மர்மநபர்கள் துப்பாக்கியால் சுட்டதில் மூளைச்சாவு அடைந்த 6 வயது சிறுமியின் உடல் உறுப்புகள் தானமாக வழங்கப்பட்டதால், 5 பேர் மறுவாழ்வு பெற்றுள்ளனர்.
உத்தரப் பிரதேசம் மாநிலம் நொய்டாவைச் சேர்ந்தவர் ஹரிநாராயன். இவரது மனைவி பூனம் தேவி. இவர்களது மகள் ரோலி(6). கடந்த மாதம் 27-ம் தேதி அடையாளம் தெரியாத மர்மநபர்கள் சுட்டதில் ரோலியின் தலையில் துப்பாக்கிக்குண்டு பாய்ந்தது. இதையடுத்து அவர் டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டார்.
மூளையில் துப்பாக்கிக்குண்டு பாய்ந்ததால் ரோலி கோமா நிலைக்குச் சென்றார். அவரைக் காப்பாற்ற மருத்துவர்கள் எடுத்த அத்தனை முயற்சியும் தோல்வியடைந்தது. இதனால் ரோலி மூளைச்சாவு அடைந்தார். இதனால் மருத்துவர்கள் ரோலியின் பெற்றோரிடம் உடல் உறுப்பு தானம் குறித்து பேசினர். இதனை அவர்களும் ஏற்றுக் கொண்டனர்.
இதையடுத்து ரோலியின் கல்லீரல், சிறுநீரகங்கள், இரு கருவிழிகள், இதய ரத்தக்குழாய்கள் ஆகியவை அறுவை சிகிச்சை மூலம் எடுக்கப்பட்டு 5 பேருக்கு பொருத்தப்பட்டது. தான் இறந்த பின்னும் 5 வயது பேருக்கு மறுவாழ்வு அளித்துள்ளார் 6 வயது சிறுமி ரோலி. அவரது பெற்றோரின் மனிதாபிமான செயலுக்கு மருத்துவர்கள் நன்றியைத் தெரிவித்துள்ளனர்.