‘அது வெறும் அரசியல் வம்பு’ - பாஜகவில் சேர்வதாக வந்த தகவல்களை மறுத்த ஆனந்த் சர்மா


ஆனந்த் சர்மா

தனக்கு மாநிலங்களவை சீட் கிடைக்காததால் பாஜகவில் இணையவிருப்பதாக வெளியான தகவல்களை மறுத்திருக்கும் காங்கிரஸ் மூத்த தலைவர் ஆனந்த் சர்மா, அது அரசியல் வம்புத் தகவல் என்று கூறியிருக்கிறார்.

குலாம் நபி, கபில் சிபல், ஆனந்த் சர்மா போன்றோர் சோனியா காந்தியின் நம்பிக்கைக்குரிய தலைவர்களாகப் பார்க்கப்பட்டவர்கள். ஆனால், 2014 மக்களவைத் தேர்தல் தோல்விக்குப் பின்னர் காங்கிரஸ் கட்சிக்குக் கிடைத்த தோல்விகள், கட்சித் தலைமையில் இருந்த சுணக்கம் ஆகியவற்றால் கட்சிக்குள் பல குழப்பங்கள் ஏற்பட்டன. அதிருப்தியடைந்த 23 தலைவர்கள், இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் ஒரு குழுவாக ஒன்றிணைந்து காங்கிரஸ் இடைக்காலத் தலைவர் சோனியா காந்திக்குப் பகிரங்க கடிதம் எழுதி பரபரப்பை ஏற்படுத்தினர். கட்சிக்கு நிரந்தரத் தலைவர் தேர்ந்தெடுக்கப்பட வேண்டும், உட்கட்சித் தேர்தல் நடத்த வேண்டும் என வலியுறுத்திய அந்தத் தலைவர்கள் ஜி23 குழுவினர் என்று அழைக்கப்பட்டனர்.

அவர்களில் ஆனந்த் சர்மா முக்கியமானவர். தொடர்ந்து பல்வேறு சந்தர்ப்பங்களில் காங்கிரஸ் தலைமைக்கு எதிராக அவர் கருத்து தெரிவித்துவந்தார். ஜி23 குழு தொடர்பாகப் பேசியிருந்த கபில் சிபல், கட்சித் தலைமைக்கு ‘ஜீ ஹுஜூர்!’ (ஆமாம் சாமி!) சொல்பவர்கள் அல்ல அக்குழுவினர் என்று கூறியது பெரும் சர்ச்சையானது. அவரது வீட்டைக் காங்கிரஸ் தொண்டர்களே தாக்கினர். அந்தச் சம்பவத்தைக் கட்சித் தலைமை கண்டிக்காததை ஆனந்த் சர்மா விமர்சித்திருந்தார். அதேபோல மேற்கு வங்க சட்டப்பேரவைத் தேர்தலில் மதசார்பற்ற முன்னணி (ஐஎஸ்எஃப்) எனும் கட்சியுடன் கூட்டணி அமைத்ததற்காக காங்கிரஸ் தலைமையை ஆனந்த் சர்மா கடுமையாக விமர்சித்தார். “வகுப்புவாத கட்சியான ஐஎஸ்எஃபுடன் கூட்டணி அமைத்தது காங்கிரஸின் மையச் சித்தாந்தத்துக்கு எதிரானது” என்று அவர் கண்டனம் தெரிவித்திருந்தார்.

பட்டியலில் பெயர் இல்லை

தற்போது காங்கிரஸ் சார்பில் மாநிலங்களவைத் தேர்தலில் போட்டியிடுபவர்களின் பட்டியலில் ஆனந்த் சர்மாவின் பெயர் இடம்பெறவில்லை. ஜி23 குழுவின் பிரதானத் தலைவரான குலாம் நபி ஆசாத் நாடாளுமன்றத்திலிருந்து ஓய்வு பெற்றுவிட்டதால் அவரது பெயரும் பட்டியலில் இடம்பெறவில்லை.

இதற்கிடையே, காங்கிரஸ் தலைமை மீது அதிருப்தியில் இருக்கும் ஆனந்த் சர்மா, பாஜகவின் தேசியத் தலைவர் ஜே.பி.நட்டாவைச் சந்தித்து அக்கட்சியில் இணையவிருக்கிறார் என்று செய்திகள் வெளியாகின. இந்நிலையில், அந்தத் தகவலை அவர் மறுத்திருக்கிறார்.

பாஜகவில் சேர்ந்தவர்கள்

காங்கிரஸ் கட்சி தொடர்ந்து பல முக்கியத் தலைவர்களை இழந்துவருகிறது. ஜோதிராதித்ய சிந்தியா, ஜிதின் பிரசாதா, ஆர்பிஎன் சிங், அஷ்வனி குமார், சுனில் ஜாக்கர், ஹர்திக் படேல், கபில் சிபல் எனப் பல முக்கியத் தலைவர்கள் காங்கிரஸிலிருந்து வெளியேறிவிட்டார்கள். பெரும்பாலானோர் பாஜகவில் ஐக்கியமாகிவிட்டார்கள். ஹர்திக் படேல் பாஜகவில் சேர்வது உறுதியாகிவிட்டது. கபில் சிபல் சமாஜ்வாதி கட்சியின் ஆதரவில் சுயேச்சையாக மாநிலங்களவைத் தேர்தலில் போட்டியிடுவது குறிப்பிடத்தக்கது.

x