கடந்த 2021-2022-ம் நிதியாண்டில் 2 ஆயிரம் ரூபாய் கள்ளநோட்டுக்கள் 54 சதவீதம் அதிகரித்துள்ளதாக ரிசர்வ் வங்கி அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளது.
இதுகுறித்து, ரிசர்வ் வங்கி தனது ஆண்டறிக்கையில் கூறுகையில், "கடந்த 2021-2022-ம் நிதியாண்டில் வங்கிகளால் கண்டறியப்பட்ட 500 ரூபாய் கள்ள நோட்டுகளின் எண்ணிக்கை 79,669ஆக இருந்தது. இது 2020-2021-ம் நிதியாண்டில் கண்டறியப்பட்ட கள்ள நோட்டுகளின் எண்ணிக்கையைக் காட்டிலும் இருமடங்கு அதிகமாகும். அதேபோல, ரூ. 2 ஆயிரம் கள்ள நோட்டுகளின் புழக்கமும் 54.6 சதவீதம் உயர்ந்து 13,604 என்ற எண்ணிக்கையில் இருந்தது.
2020-2021-ம் நிதியாண்டில் கள்ள நோட்டுகளின் புழக்கம் குறைந்திருந்தது. இந்நிலையில், மீண்டும் அதன் புழக்கம் அதிகரித்துள்ளது. அதன்படி, கடந்த நிதியாண்டில் வங்கிகளால் கண்டறியப்பட்ட ஒட்டுமொத்த கள்ள நோட்டுகளின் எண்ணிக்கையானது 2,08,625-ல் இருந்து 2,30,971ஆக அதிகரித்துள்ளது.
இதில் 500 ரூபாய் நோட்டுகள் 102 சதவீதமும், 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகள் 54 சதவீதமும், 10 ரூபாய் நோட்டுகள் 16.4 சதவீதமும், 200 ரூபாய் கள்ள நோட்டுகள் 11.7 சதவீதமும் அதிகரித்துள்ளது" என்று ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.