தூய்மை பணியாளர்கள் வேலைநிறுத்தத்தால் 850 டன் குப்பைகள் தேக்கம்: கேள்விக்குறியான சுகாதாரம்!


தினக்கூலி தொழிலாளர்களை நிரந்தரப்படுத்த வேண்டும். நிரந்தரப் பணியாளர்களுக்கு 7-வது ஊதியக்குழு பணப்பலன்களை வழங்க வேண்டும்.கரோனா நிவாரணத்தொகை 15 ஆயிரம் வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட 28 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி மதுரை மாநகராட்சி தூய்மைப் பணியாளர்கள் காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டத்தை இன்று முதல் துவக்கியுள்ளனர். இதன் காரணமாக மதுரை நகரில் 850 டன் குப்பைகள் தேங்கியதால் மக்களின் சுகாதாரம் கேள்விக்குறியாக மாறியுள்ளது.

மதுரை மாநகராட்சியில் 4,500-க்கும் மேற்பட்ட தூய்மைப் பணியாளர்கள், 1,500-க்கும் மேற்பட்ட பொறியியல் பிரிவு பணியாளர்கள் இன்று முதல் காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டத்தைத் துவக்கியுள்ளனர். தூய்மை மற்றும் குடிநீர் பணிகளைப் புறக்கணித்து அவர்கள் போராட்டத்தின் ஈடுபட்டதால் மதுரை நகரின் குடிநீர், சுகாதாரம் உள்ளிட்டவைக் கேள்விக்குறியாக மாறியுள்ளது.

ஏற்கனவே இக்கோரிக்கைகளை வலியுறுத்தி மூன்று முறை நடத்தப்பட்ட பேச்சுவார்த்தை தோல்வியில் முடிவடைந்தது. இதன் காரணமாக இன்று முதல் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடப் போவதாக தூய்மை பணியாளர்கள் ஏற்கனவே அறிவித்திருந்தனர்.

இதன்படி பணிகளைப் புறக்கணித்து மதுரை மதுரை பெரியார் பேருந்து நிலையம் அருகே உள்ள மேலவாசல் மாநகராட்சி தொழிலாளர் குடியிருப்பு வளாகப் பகுதியில் அமர்ந்து தொழிலாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதில் ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் பங்கேறுள்ளனர். மதுரை மாநகராட்சி தொழிலாளர்கள் சங்கம், தமிழ்நாடு சுகாதார பணியாளர்கள் முன்னேற்ற சங்கம், துப்புரவு தொழிலாளர்கள் மேம்பாட்டு சங்கம் ஆகியவற்றின் சார்பில் நடைபெற்ற இப்போராட்டத்தில் தூய்மை பணியாளர்கள் 4 மணி நேரத்திற்கு ஒரு முறை வருகை பதிவேட்டில் கையெழுத்திடும் உத்தரவை கைவிட வேண்டும். விஷவாயு தாக்கி 3 தொழிலாளர்கள் உயிரிழந்ததற்கு காரணமாக அதிகாரிகளை பணி நீக்கம் செய்ய வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தலைவர்கள் பேசினர்.

x