குளிர்பானத்தில் பல்லி... சீல் வைக்கப்பட்டது மெக்டொனால்டு: வாடிக்கையாளரின் புகாரால் அதிரடி


மெக்டொனால்டு கடையில் வாங்கிய குளிர்பானத்தில் பல்லி இறந்த நிலையில் கிடந்ததால் அந்த கடைக்கு அதிகாரிகள் சீல் வைத்துள்ளனர். வாடிக்கையாளரின் புகாரை அடுத்து அதிகாரிகள் இந்த நடவடிக்கை எடுத்துள்ளனர்.

அகமதாபாத் நகரத்தில் உள்ள மெக்டொனால்டு கடைக்கு தனது நண்பர்களுடன் சென்ற பார்கவ் ஜோஷி என்ற இளைஞர், பர்கர்கள் மற்றும் கோகோகோலாவை ஆர்டர் செய்துள்ளார். இதையடுத்து, அவர்கள் கோகோகோலாவை குடித்துக் கொண்டிருக்கும்போது பல்லி ஒன்று இறந்த நிலையில் குளிர்பானத்தில் கிடந்துள்ளது. அதைப் பார்த்து பார்கவ் அதிர்ச்சி அடைந்தார். உடனடியாக தனது செல்போனில் பல்லி குளிர்பானத்தில் மிதப்பதை வீடியோவாக பதிவேற்றினார். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானது.

இதையடுத்து, நகராட்சி நிர்வாகத்தில் பார்கவ் புகார் அளித்தார். இதைத் தொடர்ந்து மெக்டொனால்டு கடைக்கு அதிகாரிகள் சீல் வைத்தனர். இதனிடையே, மெக்டொனால்டு வெளியிட்டுள்ள அறிக்கையில், "எங்கள் வாடிக்கையாளர்களின் பாதுகாப்பு மற்றும் சுகாதாரத்தை உறுதி செய்வதில் நாங்கள் கடமைப்பட்டுள்ளோம். தரம், சேவை, தூய்மை மற்றும் மதிப்பு ஆகியவை எங்கள் வணிக நடவடிக்கைகளின் மையத்தில் உள்ளன. எங்களின் அனைத்து மெக்டொனால்டு உணவகங்களிலும் 42 கடுமையான பாதுகாப்பு மற்றும் சுகாதார நெறிமுறைகள் அமல்படுத்தப்பட்டுள்ளன.

இதில் வழக்கமான சமையலறை மற்றும் உணவகத்தை சுத்தம் செய்தல் மற்றும் சுத்தப்படுத்துதல் போன்ற கடுமையான செயல்முறைகள் அடங்கும். அகமதாபாத் கடையில் நடந்ததாகக் கூறப்படும் இந்த சம்பவத்தை நாங்கள் ஆராய்ந்து வருகிறோம். பலமுறை சரிபார்த்ததில் எந்த தவறும் இல்லை. நாங்கள் ஒரு நல்ல கார்ப்பரேட் குடிமகனாக அதிகாரிகளுடன் ஒத்துழைக்கிறோம்" என்று கூறப்பட்டுள்ளது.

x