மேற்கு வங்கத்தில் வீதியில் பெண்ணைத் தாக்கும் வீடியோ: திரிணமூல் அரசு மீது பாஜக, சிபிஎம் சாடல்


கொல்கத்தா: மேற்கு வங்கத்தில் பெண் ஒருவர் வீதியில் கொடூரமாக தாக்கப்படும் வீடியோ ஒன்று வெளியாகியிருப்பதைத் தொடர்ந்து மாநிலத்தின் எதிர்க்கட்சிகள் ஆளும் திரிணமூல் காங்கிரஸ் ஆட்சியை கடுமையாக சாடியுள்ளன. உத்தர் தினாஜ்புர் மாவட்டத்தின் சேப்ரா பகுதியைச் சேர்ந்த திரிணமூல் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த ஒருவர் பெண் ஒருவரை தெருவில் வைத்து தாக்கியதாக பிரதான எதிர்க்கட்சிகளான பாஜக, சிபிஎம் குற்றம்சாட்டியுள்ளன.

அந்த வீடியோவில், சுற்றியிருக்கும் மக்கள் அமைதியாக வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருக்க, ஒரு பெண்ணை ஆண் ஒருவர் கைகளில் நான்கைந்து கம்புகளை வைத்துக் கொடூரமாக தாக்குகிறார். பின்னர் அருகில் இருக்கும் ஆண் ஒருவரும் தாக்கப்படுகிறார். இருந்தும் திருப்தி அடையாத அடித்துக்கொண்டிருப்பவர் மீண்டும் அப்பெண்மைத் தாக்கி அவரது முடியைப் பிடித்து இழுத்துச் செல்கிறார்.

இந்த வீடியோவை தனது எக்ஸ் தளத்தில் பகிர்ந்துள்ள மேற்குவங்க மாநில சிபிஎம் செயலாளர் எம்டி, சலீம், "கட்டப்பஞ்சாயத்துக் கூட இல்லை. ஜேசிபி என புனைப்பெயர் கொண்ட திரிணமூல் காங்கிரஸ் கட்சியின் அதிகாரப்பூர்வ குண்டரின் அவசர விசாரணை மற்றும் தண்டனை. மம்தா பானர்ஜியின் ஆட்சியில் சோப்ரா பகுதியில் நீதி பகிரங்கமாக அழிப்பட்டுவிட்டது" என்று தெரிவித்துள்ளார்.

மேலும் அவர், வீதியில் பெண்ணைக் கொடூரமாக தாக்கும் ஜேசிபி அல்லது தாஜேமுல். தோழல் மன்சூரி அலமின் கொலையில் முக்கிய குற்றவாளி. கொலைகாரர்கள் தலைமறைவாக உள்ளனர் மேற்கு வங்கத்தில் நீதி கேலிக்குள்ளாவது தொடர்கிறது" என்று தெரிவித்திருப்பவர். இந்த வீடியோவை எடுத்தவர் அவரின் வீட்டிலிருந்து வெளியேற்றப்பட்டிருப்பதாகவும் குற்றம் சாட்டியுள்ளார்.

பாஜகவின் தகவல் தொழில்நுட்ப பிரிவுத் தலைவர் அமித் மாளவியா கூறுகையி, "மேற்குவங்கத்தில் மம்தா பானர்ஜி ஆட்சியின் அசிங்கமான முகம் இது. கொடூரமாக பெண்ணைத் தாக்குபவர் தாஜேமுல் (ஜேசிபி என அப்பகுதியில் பிரபலமானவர்). அவரது இன்ஃபா சபை மூலம் விரைவாக நீதி வழங்குவதற்கு பெயர் போனவர். சோப்ரா பகுதி எம்எல்ஏ ஹமிதுர் ரஹ்மானின் நெருக்கமானவர்.

மேற்குவங்கத்தில் சட்டம் ஒழுங்கு சீர்குலைந்து விட்டது. இந்தக் கொடூரனுக்கு எதிராக மம்தா பானர்ஜி நடவடிக்கை எடுப்பாரா அல்லது ஷேக் ஷாஜகானை பாதுகாத்தது போல பாதுகாப்பாரா?" என்று கேள்வி எழுப்பியுள்ளார்.

இந்தநிலையில் மேற்குவங்க அரசோ திரிணமூல் காங்கிரஸ் கட்சியே இந்த வீடியோ குறித்து இன்னும் பதில் அளிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.