விருதுநகர் பொதுப்பணித்துறை அலுவலகத்தில் பணிபுரிந்து வரும் உதவியாளர் மீது தொடர்ந்து தீண்டாமை வன்கொடுமை புரிந்ததாக 6 பேர் மீது காவல் துறையினர் பிசிஆர் சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
விருதுநகர் பொதுப்பணித்துறை செயற்பொறியாளர் அலுவலகத்தில் உதவியாளராக பணியாற்றுபவர் முன்னாள் ராணுவ வீரரான மாரியப்பன். அதே அலுவலகத்தில் கண்காணிப்பாளராக பணிபுரிந்து வரும் இளங்கோவன், மாரியப்பன் தண்ணீர் குடிக்கச் சென்ற போது, சாதியைச் சொல்லித் திட்டியதோடு குவளையை பறித்துக் கொண்டதாக கூறப்படுகிறது.
மேலும், அங்கு பணிபுரியும் கதிரேசன் மூலம் தேநீரில் விஷம் கலந்து கொடுத்து கொன்று விடுவதாகவும், சைகை மூலம் கொலை மிரட்டல் விட்டதாகவும், கண்காணிப்பாளர் இளங்கோவனின் தூண்டுதலின் பேரில் அங்கு பணிபுரிந்து வரும் கணேஷ் முனியராஜ் மற்றும் ராஜேஷ் ஆகியோர் மாரியப்பன், இயற்கை உபாதையை கழிக்கச் செல்ல முடியாதபடி கழிவறையை பூட்டிக் கொண்டதோடு, பட்டியல் இனத்தவர் இந்தக் கழிப்பறையைப் பயன்படுத்தக் கூடாது என மிரட்டியதாகவும் கூறப்படுகிறது.
அதே அலுவலகத்தில் பணியாற்றும் முத்துமுருகானந்தம், மாரியப்பனை அலுவலகக் கணிப்பொறியை பயன்படுத்த விடாமல் தடுத்ததோடு, பட்டியல் இனத்தைச் சேர்ந்தவர் தொடும் கணிப்பொறியை நாங்கள் எப்படி தொடுவது என்று சொன்னதாக தெரிகிறது. மேலும், கணக்கு அதிகாரியான தர்மேந்திரா யாதவ், இந்தியில் சாதியைச் சொல்லி திட்டியதோடு, 'உத்தர பிரதேசமா இருந்தா, உன்னைப் போன்றவர்களை வேலைக்கு வைத்திருக்க மாட்டோம், அடித்து விரட்டிவிடுவோம்’ என அவமானப்படுத்தியதாக கூறப்படுகிறது.
இதனால், மனவேதனைக்குள்ளான உதவியாளர் மாரியப்பன் இதுகுறித்து, விருதுநகர் மேற்கு காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில், விசாரணை நடத்திய காவல் துறையினர் பொதுப்பணித்துறையின் கணக்கு அதிகாரி, கண்காணிப்பாளர் உட்பட 6 பேர் மீதும் வன்கொடுமை சட்டத்தின் (பிசிஆர்) கீழ் வழக்கு பதிவு செய்துள்ளனர்.