‘பாரத அன்னையின் புதல்வன் கேஜ்ரிவால், நான் சிப்பாய்’ - அமைச்சரை அதிரடியாக நீக்கிய ஆம் ஆத்மி முதல்வர்


பஞ்சாப் முதல்வர் பகவந்த் மான்

ஊழல் குற்றச்சாட்டின்பேரில் கைதுசெய்யப்பட்டிருக்கும் பஞ்சாப் சுகாதாரத் துறை அமைச்சர் விஜய் சிங்க்லாவை அதிரடியாகப் பதவிநீக்கம் செய்திருக்கிறார் முதல்வர் பகவந்த் மான். ஊழலுக்கு எதிரான மாதிரி அரசு எனும் அர்விந்த் கேஜ்ரிவாலின் கொள்கையின் அடிப்படையில் இந்நடவடிக்கை எடுக்கப்பட்டிருப்பதாக ஆம் ஆத்மி கட்சி தெரிவித்திருக்கிறது.

இதுகுறித்து காணொலி ஒன்றை வெளியிட்டிருக்கும் பகவந்த் மான், “ஊழலை ஒரு சதவீதம்கூட பொறுத்துக்கொள்ள முடியாது. ஏகப்பட்ட எதிர்பார்ப்புகளுடன் மக்கள் எங்களுக்கு வாக்களித்திருக்கிறார்கள். நாங்கள் அதை நிறைவேற்றிக்காட்ட வேண்டும். பாரத அன்னைக்கு அர்விந்த் கேஜ்ரிவால் போன்ற புதல்வனும், பகவந்த் மான் போன்ற சிப்பாயும் இருக்கும் வரை ஊழலுக்கு எதிரான பெரும்போர் தொடரும்” என்று அதில் கூறியிருக்கிறார். தவறிழைத்துவிட்டதாக சிங்க்லா ஒப்புக்கொண்டதாகவும் அவர் தெரிவித்திருக்கிறார். டெண்டர்களில் ஒரு சதவீதம் கமிஷன் கேட்டதாக சிங்க்லா மீது குற்றம்சாட்டப்பட்டிருக்கிறது. அவர் மீது வழக்கு பதியவும் உத்தரவிடப்பட்டிருக்கிறது.

பதவிநீக்கப்பட்ட விஜய் சிங்க்லா

இந்தியாவின் வரலாற்றில் ஊழல் குற்றச்சாட்டுக்குள்ளான அமைச்சர் ஒருவர், முதல்வரால் பதவிநீக்கம் செய்யப்படுவது இது இரண்டாவது முறை. இதற்கு முன்னர், 2015-ல் டெல்லி முதல்வர் அர்விந்த் கேஜ்ரிவால், தனது அமைச்சரவை சகாவான ஆசிம் முகமது கானை ஊழல் குற்றச்சாட்டின் பேரில் பதவிநீக்கம் செய்தார். சுற்றுச்சூழல் மற்றும் காடு, உணவு மற்றும் வழங்கல் துறை அமைச்சராக இருந்த ஆசிம் அகமது கான், கட்டுமான நிறுவனம் ஒன்றிடமிருந்து 6 லட்சம் ரூபாய் லஞ்சம் பெற்றதாகக் குற்றச்சாட்டு எழுந்த நிலையில் இந்நடவடிக்கையை கேஜ்ரிவால் எடுத்தார்.

ஊழலுக்கு எதிரான போராட்டத்தின் மூலம் உருவான ஆம் ஆத்மி கட்சியின் ஆட்சியில்தான், ஊழல் குற்றம்சாட்டப்பட்டவர்கள் மீது இத்தகைய நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

x