இன்று காலை, இந்தியாவின் பல்வேறு விமான நிலையங்களில் ஸ்பைஸ்ஜெட் விமானங்கள் கிளம்புவதற்குத் தாமதமானதால் பயணிகள் கடும் சிரமத்துக்குள்ளாகினர். இதுதொடர்பாக பயணிகள் வெளியிட்டிருக்கும் காணொலிகள் வைரலாகியிருக்கின்றன.
இதுதொடர்பாக ட்வீட் மூலம் விளக்கமளித்திருக்கும் ஸ்பைஸ்ஜெட் நிறுவனம், ‘எங்கள் நிறுவனத்தின் சில அமைப்புகள் மீது, நேற்று இரவு ரேன்ஸம்வேர் தாக்குதல் (பிணைத்தொகை கேட்டு நிகழ்த்தப்படும் இணைய ஊடுருவல்) நிகழ்ந்திருக்கிறது. இதன் காரணமாக விமானங்களின் புறப்பாடுகள் தாமதமாகியிருக்கின்றன’ என்று அதில் தெரிவித்திருக்கிறது.
தங்களுடைய தகவல் தொழில்நுட்பப் பிரிவு, பிரச்சினையைச் சரிசெய்துவிட்டதால் நிலைமை சீராகிவிட்டது என்றும் விமானங்கள் இயங்கத் தொடங்கிவிட்டன என்றும் ஸ்பைஸ்ஜெட் நிறுவனம் அறிக்கை வெளியிட்டிருக்கிறது. எனினும், இன்னமும் விமான நிலையங்களில் காத்திருப்பதாகவும், எப்போது விமானங்கள் கிளம்பும் என்பது குறித்து ஸ்பைஸ்ஜெட் நிறுவனம் எந்தத் தகவலையும் தெரிவிக்கவில்லை என்றும் பல பயணிகள் ட்வீட் செய்துவருகின்றனர்.