மதுவிலக்கு திருத்தச் சட்ட மசோதா முதல் அன்புமணி கொந்தளிப்பு வரை | டாப் 10 விரைவுச் செய்திகள்


> மதுவிலக்கு திருத்தச் சட்ட மசோதா தாக்கல்: தமிழக சட்டப்பேரவைக் கூட்டத் தொடரின் கடைசி நாளான சனிக்கிழமை பல்வேறு முக்கிய அறிவிப்புகளில் ஒன்றாக, கள்ளச் சாராய விற்பனைக்கு தண்டனையை கடுமையாக்கி நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மதுவிலக்கு திருத்தச் சட்ட மசோதாவை அமைச்சர் முத்துசாமி சட்டப்பேரவையில் தாக்கல் செய்தார். தமிழ்நாடு மதுவிலக்குச் சட்டம் 1937-ஐ திருத்தம் செய்யும் வகையில் இந்த மசோதா தாக்கல் செய்யப்பட்டது. கள்ளச் சாராயத்தை முற்றிலும் ஒழிக்கும் வகையில் கடுமையான தண்டனை வழங்கும் வகையில், கள்ளச் சாராயம் விற்றால் ஆயுள் தண்டனையுடன் ரூ.10 லட்சம் அபராதம் விதிக்கும் வகையில் சட்டம் கடுமையாக்கப்படுவதாக மசோதாவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

> சாத்தூர் அருகே பட்டாசு ஆலை விபத்தில் 4 பேர் உயிரிழப்பு: விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகேசனிக்கிழமை காலை பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடி விபத்தில் தொழிலாளர்கள் 4 பேர் உயிரிழந்தனர். பட்டாசு தயாரிப்பதற்கான மூலப் பொருட்களை கலவை செய்தபோது உராய்வு ஏற்பட்டு திடீரென வெடி விபத்து ஏற்பட்டது. இதில் ஆலையில் இருந்த மூன்று அறைகள் இடிந்து சேதமடைந்தன. அந்த அறைகளில் பணியாற்றிக் கொண்டிருந்த பட்டாசு தொழிலாளர்கள் 4 பேர் இடிபாடுகளில் சிக்கி உயிரிழந்தனர்.

விருதுநகர் பட்டாசு விபத்தில் உயிரிழந்தோரின் குடும்பங்களுக்கு தலா ரூ.3 லட்சம் முதல்வரின் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்கப்படும் என முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

> லடாக்கில் ஆற்றில் அடித்துச் செல்லப்பட்ட 5 வீரர்கள் பலி: லடாக் தலைநகர் லே-வில் இருந்து 148 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள பகுதி நியோமோ-சுஷுல். இங்குள்ள எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டுக்கு அருகே ராணுவ வீரர்கள் பயிற்சியில் ஈடுபட்டு வந்துள்ளனர். சனிக்கிழமை அதிகாலை 1 மணி அளவில் டேங்கர் மூலம் ஆற்றைக் கடக்கும் பயிற்சியில் அவர்கள் ஈடுபட்டுள்ளனர். அப்போது, ஆற்றில் ஏற்பட்ட திடீர் வெள்ளம் காரணமாக 5 ராணுவ வீரர்கள் ஆற்றில் அடித்துச் செல்லப்பட்டு உயிரிழந்தனர்.

இது தொடர்பாக பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், “லடாக்கில் ராணுவ டேங்க் ஆற்றைக் கடக்கும் போது ஏற்பட்ட துரதிர்ஷ்டவசமான விபத்தில் நமது துணிச்சலான ராணுவ வீரர்கள் ஐந்து பேர் உயிரிழந்தது ஆழ்ந்த வருத்தத்தை ஏற்படுத்தி உள்ளது. துணிச்சலான வீரர்கள் நமது தேசத்துக்கு அளித்த முன்மாதிரியான சேவையை நாம் ஒருபோதும் மறக்க மாட்டோம். அவர்களை இழந்து வாடும் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கல். துயரமான இந்த நேரத்தில் தேசம் அவர்களுடன் உறுதியாக நிற்கிறது” எனத் தெரிவித்துள்ளார்.

> நீட் விவகாரம்: காங். மீது மத்திய அமைச்சர் சாடல்: சண்டிகரில் செய்தியாளர்களிடம் பேசிய மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான், “நீட் தேர்வில் முறைகேடுகள் நடந்ததாகக் கூறப்படும் விவகாரம் குறித்து நாடாளுமன்றத்தில் விவாதம் நடத்த வேண்டும் என்று மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி கூறி இருக்கிறார். உண்மையில் காங்கிரஸ் விவாதத்தை விரும்பவில்லை. விவாதத்தில் இருந்து தப்பிக்கவே விரும்புகிறது. சீராக போய்க்கொண்டிருக்கும் நிறுவன கட்டமைப்பின்மீது அதிருப்தியை, குழப்பத்தை, தடையை உருவாக்குவது மட்டுமே அக்கட்சியின் நோக்கம்” என்று விமர்சித்துள்ளார்.

> எமர்ஜென்சியும், இன்றைய நிலையும் - லாலு கருத்து: “எமர்ஜென்சியில் இந்திரா காந்தி எங்களில் பலரை சிறையில் தள்ளியிருக்கலாம். ஆனால், அவர் எங்களை துன்புறுத்தவில்லை. மிசாவில் நான் 15 மாதங்கள் சிறையில் இருந்தேன். அப்போது அங்கே மோடி, நட்டா, அவர்களின் அமைச்சரவையின் இன்னும் சில சகாக்களை பார்த்தது இல்லை. 1975-ல் அமல்படுத்தப்பட்ட எமர்ஜென்சி நம் நாட்டு ஜனநாயகத்தின் மீதான களங்கம் என்பதை மறுப்பதற்கில்லை. ஆனாலும் கூட 2024-ல் எதிர்க்கட்சியை மதிக்காத அரசை நாம் மறந்துவிடக் கூடாது” என்று ராஷ்ட்ரீய ஜனதா தள தலைவரும், பிஹார் முன்னாள் முதல்வருமான லாலு பிரசாத் யாதவ் குறிப்பிட்டுள்ளார்.

> கேஜ்ரிவாலுக்கு ஜூலை 12 வரை நீதிமன்றக் காவல்: மதுபான கொள்கை முறைகேடு தொடர்பாக சிபிஐ தொடர்ந்த வழக்கில் டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவாலை ஜூலை 12 வரை நீதிமன்றக் காவலில் வைக்க டெல்லி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

> நீதித்துறையும் அரசியலும் - மம்தா கருத்து: நீதித்துறையை அரசியல் சார்பு இல்லாமல் பார்த்துக் கொள்ளுங்கள் என்று உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி சந்திரசூட் பங்கேற்ற நீதித்துறை தொடர்பான மாநாட்டில் மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி வலியுறுத்தி உள்ளார்.

> பாஜக துடைத்தெறியப்படும்: ஹேமந்த் சோரன்: ஜாமீனில் விடுதலையான ஜார்க்கண்ட் முன்னாள் முதல்வரும், ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா தலைவருமான ஹேமந்த் சோரன் ராஞ்சியில் தனது இல்லத்தில் தொண்டர்கள் மத்தியில் உரையாற்றினார். அப்போது, "எனக்கு எதிராக பாஜக சதித்திட்டம் தீட்டியது. அதன் காரணமாகவே நான் சிறை செல்ல நேர்ந்தது. வரும் சட்டப்பேரவைத் தேர்தலுக்குப் பிறகு ஜார்க்கண்ட்டில் இருந்து காவிக் கட்சி துடைத்தெறியப்படும். வரக்கூடிய சட்டப்பேரவைத் தேர்தலில், சதித் திட்டம் தீட்டியவர்களுக்கு எதிரான கிளர்ச்சி வெடிக்கும். ஜார்க்கண்ட் மக்கள் பாஜகவை விட்டுவைக்க மாட்டார்கள்” என்று பேசினார்.

> டெல்லி கனமழையில் உயிரிழப்பு அதிகரிப்பு: டெல்லியில் பெய்த கனமழை காரணமாக வசந்த் விஹார் பகுதியில் கட்டுமானப் பணியிடத்தில் சுவர் இடிந்து விழுந்த விபத்தில் சிக்கிய மூன்று தொழிலாளர்களின் உடல்கள் மீட்கப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர். இதன் காரணமாக டெல்லியில் மழை தொடர்பான சம்பவங்களால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 8 ஆக அதிகரித்துள்ளது.

> மதுவிலக்கு சாத்தியமில்லை எனில்... - அன்புமணி காட்டம்: “தமிழகத்தில் மதுவிலக்கு சாத்தியமில்லை எனில் அரசு பதவி விலக வேண்டும்” என்று பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் காட்டமாக கருத்து தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “தமிழகத்தில் முழு மதுவிலக்கை கொண்டு வருவதற்கான சூழல் இல்லை. தமிழகத்தில் மதுவிலக்கை நடைமுறைப்படுத்தினால், அண்டை மாநிலங்களிலிருந்து மது உள்ளே வருவதற்கும் வாய்ப்பு இருக்கிறது என்று மதுவிலக்குத் துறை அமைச்சர் முத்துசாமியும், ‘உழைப்பவர்களின் அசதியை போக்க அவர்களுக்கு மது தேவை. டாஸ்மாக் மதுவில் கிக் இல்லாததால் கள்ளச் சாராயத்தை நோக்கி செல்கின்றனர்” என்று நீர்வளத் துறை அமைச்சர் துரைமுருகனும் கூறியிருக்கின்றனர். அமைச்சர்களின் கருத்துகள் மிகவும் அதிர்ச்சியளிக்கின்றன. தமிழக அரசின் தோல்வியையும், இயலாமையையுமே அமைச்சரின் கருத்துகள் காட்டுகின்றன.

தமிழத்தில் சுமார் 5,000 மதுக்கடைகள் இருக்கும்போதே மாநிலம் முழுவதும் கள்ளச் சாராயம் ஆறாக ஓடிக்கொண்டு தான் இருக்கிறது. இது அரசின் தோல்வியே தவிர, இதற்கு வேறு காரணங்கள் இல்லை.

மதுவிலக்கு சாத்தியமில்லை என்றால் அரசு பதவி விலக வேண்டும். அரசு அதன் வருவாய்க்காகவும், ஆளுங்கட்சியைச் சேர்ந்தவர்கள் நடத்தும் மது ஆலைகள் செழிக்க வேண்டும் என்பதற்காகவும் மதுக்கடைகளை தெருவுக்குத் தெரு திறந்து விட்டு, உழைப்பவர்களின் அசதியைப் போக்க அவர்களுக்கு மது தேவை என்று உழைக்கும் மக்களின் மீது பழியை சுமத்துவது கண்டிக்கத்தக்கது. எனவே, தமிழகத்தில் உடனடியாக மதுவிலக்கை நடைமுறைப்படுத்த தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று அன்புமணி கூறியுள்ளார்.