சமூக அமைப்பின் மாநாட்டில் மாநில முதல்வரைப் பாராட்டிப் பேசிய அமைச்சரை தொண்டர்கள் துரத்தி துரத்தி தண்ணீர் பாட்டில், நாற்காலிகளைக் கொண்டு தாக்கியதால் பரபரப்பு ஏற்பட்டது.
தெலங்கானாவில் உள்ள காட்சேகர் நகரில் ஒரு சமூகத்தின் மாநாடு நேற்று இரவு நடைபெற்றது. இந்த மாநாட்டில் தொழிலாளர் நலத்துறை அமைச்சர் மல்லாரெட்டி கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் முதல்வர் சந்திரசேகர ராவைப் பாராட்டி பேசினார். இதற்கு மாநாட்டில் பங்கேற்ற தொண்டர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.
அத்துடன் தண்ணீர் பாட்டில்களையும், நாற்காலிகளையும் மேடையை நோக்கி எறிய ஆரம்பித்தனர். இதனால், உடனடியாக அமைச்சர் மல்லாரெட்டியை போலீஸார் பாதுகாப்பாக அழைத்துச் சென்று குண்டு துளைக்காத காரில் ஏற்றினர்.
ஆனாலும், மாநாட்டில் பங்கேற்ற தொண்டர்கள் அமைச்சரின் காரை துரத்தி, துரத்தி தாக்கினார். இதனால் மாநாட்டில் பரபரப்பு ஏற்பட்டது. கார் வேகமாகச் சென்ற போதும் தண்ணீர் பாட்டில், நாற்காலிகளை அமைச்சரின் காரை நோக்கி தொண்டர்கள் சரமாரியாக வீசினர். இதனால் மாநாட்டு திடல் பகுதி கலவர பூமி போல காட்சி தந்தது. இந்த சம்பவம் தெலங்கானாவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.