ஒதுங்கி நின்ற லாரியில் மோதிய மினிவேன்: 6 பக்தர்கள் பலி!


சாலை ஓரத்தில் நின்ற லாரி மீது வேன் மோதியதில் 6 பக்தர்கள் உயிரிழந்தனர். 12 பேரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது.

ஆந்திர பிரதேசத்தின் பல்நாடு மாவட்டத்தில் ரென்டசிந்தலா கிராமத்தில் இருந்து ஸ்ரீசைலம் கோயிலுக்கு பக்தர்கள் மினிவேனில் நேற்று சென்றிருந்தனர். அவர்கள் வந்த மினிவேன் இன்று அதிகாலை ஓய்வுக்காக சாலையோரம் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த லாரி மீது மோதியது. இதனால் மினிவேன் தலைகுப்புறக் கவிழ்ந்தது.

இதனால் வேனில் இருந்த பக்தர்கள் அலறித் துடித்தனர். அவர்களின் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் ஓடி வந்து அவர்களைக் காப்பாற்ற முயன்றனர். ஆனால், இந்த விபத்தில் 6 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.

விபத்து குறித்து தகவல் அறிந்த குர்ஜாலா போலீஸார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து மீட்பு நடவடிக்கையில் ஈடுபட்டனர். காயமடைந்தவர்களை குர்ஜாலா அரசு மருத்துவமனை மற்றும் நரசராவ்பேட்டை மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு அனுப்பி வைத்தனர்.

குர்ஜாலா டிஎஸ்பி ஜெய்ராம் கூறுகையில், “ விபத்தில் நாராயணபுரம் ரோசம், முக்கென ரமணா, அன்னவரபு கோட்டம்மா, குறிசெட்டி ரமாதேவி, பெத்தராபு லட்சுமி நாராயணா, புலிபாடு கோட்டேஸ்வரம்மாள் ஆகியோர் உயிரிழந்துள்ளனர். மேலும் 12 பேரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது. மினி வேன் ஓட்டுநர் உறங்கியதால் வாகனத்தின் கட்டுப்பாட்டை இழந்ததால் விபத்து ஏற்பட்டதாக தெரிகிறது” என்று கூறினார்.

x