‘ஆட்கள் வருவார்கள்... போவார்கள்’ - கபில் சிபல் விலகல் குறித்து காங்கிரஸ் பொதுச் செயலாளர் கருத்து


காங்கிரஸ் பொதுச் செயலாளர் கே.சி.வேணுகோபால்

காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவராக அறியப்பட்ட கபில் சிபல், அக்கட்சியிலிருந்து விலகிவிட்டதாக அறிவித்திருக்கிறார். சமாஜ்வாதி கட்சியின் ஆதரவில் சுயேச்சையாக மாநிலங்களவைத் தேர்தலில் போட்டியிடுவதாக அறிவித்த அவர், அக்கட்சியின் தலைவர் அகிலேஷ் யாதவின் முன்னிலையில் வேட்புமனுவையும் தாக்கல் செய்திருக்கிறார்.

காங்கிரஸ் கட்சிக்குள் சீர்திருத்தம் செய்யப்பட வேண்டும், உட்கட்சித் தேர்தல் நடத்தப்பட வேண்டும், நிரந்தரத் தலைவர் தேர்ந்தெடுக்கப்பட வேண்டும் என்று கட்சித் தலைமையை வலியுறுத்திய ஜி23 தலைவர்களில் கபில் சிபலும் ஒருவர். ஐந்து மாநிலத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி படுதோல்வியடைந்த நிலையில், சோனியா குடும்பம் பதவி விலகி, வேறு யாரேனும் தலைமைப் பொறுப்புக்கு வர வேண்டும் என வலியுறுத்தியவர். இதன் காரணமாக, சோனியா குடும்பத்தின் ஆதரவாளர்களால் கடுமையாக விமர்சிக்கப்பட்டவர். காங்கிரஸ் தொண்டர்களே அவரது வீட்டின் மீது தாக்குதல் நடத்தியிருக்கிறார்கள். இந்தக் காரணங்களால் கட்சித் தலைமை மீது கடும் அதிருப்தியில் இருந்த கபில் சிபல், மே 16-ம் தேதியே காங்கிரஸிலிருந்து விலகிவிட்டதாக இன்று அறிவித்தார்.

கபில் சிபல்

இதுகுறித்து கருத்து தெரிவித்திருக்கும் காங்கிரஸ் பொதுச் செயலாளர் கே.சி.வேணுகோபால், “இது தொடர்பாக, கட்சித் தலைவருக்கு கபில் சிபல் ஏற்கெனவே கடிதம் எழுதிவிட்டார். காங்கிரஸின் விழுமியங்களை உறுதியாக நம்புவதாகவே அந்தக் கடிதத்தில் அவர் குறிப்பிட்டிருக்கிறார். வேறொன்றும் சொல்லவில்லை. அவர் தனது நிலைப்பாட்டைத் தெரிவிக்கட்டும். அதன் பின்னர் நான் கருத்து சொல்கிறேன். அவரது ராஜினாமா கடிதம் உயர் தரமாக எழுதப்பட்டிருந்தது” என்று கூறியிருக்கிறார்.

மேலும், கூடவே, “எங்கள் கட்சிக்கு ஆட்கள் வரலாம், போகலாம். இது ஒரு பெரிய கட்சி. சிலர் கட்சியைவிட்டு விலகலாம். வேறு கட்சிகளுக்குச் செல்லலாம். கட்சியைவிட்டு விலகியவர்களை நான் குற்றம்சாட்டப்போவதில்லை. காங்கிரஸில் பரந்த அளவிலான இடம் இருக்கிறது” என்றும் அவர் குறிப்பிட்டார்.

“காங்கிரஸ் கட்சி முற்றிலுமாக மறுகட்டமைப்பு செய்யப்படும். நிறைய நெறிமுறைகள் வகுக்கப்படும். ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு பணி வழங்கப்படும்” என்று கூறிய அவர், “ஆங்காங்கே தற்காலிகமான பின்னடைவுகள் ஏற்படலாம். பிரச்சினைகளை நாங்கள் ஆராய்ந்துவருகிறோம். காங்கிரஸ் கட்சி வலுப்பெற்று சிறப்பாக முன்னேறும்” என்றார்.

அரசியல் எதிரிகளை ஒழித்துக்கட்ட சிபிஐ, உளவுத் துறை உள்ளிட்ட அனைத்து அமைப்புகளையும் பாஜக அரசு பயன்படுத்திக்கொள்வதாகக் குற்றம்சாட்டிய அவர், இவற்றையெல்லாம் கடந்துவர காங்கிரஸுக்கு வலிமை இருப்பதாகவும் குறிப்பிட்டார்.

x