நூராவை அவரது உறவினர்கள் தங்கள் வீட்டிற்கு இழுத்துச் சென்றதாக கூறப்படுகிறது.

இந்நிலையில், தனது துணைவியார் பாத்திமாவை தன்னுடன் சேர்த்து வைக்கக் கோரி கேரள உயர் நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனு ஒன்றை தாக்கல் செய்தார் ஆதிலா நஸ்ரின். அதில், தனது துணைவியார் பாத்திமா கடத்தப்பட்டு இருப்பதாகவும், அவரை கண்டுபிடிக்க இயலவில்லை என்றும் தானும், தனது துணைவியார் பாத்திமா நூராவும் அவர்களது குடும்பத்தினரால் உடல் ரீதியாகவும் மன ரீதியாகவும் சித்ரவதை செய்யப்பட்டதாகவும் குறிப்பிட்டு இருந்தார்.

இந்த மனுவை விசாரித்த கேரள உயர் நீதிமன்றம், பாத்திமா நூராவை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த கேரள காவல் துறைக்கு உத்தரவிட்டதோடு, ஆதிலா நஸ்ரினும் நீதிமன்றத்தில் ஆஜராக ஆணை பிறப்பித்தது. இந்த மனு உயர் நீதிமன்றத்தில் நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது, பாத்திமா நூரா மற்றும் ஆதிலா நஸ்ரின் இருவரது வாதங்களையும் கேட்ட நீதிபதி வினோத் சந்திரன் தலைமையிலான அமர்வு, இருவரும் ஒன்றாக இணைந்து வாழ்வதற்கு தடை இல்லை என்று வழக்கை முடித்து வைத்தது. உயர் நீதிமன்றத்தின் இந்த தீர்ப்பால் பெற்றோர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

x