மீண்டும் மனதின் குரல்: கேரளாவின் குடை, அரக்கு காபி பற்றி பேசிய பிரதமர் மோடி!


புதுடெல்லி: பிரதமரின் மாதாந்திர வானொலி நிகழ்ச்சியான மனதின் குரல் (மன் கி பாத்) நிகழ்ச்சி இன்று மீண்டும் தொடங்கியது. அதன் 111வது நிகழ்ச்சியில் பேசிய பிரதமர் நரேந்திர மோடி, தேசிய ஜனநாயக கூட்டணியை (என்டிஏ) மீண்டும் ஆட்சியில் அமர்த்தியதற்காக தனது நன்றியினை தெரிவித்தார். அரசியலமைப்பின் மீதும், ஜனநாயக கட்டமைப்பின் மீதும் மக்கள் வைத்துள்ள அசைக்க முடியாத நம்பிக்கையை தேர்தலின் மூலம் நிரூபித்துள்ளார்கள் என்று தெரிவித்துள்ளார்.

மேலும் பாரீசில் நடைபெற இருக்கும் ஒலிம்பிக் போட்டி குறித்து பேசிய பிரதமர் மோடி, அந்த மாபெரும் நிகழ்வில் பங்கேற்கும் வீரர்களுக்கு ஆதரவளிக்குமாறு மக்களைக் கேட்டுக்கொண்டார். வீரர்களை ஊக்குவிக்கும் வண்ணம், '#cheer4Bharat'என்ற ஹேஸ்டேக்கை சமூக ஊடகங்களில் பயன்படுத்துமாறு கேட்டுக்கொண்டுள்ளார்.

கடந்த 2014ம் ஆண்டு அக்டோபர் 3ம் தேதி தொடங்கப்பட்ட மனதின் குரல் நிகழ்ச்சி, அரசின் திட்டங்களைப் பற்றி பெண்கள், இளைஞர்கள், விவசாயிகள் போன்ற பல்வேறு சமூக குழுக்களிடம் உரையாற்றும் முக்கியத் தூணாக மாறியது. இதன் கடைசி நிகழ்ச்சி கடந்த பிப்ரவரி மாதம் ஒலிபரப்பானது. இடையில், மக்களவைத் தேர்தல் காரணமாக இடைநிறுத்தி வைக்கப்பட்டது. இந்த நிகழ்ச்சி 22 இந்திய மொழிகள், 29 உள்ளூர் மொழிகள் மற்றும் பிரெஞ்சு, சீனம், இந்தோனேஷியா, திபெத், பர்மியன், பலூச்சி, அரபி, பெர்சியன், தாரி உள்ளிட்ட 11 வெளிநாட்டு மொழிகளிலும் மனதின் குரல் ஒலிபரப்பாகிறது.

வாக்களர்களுக்கு நன்றி: இன்றைய நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பேசும் போது, "மக்களவைத் தேர்தல் காரணமாக பிப்.25க்கு பின்பு நிறுத்தப்பட்ட மனதின் குரல் நிகழ்ச்சியால் தொடர்புகளை நாம் இழந்திருந்தோம். இறுதியாக பிப்ரவரியில் இருந்து நாம் அனைவரும் காத்திருந்த நான் இன்று மீண்டும் வந்துவிட்டது. மனதின் குரல் வாயிலாக மீண்டும் நான் உங்கள் மத்தியில், எனது குடும்பத்தின் மத்தியில் இருக்கிறேன். பிப்ரவரியில் மீண்டும் உங்களைச் சந்திப்பேன் என்று நான் தெரிவித்திருந்தேன். தேர்தலுக்கு பின்பு இப்போது உங்கள் முன் மனதின் குரல் மூலமாக உங்கள் முன் இருக்கிறேன்.

பருவ மழையின் வருகை உங்களிடம் மகிழ்ச்சியைக் கொண்டு வந்திருக்கும். இடையில் சில காலம் மனதின் குரல் நிறுத்தப்பட்டிருந்தாலும், அதன் ஆன்மா நாட்டில் தொடர்ந்து செயல்பட்டு வந்ததது. நாட்டிற்தாக செய்யப்படும் பணிகள், தினந்தோறும் செயல்படும் நல்ல பணிகள், தன்னலமற்ற பணிகள், சமூதாயத்தில் நேர்மறையான எண்ணங்களை ஏற்படுத்தி தங்குதடையின்றி தொடர்ந்தன.

நாட்டின் அரசியலமைப்பு மற்றும் ஜனநாயக செயல்பாடுகள் மீது அசைக்க முடியாத நம்பிக்கை வைத்திருக்கும் நாட்டு மக்களுக்கு நான் இன்று நன்றி தெரிவித்துக்கொள்கிறேன். 2024 மக்களவைத் தேர்தல் உலகிலேயே மிகப்பெரியத் தேர்தல், 65 கோடி வாக்காளர்கள் வாக்களித்த இவ்வளவு பெரியத் தேர்தல் உலகில் எந்த நாட்டிலும் இதுவரை நடைபெறவில்லை. இந்திய தேர்தல் ஆணையம் மற்றும் தேர்தல் தொடர்பான பணிகளில் இணைந்திருந்த அனைவருக்கும் எனது வாழ்த்தினைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

ஹல் திவாஸ்: ஜூன் 30, இன்று முக்கியமான நாள். நமது பழங்குடியின சகோதர சகோதரிகள் இந்த நாளை ‘ஹல் திவாஸ்’ என்று கொண்டாடுகின்றனர். அந்நிய ஆட்சியை தீரத்துடன் எதிர்த்த வீர் சித்து மற்றும் கன்ஹு ஆகியோருடன் தொடர்புடையது. அவர்கள் ஆயிரக்கணக்கான சந்தாலி வீரர்களை ஒருங்கிணைத்து பிரிட்டிஷ் ஆட்சியை எதிர்த்தனர். இது 1857 முதல் இந்திய சுதந்திரப் போருக்கு இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு 1855-ல் நடந்தது.

மரம் நடுங்கள்: அன்புக்குரிய நாட்டு மக்களே, அடுத்த மாதம் இந்தநேரம் பாரீஸ் ஒலிம்பிக் தொடங்கி இருக்கும். ஒலிம்பிக் போட்டியில் பங்குபெறும் இந்திய வீரர்களை உற்சாகப்படுத்த நீங்கள் ஆவலுடன் இருப்பீர்கள் என்று நான் நம்புகிறேன். இந்த ஆண்டு ஜூன் 5ம் தேதி உலக சுற்றுச்சூழல் தினத்தன்று, ‘அம்மாவின் பெயரில் ஒரு மரம்’(ஏக் பேட் மா கே நாம்) ஒரு சிறப்பு பிரச்சாரம் தொடங்கப்பட்டது. நான் எனது அம்மாவின் பெயரில் ஒரு மரத்தினை நட்டுள்ளேன். நாட்டுமக்கள் அனைவரும் அவர்களின் அம்மாவுடனோ அல்லது அம்மாவின் பெயரிலோ ஒரு மரத்தினை நட வேண்டும் என்று நான் வேண்டுகிறேன்.

கார்தும்பி குடைகள்: இந்திய கலாச்சாரம் உலகில் இன்று பெருமை பெற்று வரும் விதம் நாம் அனைவரும் பெருமைப்படும் வகையில் உள்ளது. இன்றைய மனதின் குரலில் நான் உங்களுக்கு நான் ஒரு சிறப்பு குடையை பற்றிச் சொல்ல விரும்புகிறேன். இந்த வகையான குடைகள் நமது கேரளாவில் தயாரிக்கப்படுகின்றன. இந்தக் குடைகள் கேரளாவின் தனித்த கலாச்சாரத்தை எடுத்துரைக்கின்றன. கேரளாவின் கலாச்சாரம் மற்றும் சடங்குகளில் குடைகள் முக்கிய பங்காற்றுகின்றன. நான் கூறுவது ‘கார்தும்பி குடைகள்’. இவை கேரளாவின் அட்டப்பாடியில் தயாரிக்கப்படுகின்றன.

இந்தக் குடைகள் கேரளாவின் பழங்குடியின சகோதரிகளால் தயாரிக்கப்படுகின்றன. நாடு முழுவதும் இன்று இக்குடைகளுக்கான தேவை அதிகரித்துள்ளது. இவை ஆன்லைனிலும் விற்கப்படுகின்றன. இந்தக் குடைகள் வத்தலக்கி கூட்டுறவு விவசாய சங்கத்தின் மேற்பார்வையில் உற்பத்திச் செய்யப்படுகின்றன. இந்தக் கூட்டுறவுச் சங்கம் நமது பெண் சக்தியால் வழிநடத்தப்படுகிறது.

ஆந்திரா அரக்கு காபி: நண்பர்களே இந்தியாவின் பல தயாரிப்புகளுக்கு உலக அளவில் அதிகமான தேவை உருவாகியுள்ளது. இந்தியாவில் உள்ள சின்னதொரு தயாரிப்பும் உலக அளவில் சென்று சேர்வது இயற்கையாகவே பெருமையான விஷயமாக உள்ளது. அப்படியான ஒரு பொருள் ஆந்திராவின் ‘அரக்கு காபி’. இவ்வாறு பிரதமர் பேசினார். மேலும் அவர், சர்வதேச யோகா தின கொண்டாட்டம், உலக அரங்கில் கொண்டாடப்படும் இந்தியத் திரைப்படங்கள் மற்றும் காடு வளர்ப்பில் சாதனை போன்ற பல்வேறு தலைப்புகள் பற்றியும் விவாதித்தார்.

x