பள்ளிச்சுவரில், படியில், சாலையில் சிவப்பு நிறத்தில் எழுதப்பட்ட சாரி… சாரி.. சாரி: பதறிய ஆசிரியர்கள்!


பெங்களூருவில் உள்ள தனியார் பள்ளியின் வாசல், படிகள், சுவர், சுற்றுப்புற சாலைகள் என அனைத்து இடங்களிலும் 'சாரி' (SORRY) என்ற வாசகம் சிவப்பு நிறத்தில் எழுதப்பட்டிருந்ததால் ஆசிரியர்கள், மாணவர்கள் அதிர்ச்சியடைந்தனர்.

கர்நாடகா மாநிலம் பெங்களூருவில் சாந்திதாமா என்ற தனியார் பள்ளி உள்ளது. இந்த பள்ளியின் வாசல், படிகள், சுவர், சுற்றுப்புற சாலைகள் என அனைத்திலும் 'சாரி' (SORRY) என்ற வாசகம் சிவப்பு நிறத்தில் எழுதப்பட்டிருந்தது. இதைக் கண்ட ஆசிரியர்கள், மாணவர்கள் அதிர்ச்சியடைந்தனர்.

இதுகுறித்து தகவலறிந்த போலீஸார், பள்ளியில் வந்து விசாரணை நடத்தினர். மேலும் பள்ளியிலிருந்த சிசிடிவி கேமிராவில் இருந்த காட்சிகளை ஆய்வு செய்தனர். அப்போது, டூவீலரில் டெலிவரி பாய் வேடத்தில் இரண்டு மர்மநபர்கள் பள்ளிக்கு வந்து செல்லும் காட்சிப் பதிவாகியிருந்தது. அவர்கள் யார் என்பது குறித்து போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

காதல் தோல்வியால் பள்ளி மாணவர் யாராவது இப்படி எழுதியுள்ளார்களா என்ற கோணத்திலும் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

"இந்த சம்பவம் தொடர்பாக வழக்கு எதுவும் பதிவு செய்யப்படவில்லை. ஆனால் விசாரணை நடைபெற்று வருகிறது" என்று காவல்துறை அதிகாரி சஞ்சீவ் பாட்டீல் தெரிவித்துள்ளார். பள்ளிச் சுவர் முழுவதும் 'சாரி' என்ற வாசகம் எழுதப்பட்டு இருந்த சம்பவம் பெங்களூருவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

x