புகையிலைக் கட்டுப்பாட்டில் சாதனை: உலக சுகாதார நிறுவனத்திடம் விருது பெறும் ஜார்க்கண்ட்


புகையிலைப் பயன்பாட்டைக் கட்டுப்படுத்துவதில் சிறப்பாகச் செயல்பட்டதாக ஜார்க்கண்ட் மாநிலத்தைப் பாராட்டி விருது வழங்குகிறது உலக சுகாதார நிறுவனம். ஜார்க்கண்ட் மாநில சுகாதாரத் துறையின் புகையிலைக் கட்டுப்பாட்டுப் பிரிவு இந்த விருதுக்குத் தேர்வுசெய்யப்பட்டிருக்கிறது.

சர்வதேசப் புகையிலை ஒழிப்பு தினமான மே 31 (செவ்வாய்க் கிழமை) அன்று டெல்லியில் நடைபெறும் நிகழ்ச்சியில் இந்த விருது வழங்கப்படும் என தேசிய புகையிலைக் கட்டுப்பாட்டுத் திட்டத்தின் (என்டிசிபி) ஜார்க்கண்ட் மாநிலத் தொடர்பு அதிகாரி லலித் ரஞ்சன் பதக் தெரிவித்தார். “இது ஜார்க்கண்ட் மாநிலத்தின் மிகச் சிறந்த சாதனை. இந்தத் திட்டத்தை அமல்படுத்துவதில் அரசியல் மற்றும் அரசு நிர்வாக ரீதியாகக் கிடைத்த ஆதரவின் மூலம்தான் இது சாத்தியமானது” என்று அவர் குறிப்பிட்டார்.

2012-ல் இந்தத் திட்டம் ஜார்க்கண்ட் மாநிலத்தில் தொடங்கப்பட்டபோது, அம்மாநிலத்தின் புகையிலைப் பயன்பாடு 51.1 சதவீதமாக இருந்தது. அதில் 48 சதவீதம் பேர் சிகரெட் அல்லாமல் நேரடியாகப் புகையிலையைப் பயன்படுத்துபவர்கள். 2018-ல் மீண்டும் இதுகுறித்த கணக்கெடுப்பு நடத்தப்பட்டபோது, ஜார்க்கண்டில் புகையிலைப் பயன்பாட்டாளர்கள் 38.9 சதவீதமாகக் குறைந்தது தெரியவந்தது. குறிப்பாக, சிகரெட் அல்லாமல் நேரடியாகப் புகையிலையைப் பயன்படுத்துபவர்கள் 35.4 சதவீதமாகக் குறைந்திருந்தது.

அதைத் தொடர்ந்து மேலும் புகையிலைப் பயன்பாட்டைக் குறைக்க தீவிர நடவடிக்கைகளை ஜார்க்கண்ட் மாநிலம் எடுத்துவருவது குறிப்பிடத்தக்கது.

x