கர்நாடக அணையில் ஏறி சாகசம் செய்த வாலிபருக்கு நேர்ந்த துயரம்!


பெங்களூரு அருகே உள்ள சீனிவாச சாகா் அணையில் ஏற முயன்ற வாலிபர் 30 அடி உயரத்தில் இருந்து தவறி விழுந்து படுகாயம் அடைந்தாா்.

கர்நாடக மாநிலம் பெங்களூருவில் சிக்காபல்லாப்பூர் மாவட்டத்தில் சீனிவாச சாகா் அணை உள்ளது. பிரபலமான சுற்றுலாத்தலமான இந்த இணையில் தற்போது தண்ணீர் நிரம்பி வெளியேறிக் கொண்டிருக்கிறது. இந்த அணைக்கு உள்ளூர், வெளியூர் சுற்றுலாப்பயணிகள் குவிந்து வருகின்றனர். அத்துடன் அணையில் ஏறுவதற்கு மாவட்ட நிர்வாகம் தடை விதித்துள்ளது.

இந்த அணையில் இன்று குளித்துக் கொண்டிருந்த வாலிபர், திடீரென அணையில் விறு விறுவென ஏற ஆரம்பித்தார். அப்போது குளித்துக் கொண்டிருந்தவர்கள், இந்த ஆபத்தான செயலில் ஈடுபட வேண்டாம் என அந்த வாலிபரை எச்சரித்தனர்.

ஆனால், அதைப் பொருட்படுத்தாமல் அந்த வாலிபர் சாகசம் செய்யும் நோக்கத்துடன் சுமாா் 30 அடி உயரம் வரை அணையில் ஏறினார். அப்போது திடீரென அங்கிருந்து கை தவறி கீழே விழுந்தார். இதில் அந்த வாலிபர் படுகாயமடைந்தார். அங்கிருந்த சுற்றுலாப் பயணிகள் அவரை மீட்டு, சிகிச்சைக்காக பெங்களூருவில் உள்ள மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.
தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீஸார் விசாரணை நடத்தினர். மாவட்ட நிர்வாகத்தின் உத்தரவு மற்றும் கட்டுப்பாடுகளை மீறியதற்காக அந்த வாலிபர் மீது வழக்குப்பதிவு செய்தனா். அணையில் இருந்த வாலிபர் தவறி விழும் காட்சி சமூக வலைதளங்களில் தற்போது வைரலாகி வருகிறது.

x