முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெற்ற விழாவில் தமிழகத்தில் ரூ.31,400 கோடி மதிப்பிலான 11 திட்டங்களை பிரதமர் மோடி தொடங்கி வைத்தார்.
தமிழகத்தில் ரூ.31,400 கோடி மதிப்பிலான பல்வேறு திட்டங்களை தொடங்கி வைக்கவும், அடிக்கல் நாட்டவும் பிரதமர் மோடி சென்னை வந்துள்ளார். விமான நிலையத்தில் ஆளுநர் ஆர்.என்.ரவி, அமைச்சர்கள் துரைமுருகன், பொன்முடி, எதிர்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி, சென்னை மேயர், தலைமைச் செயலாளர், டிஜிபி மற்றும் முக்கிய பிரமுகர்கள் வரவேற்கின்றனர். இதன் பின்னர் விமான நிலையத்தில் இருந்து ஹெலிகாப்டர் மூலம் ஐஎன்எஸ் அடையாறு என்ற கடலோர காவல் படைக்குச் சொந்தமான இறங்கு தளத்திற்கு சென்றார். அவரை முதல்வர் ஸ்டாலின் வரவேற்றார். அங்கிருந்து கார் மூலம் நேரு உள் விளையாட்டரங்கம் சென்றார் பிரதமர். அங்கு நடைபெற்ற விழாவில், ரூ.31,400 கோடி மதிப்பிலான 11 திட்டங்களை பிரதமர் மோடி நாட்டுக்கு அர்ப்பணித்து சிறப்புரையாற்றினார்.
சென்னை, நேரு உள் விளையாட்டு அரங்கில் நடைபெறும் விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமை தாங்குகிறார். அதன்படி, சென்னையில் ரூ.29,000 கோடி மதிப்பிலான 5 திட்டங்களை பிரதமர் நாட்டுக்கு அர்ப்பணித்து வைத்தார். பிரதமரின் தமிழக வருகையை முன்னிட்டு சென்னை போலீஸ் கமிஷனர் சங்கர் ஜிவால் தலைமையில் 5 கூடுதல் கமிஷனர்கள், 8 இணை கமிஷனர்கள், 29 துணை கமிஷனர்கள் மற்றும் போக்குவரத்து போலீஸார், ஆயுதப்படை, கமாண்டோ, தமிழ்நாடு சிறப்பு காவல் படையினர் என மொத்தம் 22 ஆயிரம் போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். மேலும், நிகழ்ச்சி நடைபெறும் நேரு உள் விளையாட்டு அரங்கம் முதல் பிரதமர் வரும் அடையார் ஐஎன்எஸ் மைதானம் வரை சாலை நெடுகிலும் 5 அடுக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
நேரு உள்விளையாட்டு அரங்கில் நிகழ்ச்சியை முடித்துக்கொண்டு பிரதமர் இரவு 7.05 மணிக்கு கார் மூலம் சாலை மார்க்கமாக புறப்பட்டு அடையார் ஐஎன்எஸ் கடற்படை தளத்திற்கு வந்து, பின்னர் ஹெலிகாப்டர் மூலம் 7.35 மணிக்கு சென்னை விமான நிலையம் செல்கிறார். 7.40 மணிக்கு இந்திய விமான படைக்கு சொந்தமான தனி விமானம் மூலம் டெல்லி புறப்படுகிறார். இன்று இரவு 10.25 மணிக்கு டெல்லி விமான நிலையத்தை பிரதமர் மோடி சென்றடைகிறார்.