‘கராச்சியில் இருக்கிறார் தாவூத்’ - அமலாக்கத் துறைக்குக் கிடைத்த முக்கியத் தகவல்


தாவூத் இப்ராஹிம்

மகாராஷ்டிர சிறுபான்மை நலத் துறை அமைச்சரும், தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தேசிய செய்தித் தொடர்பாளருமான நவாப் மாலிக், பிப்ரவரி 23-ல் கைதுசெய்யப்பட்டார். முன்னதாக மும்பை குண்டுவெடிப்பு வழக்கில் தேடப்படும் குற்றவாளியான தாவூத் இப்ராஹிமின் கூட்டாளிகளுக்கும் நவாப் மாலிக்குக்கும் இடையே பணப் பரிவர்த்தனைகள் நடந்ததற்கான ஆதாரங்கள் கிடைத்ததாகக் கூறிய அமலாக்கத் துறை, நவாப் மாலிக்குக்குச் சொந்தமான இடங்களில் அதிரடி சோதனை நடத்தியது.

தாவூத் இப்ராஹிமின் கூட்டாளிகளுடன் நவாப் மாலிக் நடத்தியதாகக் கூறப்பட்ட நில பேரங்கள் தொடர்பாக அவரிடம் விசாரணை நடத்திய அமலாக்கத் துறையினர், 5 மணி நேர விசாரணைக்குப் பின்னர் அவரைக் கைதுசெய்தனர். அதற்கு ஒரு வாரத்துக்கு முன்பே தாவூத் இப்ராஹிமின் சகோதரர் இக்பால் கஸ்கர் கைதுசெய்யப்பட்டார்.

இந்தச் சூழலில், தாவூத் இப்ராஹிம் தொடர்புடைய சொத்து குறித்த வழக்கில், நவாப் மாலிக் தொடர்பாக விசாரணை நடத்திவரும் அமலாக்கத் துறையினரிடம் இரண்டு பேர் சாட்சியம் அளித்திருக்கின்றனர், இதில் தாவூத் இப்ராஹிமின் இருப்பிடம் பற்றி தெரியவந்திருக்கிறது.

தாவூத் இப்ராஹிமின் சகோதரியான ஹஸீனா பர்காரின் மகனான அலிஷா பர்கார், இந்த வழக்கின் சாட்சிகளில் ஒருவர். 1986-ம் ஆண்டுவாக்கில் மும்பையில் உள்ள தம்பர்வாலா கட்டிடத்தில் தனது தாய்மாமனான தாவூத் தங்கியிருப்பார் என்று வழக்கு விசாரணையின்போது அமலாக்கத் துறையினரிடம் அவர் கூறியிருக்கிறார்.

“1986-க்குப் பிறகு அவர் கராச்சியில் இருக்கிறார் எனப் பல்வேறு வட்டாரங்கள் மூலம் கேள்விப்பட்டேன். நான் பிறப்பதற்கு முன்பே அவர் கராச்சிக்கு இடமாறிவிட்டார். நானோ எனது குடும்பத்தினரோ அவருடன் தொடர்பில் இல்லை” என்று அவர் தெரிவித்திருக்கிறார். அதேசமயம், ரம்ஜான், தீபாவளி போன்ற பண்டிகைக் காலங்களில் தாவூதின் மனைவி தனது மனைவியுடனும் சகோதரிகளுடனும் பேசுவார் என்றும் கூறியிருக்கிறார்.

“தனது ஆட்கள் மூலம் தனக்கு ஒவ்வொரு மாதமும் 10 லட்சம் ரூபாயை தாவூத் தனக்கு அனுப்புவார் என்று இக்பால் கஸ்கர் என்னிடம் கூறினார். தாவூத் இப்ராஹிமிடமிருந்து பெற்ற பணத்தை சில தடவை அவர் என்னிடம் காட்டியிருக்கிறார்” என இன்னொரு சாட்சியான காலித் உஸ்மான் ஷேக் அமலாக்கத் துறையினரிடம் கூறியிருக்கிறார்.

பாகிஸ்தானில்தான் தாவூத் இருக்கிறார் என இந்தியா தொடர்ந்து கூறிவரும் நிலையில், பாகிஸ்தான் அதை மறுத்துவருகிறது. இந்நிலையில், அமலாக்கத் துறைக்குக் கிடைத்திருக்கும் இந்தத் தகவல் முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது. இவ்வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட டைகர் மேமனும் இதுவரை தலைமறைவாக இருந்துவருவது குறிப்பிடத்தக்கது.

x