காஷ்மீரில் நடிகையைக் கொன்ற பயங்கரவாதிகளை போலீஸார் 24 மணி நேரத்தில் சுட்டுக்கொன்றுள்ளனர்.
காஷ்மீர் மாநிலம் புத்காம் மாவட்டத்தில் ஹஷ்ரூ சதூராவைச் சேர்ந்தவர் தொலைக்காட்சி நடிகை அம்ரீன் பட்(35). இவர் மீதும், உறவினரான 10 வயது சிறுவன் மீதும் நேற்று முன்தினம் பயங்கரவாதிகள் துப்பாக்கி சூடு நடத்தினர். இதில் அம்ரீன் உயிரிழந்தார். சிறுவனுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில் குப்வாரா மாவட்டத்தின் ஜுமாகுண்ட் கிராமத்திற்குள் ஊருடுவ முயன்ற பயங்கரவாதிகளை காஷ்மீர் போலீஸார் மற்றும் பாதுகாப்பு படையினர் துப்பாக்கி சூடு நடத்தி சுட்டு கொன்றனர். இந்த மோதலில் 3 பயங்கரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டு அவர்களிடம் இருந்து ஆயுதங்கள் மற்றும் வெடிபொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
இதேபோன்று அவந்திபோரா பகுதியிலும் பயங்கரவாதிகள் மீது நேற்றிரவு துப்பாக்கி சூடு நடத்தப்பட்டது. இதில் தொலைக்காட்சி நடிகை அம்ரீன் படுகொலையில் ஈடுபட்ட 2 பயங்கரவாதிகளும் சுட்டுக் கொல்லப்பட்டனர். அவர்கள் ஷாகித் முஷ்டாக் பட், பர்ஹான் ஹபீப் என அடையாளம் தெரிந்தது. லஷ்கர் இ தொய்பா பயங்கரவாத இயக்கத்தின் தளபதி லத்தீப் உத்தரவின் பேரில் அம்ரீனை அவர்கள் சுட்டுக் கொன்றது தெரிய வந்துள்ளது. அவர்களிடம் இருந்து ஆயுதங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.