இன்னும் எத்தனை முறை தோற்றால் தான் திருந்தும் காங்கிரஸ்?


ராஜஸ்தானின் உதய்ப்பூரில் நடந்துமுடிந்த சிந்தன் ஷிவிர் (சிந்தனைக் கூட்டம்) மாநாட்டின் மூலம் காங்கிரஸ் மீண்டும் உயிர்த்தெழுமா எனும் எதிர்பார்ப்பு எழுந்திருக்கிறது. கட்சியில் என்னென்ன மாற்றங்கள் செய்யப்பட்டிருக்கின்றன, பாஜகவை வெல்ல என்ன வியூகங்கள் வகுக்கப்பட்டிருக்கின்றன எனும் விவாதங்களும் நடக்கின்றன. இன்னும் சில மாதங்களில் தொடர் ஓட்டம் போல தேர்தல்கள் தொடங்கவிருக்கும் நிலையில், காங்கிரஸின் இம்மாநாடு முக்கியத்துவம் பெற்றிருப்பதில் வியப்பில்லை. ஆனால், மாற்றங்களுக்குத் தயாராகிவிட்டதா காங்கிரஸ்?

மாநாடுகளின் கதை

1998-ல் காங்கிரஸ் கட்சித் தலைவராக சோனியா காந்தி பொறுப்பேற்ற பின்னர் மத்திய பிரதேசத்தின் பச்மடியில் நடந்த சிந்தன் ஷிவிர் மாநாடு முக்கியத்துவம் பெற்றது. 2004 மக்களவைத் தேர்தலுக்கு முன்னதாக 2003-ல் சிம்லாவில் நடைபெற்ற சிந்தன் ஷிவிர் மாநாடு அந்தத் தேர்தலில் காங்கிரஸ் கட்சியின் வெற்றிக்கு ஒரு முக்கிய காரணியாக அமைந்தது. இவற்றுக்கெல்லாம் முன்னர், 1976-ல் ஒரு சிந்தன் ஷிவிர் மாநாடு டெல்லி பிரகதி மைதானில் நடந்தது. அதில் இந்திரா காந்தியுடன் அவரது மகன் சஞ்சய் காந்தி, அம்பிகா சோனி உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர். ‘காங்கிரஸின் எதிர்காலம்தான் இந்தியாவின் எதிர்காலம்’ என அம்மாநாட்டில் முழக்கம் முன்வைக்கப்பட்டது. ஆனால், நெருக்கடி நிலையை அமல்படுத்தி பலரை வாட்டியெடுத்த காங்கிரஸ் அரசுக்கு 1977-ல் நடந்த மக்களவைத் தேர்தலில் பரிசாகக் கிடைத்தது படுதோல்விதான்.

அதேசமயம், காங்கிரஸ் வரலாற்றில் கிடைத்த அந்தப் பேரிடிக்குப் பின்னர் கட்சியை மீட்டெடுக்கும் வலிமை இந்திரா காந்திக்கும் சஞ்சய் காந்திக்கும் இருந்தது. 1980 மக்களவைத் தேர்தலில் 353 இடங்களில் வென்று மீண்டும் ஆட்சியைக் கைப்பற்றினார் இந்திரா காந்தி. இன்றைக்கு சோனியாவுக்கும் ராகுலுக்கும் அத்தகைய வலிமை இருக்கிறதா என்பது முக்கியமான கேள்வி.

தொடரும் தோல்விகள்

2013-ல் ஜெய்ப்பூரில் நடந்த சிந்தன் ஷிவிர் மாநாட்டில்தான் ராகுல் காந்தி காங்கிரஸ் கட்சியின் துணைத் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். ஆனால், 2014-ல் காங்கிரஸ் கட்சியைத் தோற்கடித்து அரியணை ஏறிய மோடி, 2019-ல் மீண்டும் காங்கிரஸைத் தோற்கடித்ததுடன் ராகுல் காந்தி கட்சித் தலைவர் பதவியிலிருந்து வெளியேறவும் வழிவகுத்துவிட்டார். சமீபத்தில் நடந்து முடிந்த ஐந்து மாநிலத் தேர்தல்களில் பாஜகவின் அசுர வெற்றிக்குக் காரணமாக இருந்த மோடி, இன்னமும் தனக்குச் செல்வாக்கு குறையவில்லை எனக் காட்டிவிட்டார்.

வரும் ஜூலை மாதம் நடக்கவிருக்கும் குடியரசுத் தலைவர் / துணைத் தலைவர் தேர்தலில் காங்கிரஸ் எந்த அளவுக்குச் செல்வாக்கை அதிகரித்திருக்கிறது எனத் தெரியவரும். அதன் பின்னர் குஜராத், இமாசல பிரதேசம், அடுத்த ஆண்டில் கர்நாடகம், சத்தீஸ்கர், மத்திய பிரதேசம், ராஜஸ்தான், தெலங்கானா, வட கிழக்கு மாநிலங்கள் என அடுத்தடுத்து தேர்தல்கள் காத்திருக்கின்றன.

விடையில்லா கேள்விகள்

இந்த மாநாட்டில் பேசிய ராகுல் காந்தி, வேலைவாய்ப்புகளை உருவாக்காதது, பணவீக்கம் அதிகரிப்பு உள்ளிட்ட பிரச்சினைகளை முன்வைத்து ஆவேசமாகப் பேசினார். இதுவரை தான் ஊழலில் ஈடுபட்டதில்லை; பாரத மாதாவிடமிருந்து ஒரு பைசா பெற்றதில்லை, இந்தியாவின் நிறுவனங்களைச் சிதைத்ததில்லை என்றெல்லாம் உருக்கம் காட்டினார். கூடவே, மக்களைச் சென்றடைவதில் காங்கிரஸில் ஏற்பட்டிருக்கும் சுணக்கத்தையும் வெளிப்படையாக ஒப்புக்கொண்டிருக்கிறார். என்னதான் மக்களை நோக்கி ‘பாரத் ஜோடோ’ (இந்தியாவை இணைப்போம்) எனும் பெயரில் யாத்திரையைத் தொடங்குவதாக அறிவித்தாலும் அதற்கு அடிப்படையாகக் கட்சி அமைப்புகளை வலுப்படுத்த வேண்டிய வேலைகளை இன்னும் தொடங்கவில்லை. முதலில் அதற்கான தொலைநோக்குப் பார்வையே கட்சியில் யாரிடமும் இல்லை.

தற்போது கூட்டணியில் இருக்கும் அந்தந்த மாநிலக் கட்சிகளுடன் இணைந்து பயணத்தை மேற்கொண்டால்கூட ஏதேனும் பலன்கள் கிட்டும். ஆனால், ராகுலின் வார்த்தைகள் கூட்டணி விஷயத்தில் காங்கிரஸ் கட்சி ஏன் இத்தனை அலட்சியமாக இருக்கிறது என்பதை நன்றாகவே உணர்த்துகின்றன. மாநிலக் கட்சிகள், சித்தாந்தம் இல்லாதவை என்றும், சாதி அடிப்படையிலானவை என்றும் பேசிக்கொண்டிருந்தால் எப்படி மாநில அளவில் கூட்டணிகள் அமையும் என்கிறார்கள் அரசியல் பார்வையாளர்கள். 2003 ஜெய்ப்பூர் சிந்தன் ஷிவிர் மாநாட்டில் கூட்டணி தொடர்பாக எடுத்த முக்கிய முடிவு காங்கிரஸுக்குக் கைமேல் பலன் தந்தது. 14 கட்சிகளுடன் கூட்டணி அமைத்ததால்தான், 2004 தேர்தலில் வென்று 8 ஆண்டுகளுக்குப் பின்னர் ஆட்சியமைக்க முடிந்தது. இதை ராகுலும் சோனியாவும் மறந்துவிட்டார்களா எனும் கேள்வியும் எழுகிறது.

சித்தாந்தக் குழப்பம்

ஆர்எஸ்எஸ் - பாஜக சித்தாந்தம் என்பது இன்று நேற்று இருப்பதல்ல. எனவே, பாஜகவின் இந்துத்துவ சித்தாந்தத்துக்கு எதிராகக் களம் காண்பதற்கு காங்கிரஸுக்கு சித்தாந்த பலமும், அதை வெற்றிகரமாகப் பரப்பும் வியூகமும் அவசியம். சமீபகாலமாக பாஜக மக்களைப் பரவலாக சென்றடைந்திருக்கிறது என்றால் அமைப்பு ரீதியான பலம், மக்கள் மொழியில் பேசும் திறன் என ஏராளமான சாதகமான அம்சங்களை மோடி உள்ளிட்ட பாஜகவினர் உருவாக்கியிருப்பதுதான் காரணம். அதைச் செய்வதற்கான வேகமும் வியூகமும் தங்களிடம் இருக்கிறதா எனக் காங்கிரஸ் தலைமை சிந்திக்க வேண்டும்.

இளம் தலைமுறையினரைக் காங்கிரஸின் பக்கம் ஈர்ப்பது, கட்சிக்குள் இருக்கும் இளம் தலைவர்களின் வளர்ச்சிக்கு வாய்ப்பளிப்பது என இந்த மாநாட்டில் முடிவெடுக்கப்பட்டிருக்கிறது. அதற்காக, குழப்பமான நிபந்தனைகளைத் தனக்குத்தானே விதித்துக்கொண்டு அதன் மூலம் பின்னடைவை ஏன் ஏற்படுத்திக்கொள்ள வேண்டும் எனப் புரியவில்லை. 50 வயதுக்குக் குறைவான தலைவர்களுக்கு 50 சதவீதம் வாய்ப்பு எனக் கூறுவதில் என்ன தர்க்கம் இருக்க முடியும்? கட்சியில் ராகுல் காந்தி முக்கிய இடத்துக்கு வந்தது முதல், அனுபவம் வாய்ந்த மூத்த தலைவர்களுக்கு முக்கியத்துவம் குறைந்திருப்பதாக எழும் குற்றச்சாட்டுகள் இன்னமும் முகங்கொடுக்கப்படாமல் இருக்கின்றன. கூடவே, இளம் தலைவர்கள் பலர் கசப்புடன் கட்சியைவிட்டு வெளியேறிவருகிறார்கள்.

குஜராத் காங்கிரஸ் செயல் தலைவர் பொறுப்பு வகித்த ஹர்திக் படேல் கசப்புடன் இருந்தபோதே அவரைச் சமாதானப்படுத்த யாரேனும் முயன்றிருக்கலாம். உதய்ப்பூரிலிருந்து நான்கைந்து மணி நேரப் பயணத்தில் இருக்கும் அகமதாபாதுக்குச் சென்று அவரைச் சமாதானப்படுத்தி சிந்தன் ஷிவிருக்குக்கூட அழைத்திருக்கலாம். அதைப் பற்றி யாரும் சிந்திக்கவே இல்லை. விளைவாக மாநாடு முடிந்த கையோடு அவர் கட்சியிலிருந்து வெளியேறிவிட்டார். படேல் சமூகத்தில் பெரும் செல்வாக்கு மிக்க ஹர்திக்கை இழந்திருப்பது குஜராத்தில் காங்கிரஸுக்குப் பெரும் பின்னடைவு என்பதில் சந்தேகமில்லை. அதேபோல, பஞ்சாப் காங்கிரஸில் இந்து சமூகத்தைச் சேர்ந்த மூத்த தலைவரான சுனில் ஜாக்கரும், காங்கிரஸிலிருந்து வெளியேறி பாஜகவில் ஐக்கியமாகிவிட்டார்.

அரசியலில் திரைமறைவில் பேரங்கள் இல்லாமல் இருக்க முடியாது. செல்வாக்கு மிக்க தலைவர்களைத் தங்கள் பக்கம் இழுத்துக்கொள்வது அரசியலில் சாதாரணம். பாஜக அதில் தீவிரமாக இருக்கிறது. காங்கிரஸோ, இந்தக் கட்சியில் இருந்தால் அனுகூலமோ எதிர்காலமோ இல்லை என பல தலைவர்களை விரக்தியில் தள்ளியிருக்கிறது.

கடந்த சில ஆண்டுகளில் ஜோதிராதித்ய சிந்தியாவில் தொடங்கி, ஜிதின் பிரசாதா, ஆர்பிஎன் சிங் என பல இளம் தலைவர்களை காங்கிரஸ் கட்சி இழந்துவிட்டது. 2003-ல் சிம்லா சிந்தன் ஷிவிர் மாநாட்டின்போது காங்கிரஸ் கட்சி 15 மாநிலங்களில் ஆட்சியில் இருந்தது. இப்போது ராஜஸ்தான், சத்தீஸ்கர் என இரண்டே மாநிலங்களில் மட்டுமே ஆட்சியில் இருக்கிறது. இந்த மாநாடு நடக்கும் சமயத்தில் திரிபுராவில் புதிய முதல்வராகப் பொறுப்பேற்ற மாணிக் சாஹா, காங்கிரஸ் கட்சியிலிருந்து பாஜகவுக்குச் சென்றவர். அதுமட்டுமல்ல, இன்றைக்கு முதல்வராக இருக்கும் 8 பேர் காங்கிரஸிலிருந்து கசப்புடன் வெளியேறியவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

இளம் தலைவர்களுக்கு முக்கியத்துவம் தருவதாகச் சொன்னாலும், சச்சின் பைலட் போன்ற செல்வாக்கு மிக்க இளம் தலைவர்களுக்கே இந்த மாநாட்டில் உரிய அங்கீகாரம் தரப்படவில்லை. ஏற்கெனவே தலைமையுடன் மோதி, பாஜகவுக்குத் தாவத் தயாராக இருந்தவர் சச்சின். இத்தனைக்கும் மாநாடு நடந்தது சச்சின் பைலட்டின் சொந்த மாநிலத்தில். இவையெல்லாம் காங்கிரஸின் மிகப் பெரிய பலவீனங்கள்!

மாற்றம் எப்போது?

ஒரு குடும்பத்துக்கு ஒரு பதவிதான் எனும் திட்டத்தை அறிவித்திருந்தாலும், ஐந்து வருடங்களுக்குக் கட்சியில் தொடர்ந்து பணிபுரிந்தவர்களின் குடும்பங்களுக்கு அனுமதி வழங்கப்படும் என விதிவிலக்காக சலுகையை அறிவித்திருப்பது அதன் அடிப்படை நோக்கத்தையே சிதைக்கிறது. குறிப்பாக, சோனியா காந்தி குடும்பத்தினருக்கு. முன்பைப் போல கட்சித் தலைமைப் பொறுப்பில் பெயரளவுக்கு சோனியா காந்தியே நீடிக்கவிருக்கிறார். தலைவர் பதவியிலிருந்து விலகிய பின்னரும் பெரும்பாலான முடிவுகளை ராகுல் காந்தியே எடுக்கப்போகிறார். இதில் மாற்றம் ஏற்படும் என நினைத்திருந்தவர்களுக்குக் கிடைத்தது ஏமாற்றம்தான். காரணம், அறிவிக்கப்படாத தலைவராக ராகுல் எடுக்கும் எந்த நடவடிக்கையும் கட்சிக்கு எந்தப் பலனையும் அளித்துவிடவில்லை.

சோனியா குடும்பத்தினர் அல்லாத ஒருவருக்குத் தலைமைப் பொறுப்பை வழங்கி கட்சியை வழிநடத்தச் செய்யலாம் என்று முன்வைக்கப்பட்ட யோசனைகள் மறைமுகமாக அல்ல, நேரடியாகவே மறுதலிக்கப்பட்டுவிட்டன. குறிப்பாக, ஜி23 தலைவர்கள் முன்வைத்த சீர்திருத்தம் எனும் கோரிக்கை செவிசாய்க்கப்படவே இல்லை.

பேரறிவாளன் விடுதலை விவகாரத்தில் காங்கிரஸ் தலைமையின் குழப்பமான நிலைப்பாடும், அக்கட்சியின் பிற தலைவர்கள் காட்டும் எதிர்ப்புணர்வும் இதுபோன்ற விவகாரங்களைச் சாதுரியமாகக் கையாள்வதற்கான பக்குவம் அக்கட்சிக்கு இல்லை என்பதைப் பட்டவர்த்தனமாகச் சொல்கின்றன. மக்கள் பக்கம் நிற்கப்போவதாக ராகுல் காந்தி கூறியிருக்கிறார். ஆனால், மக்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளுக்குத் தீர்வு காண்பதில் கட்சித் தலைமை மட்டுமல்லாமல் காங்கிரஸ் கட்சியின் ஒட்டுமொத்த அமைப்பினரும் அதில் முனைப்பு காட்ட வேண்டும். அது ஒரு தொடர்ச்சியான செயல்பாடாக இருக்கும்போதுதான் அதன் மூலம் மக்கள் மனதில் மீண்டும் இடம்பிடிக்க முடியும்.

உண்மையில், பிரசாந்த் கிஷோர் கூறியிருப்பது போல, அர்த்தம் உள்ள எந்த முடிவும் சிந்தன் ஷிவிர் மாநாட்டில் எடுக்கப்படவில்லை. அப்படி ஏதேனும் அதிசயம் நடக்க, காங்கிரஸுக்கு இன்னும் தோல்விகள் தேவைப்படுகின்றன போலும்!

x