வெங்கையா நாயுடு வாழ்க்கை ஊக்குவிப்பாக இருக்கும்: பிரதமர் நரேந்திர மோடி கருத்து


புதுடெல்லி: முன்னாள் குடியரசுத் தலைவர் வெங்கையா நாயுடுவின் வாழ்கை வரலாறு பற்றி ‘‘வெங்கையா நாயுடு - லைப் இன் சர்வீஸ்’’ என்ற தலைப்பில் ‘தி இந்து’ நாளிதழின் ஹைதராபாத் ரெசிடன்ட் எடிட்டர் நாகேஸ் குமார் புத்தகம் எழுதியுள்ளார்.

அதேபோல் ‘செலிபிரேட்டிங் பாரத் - தி மிஷன் அண்ட் மெசேஜ் ஆப் எம். வெங்கையா நாயுடு அஸ் வைஸ் பிரஸிடெண்ட் ஆப் இந்தியா’ என்ற புகைப்பட இதழை அவரது முன்னாள் உதவியாளர் ஐ.வி.சுப்பா ராவ் தொகுத்துள்ளார். மேலும் ‘‘மகாநேட்டா - லைஃப் அண்ட் ஜேர்னி ஆப் எம். வெங்கையா நாயுடு’’ என்ற புகைப்பட வாழ்க்கை வரலாறு புத்தகத்தை தெலுங்கு மொழியில் சஞ்சய்கிஷோர் தொகுத்துள்ளார்.

வெங்கையா நாயுடுவின் 75-வது பிறந்த நாள் இன்று கொண்டாப்படுகிறது. இதை முன்னிட்டு அவரது 3 வாழ்க்கை வரலாற்று புத்தகங்களை பிரதமர் மோடி நேற்று காணொலி வாயிலாக வெளியிட்டார். இதற்கான நிகழ்ச்சி ஹைதராபாத்தில் நேற்று நடைபெற்றது. இதில் பிரதமர் மோடி பங்கேற்று பேசியதாவது:

வெங்கையா நாயுடு வாழ்க்கை பயணம் 75 ஆண்டுகளை நிறைவு செய்கிறது. இந்த 75 ஆண்டு காலத்தில் அவர் மிகச் சிறந்த சாதனைகளை படைத்திருக்கிறார். இந்த 3 புத்தகங்கள் மக்களை ஊக்குவித்து, நாட்டுக்கான சேவையில் சரியான வழியை காட்டும் என நம்புகிறேன். அவர் பாஜக தேசியதலைவராக, மத்திய அமைச்சராக, குடியரசுத் துணைத் தலைவராக இருந்த காலத்தில் நான் நீண்டகாலம் அவருடன் இணைந்து பணியாற்றியிருக்கிறேன்.

இவ்வாறு பிரதமர் மோடி கூறினார்.