பிரபல பாப் பாடகர் ஜஸ்டின் பீபர், அக்டோபர் 18-ல் இந்தியா வருகிறார். ‘ஜஸ்டிஸ் வேர்ல்டு டூர்’ எனும் பெயரில் உலகமெங்கும் சுற்றுப்பயணம் மேற்கொண்டிருக்கும் அவர், டெல்லி ஜவாஹர்லால் நேரு மைதானத்தில் இசை நிகழ்ச்சியை நடத்தவிருக்கிறார். அமெரிக்காவைச் சேர்ந்த ஏஇஜி பிரசன்ட்ஸ் எனும் நிறுவனமும், இந்தியாவின் ‘புக் மை ஷோ’ நிறுவனமும் இணைந்து இந்நிகழ்ச்சியை நடத்தவிருக்கின்றன.
இந்தியாவில் அவர் நடத்தவிருக்கும் இரண்டாவது இசை நிகழ்ச்சி இது. 2017-ல் மும்பையில் ‘பர்ப்பஸ் ஆஃப் தி வேர்ல்டு’ எனும் தலைப்பில் அவர் நடத்திய பிரம்மாண்டமான இசைநிகழ்ச்சியில் 40,000-க்கும் மேற்பட்ட ரசிகர்கள் கலந்துகொண்டனர்.
1994 மார்ச் 1-ல், லண்டனில் பிறந்த கனேடியரான ஜஸ்டின் பீபர், இளம் வயதில் யூடியூபில் பாடல்களைப் பதிவேற்றி குறுகிய வட்டத்தில் புகழ்பெற்றிருந்தார். 2007-ல் ஸ்கூட்டர் ப்ரவுன் எனும் இசை ஆர்வலரின் கவனத்தை ஈர்த்த ஜஸ்டின் பீபர், அதன் பின்னர் பாப் இசையுலகின் இளம் முகமாக அறியப்பட்டார். கிராமி விருது, எம்டிவி விருது என ஏராளமான விருதுகளை வென்றிருக்கும் ஜஸ்டின், ‘டைம்’, ‘ஃபோர்ப்ஸ்’ உள்ளிட்ட முக்கிய இதழ்களிலும் இடம்பிடித்தவர். யூடியூபில் அதிக சந்தாதாரர்கள் கொண்ட பாடகர், இன்ஸ்டாகிராமில் அதிகமானோரால் பின்தொடரப்படும் ஆண் என 20-க்கும் மேற்பட்ட கின்னஸ் சாதனைகளுக்கும் சொந்தக்காரர்.
இம்மாதம் தொடங்கிய தனது இசை சுற்றுப் பயணத்தின் மூலம், 30-க்கும் மேற்பட்ட நாடுகளில் 125-க்கும் மேற்பட்ட இசை நிகழ்ச்சிகளை அவர் நடத்துகிறார். வரும் மார்ச் மாதம் வரை தொடரும் இந்தப் பயணத்தில் அவரது இசை மழையில் இசை ரசிகர்கள் ரசித்துத் திளைக்கக் காத்திருக்கின்றனர்.