கேரள மாநிலம் காசர்கோடு மாவட்டத்தில் உள்ள கக்கட் புதிய வீடு பகுதியில் பிரசித்தி பெற்ற விஷ்ணு மூர்த்தி ஆலயம் உள்ளது. எழுநூறு ஆண்டுகள் பாரம்பர்யமிக்க இந்த ஆலயம், மணியாணி சமூகத்தினரால் நிர்வகிக்கப்பட்டு வருகிறது. இந்த ஆலயத்தில் இதுவரை பட்டியல் இனமக்களும், மாற்று மதத்தினரும் அனுமதிக்கப்படவில்லை. இந்நிலையில் ஆலய நிர்வாகிகள் ஆண்டாண்டு காலமாக நிலவிவந்த இந்தக் கட்டுப்பாடுகளை விலக்கி சமூகநீதி, மதங்களைக் கடந்த நேசப்பார்வைக்கும் முன்னுதாரணம் ஆகியுள்ளனர்.
பாரம்பர்யமிக்க விஷ்ணுமூர்த்தி ஆலயத்தில் பிரசித்திபெற்ற மூன்றுநாள் திருவிழா நடைபெற்றது. இந்த ஆலயத் திருவிழா நிகழாண்டில் சமூகநீதி, மதச்சார்பின்மைக்கும் முன்னுதாரணமாக மாறியுள்ளது. இதுகுறித்து ஆலய கமிட்டியின் தலைவர் கோவிந்தன் கீழத் கூறுகையில், “இந்த கோயிலில் காலம், காலமாக பட்டியல் இனமக்களும், மாற்று மதத்தினரும் அனுமதிக்கப்படவில்லை. இந்தக் கோயில் நிர்வாகக் குழுவில் 270 உறுப்பினர்கள் உள்ளோம். எங்களுக்குள் இதுகுறித்துப் பேசினோம். அனைவரும் சமம் என்று அரசியலமைப்பு சட்டத்திலேயே இருக்கிறது. அதன்படி அனைத்து சமூக, மத மக்களும் அனுமதிக்கப்பட வேண்டும் என தீர்மானித்தோம். இருந்தும், காலம், காலமாக இருந்துவந்த மரபை மாற்ற மனிதர்கள் நாம் யார்? என்றக் கேள்வியும் துரத்தியது. உடனே தேவ பிரசன்னம் பார்த்தோம். இறைவனும் எங்களுக்கு அனுமதி கொடுத்தார். எங்கள் ஆலயத்தில் இந்தத் திருவிழாவில் இருந்து பட்டியல் இன மக்களை ஆலயத்திற்குள் தரிசனத்திற்கு அனுமதித்துள்ளோம். இதுபோக கிறிஸ்தவர், இஸ்லாமியர் என மாற்று மதத்தினரும் வந்திருந்து இந்துமத கலாச்சார நிகழ்வினைப் பார்வையிட்டனர். அவர்கள் எப்போது வேண்டுமானாலும் வர எங்கள் ஆலயம் திறந்தவாசலோடு காத்திருக்கிறது” என்றார்.
கேரளத்தில், காசர்கோடு மாவட்டம் மதரீதியான மோதல்கள் அதிகம் நடக்கும் பகுதிகளில் ஒன்று. அங்கே இந்து ஆலயத்தில் நடந்த இந்த மதங்களைக் கடந்த நேசம் அனைவரையும் வெகுவாக ஈர்த்துள்ளது.