எஸ்.ஐக்கு 25 ஆயிரம் அபராதம்… மனித உரிமை ஆணைய உத்தரவுக்கு இடைக்காலத் தடை !


வழக்குப் பதிவு செய்யாததற்காக சார்பு ஆய்வாளருக்கு ரூ.25 ஆயிரம் அபராதம் விதித்து மாநில மனித உரிமை ஆணையம் பிறப்பித்த உத்தரவுக்கு உயர் நீதிமன்ற மதுரை கிளை இடைக்காலத் தடை விதித்துள்ளது.

கரூர் டவுன் காவல் நிலைய சார்பு ஆய்வாளர் ஜி.நாகராஜன். இவர் வாங்கல் காவல் நிலையத்தில் பணிபுரிந்தார். அப்போது சமூக வலைதளங்களில் அவதூறு பரப்பியதாக வழக்கறிஞர் கனகராஜ் மீது மாதவன் என்பவர் புகார் அளித்தார். விசாரணைக்கு பின் இந்த புகாரில் உண்மை இல்லை என்று கூறி வழக்கு முடிக்கப்பட்டது.

இந்த நிலையில், மாநில மனித உரிமை ஆணையத்துக்கு மாதவன் புகார் அளித்தார். அதனை விசாரித்த மனித உரிமை ஆணையம், சார்பு ஆய்வாளர் நாகராஜனுக்கு ரூ.25 ஆயிரம் அபராதம் விதித்தது.

இதை ரத்து செய்யக்கோரி உயர் நீதிமன்றம் மதுரை கிளையில் நாகராஜன் மனு தாக்கல் செய்தார். இதனை நீதிபதிகள் சுரேஷ்குமார், விஜயகுமார் ஆகியோர் விசாரித்தனர். பின்னர், அவர்கள் கூறுகையில், " புகார் தொடர்பாக விசாரிக்கப்பட்டு குற்றம் நடந்திருப்பதற்கான முகாந்திரம் இருந்தால் வழக்குப் பதிவு செய்யப்படும். அப்படியும் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யாவிட்டால் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளரிடம் முறையிடலாம். நீதித்துறை நடுவர் மன்றத்தில் வழக்குத் தொடரலாம். இவற்றைச் செய்யாமல் புகார்தாரர், முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யாதது மனித உரிமை மீறல் என்று நேரடியாக மனித உரிமை ஆணையம் சென்றுள்ளார். இதை ஏற்க முடியாது. மனுதாரருக்கு அபராதம் விதித்து மாநில மனித உரிமை ஆணையம் பிறப்பித்த உத்தரவுக்கு இடைக்காலத் தடை விதிக்கப்படுகிறது. இந்த மனு தொடர்பாக மாநில மனித உரிமை ஆணைய பதிவாளர். 4 வாரத்தில் பதிலளிக்க வேண்டும்" என நீதிபதிகள் இன்று உத்தரவிட்டனர்.

x