லடாக்கின் சியாக் ஆற்றில் திடீர் வெள்ளப்பெருக்கு: ராணுவ டாங்க் மூழ்கி 5 வீரர்கள் உயிரிழப்பு


லடாக்: ஆற்றை கடந்து செல்லும் பயிற்சியின் போது, தீடீர் வெள்ளத்தில் ராணுவ டாங்க் மூழ்கியதில் 5 வீரர்கள் உயிரிழந்தனர்.

காஷ்மீரின் கிழக்கு லடாக் பகுதியில் எல்லைப் பகுதியில் இந்தியா-சீனா ராணுவத்தினர் இடையே கடந்த 2020-ம் ஆண்டு மே மாதம் மோதல் ஏற்பட்டது. அப்போது முதல் லடாக் பகுதியில் பாதுகாப்பு பணிக்கு ராணுவ டாங்க்குகள் அதிகளவில் குவிக்கப்பட்டு வருகின்றன.

லடாக்கில் சாசர் பிரங்சா என்ற இடம் அருகே சியாக் ஆறு ஓடுகிறது. இந்த ஆற்றை டி-72 டாங்க்மூலம் கடந்து செல்லும் பயிற்சியில் நேற்று அதிகாலை 1 மணியளவில் ராணுவத்தினர் ஈடுபட்டனர். ஜேசிஓ அதிகாரி உட்பட 5 வீரர்கள் டி-72 டாங்க்கில் ஆற்றை கடந்தனர். அப்போது ஆற்றில் திடீரென வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதில் ராணுவ டாங்க் சிக்கி மூழ்கியது. ஆற்றில் நீர்வரத்து அதிகரித்ததால், மீட்பு பணி வெற்றி பெறவில்லை. டாங்க்குடன் நீரில் மூழ்கிய 5 வீரர்களும் உயிரிழந்தனர். அவர்களின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளன.

இச்சம்பவத்துக்கு லே பகுதியை தலைமையிடமாக கொண்ட ராணுவத்தின் 14-வது படைப்பிரிவு இரங்கல் தெரிவித்துள்ளது. கிழக்கு லடாக் பகுதியில் பணியமர்த்தப் பட்டிருந்த 5 வீரர்களை இந்திய ராணுவம் இழந்துள்ளது என அந்தப் படைப்பிரிவு விடுத்துள்ள செய்தியில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

இச்சம்பவத்துக்கு எக்ஸ் தளத்தில் இரங்கல் தெரிவித்துள்ள பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், “லடாக்கில் ஆற்றை கடக்கும்போது துரதிர்ஷ்டமாக 5 வீரர்கள் உயிரிழந்தது மிகவும் வருத்தம் அளிக்கிறது. அவர்கள் நாட்டுக்கு செய்த சேவையை நாம் மறக்கமாட்டோம். அவர்களின் குடும்பத்தினருக்கு எனது இரங்கல்கள்” என குறிப்பிட்டுள்ளார்

x