‘3 வருடம்... மொத்தமாக வீணடித்துவிட்டேன்’ - காங்கிரஸை வாரும் ஹர்திக் படேல்!


கடந்த சில மாதங்களாகக் காங்கிரஸ் தலைமை மீது அதிருப்தியில் இருந்த குஜராத் காங்கிரஸின் செயல் தலைவர் ஹர்திக் படேல், நேற்று கட்சியிலிருந்தே விலகினார். ராகுல் காந்தி குறித்த கடும் விமர்சனங்கள் அடங்கிய மிக நீண்ட ராஜினாமா கடிதத்தை சோனியா காந்திக்கு அனுப்பியிருந்த அவர், தொடர்ந்து காங்கிரஸ் கட்சியைக் கடுமையாக விமர்சித்துவருகிறார்.

பாடிதார் எனப்படும் படேல் சமூகத்தினருக்கான இடஒதுக்கீடு கோரி போராட்டங்களை நடத்திய ஹர்திக் படேல், நம்பிக்கைக்குரிய இளம் தலைவராகக் கருதப்பட்டார். மத்திய – மாநில பாஜக அரசுகளுக்குக் கடும் தலைவலியாக உருவெடுத்த அவர் ஒரு கட்டத்தில் காங்கிரஸில் இணைந்தார். 2017 சட்டப்பேரவைத் தேர்தலுக்கு முன்னதாக காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்திதான் அவரைக் கட்சியில் சேர்த்தார்.

இந்தச் சூழலில், தன்னைக் கட்சியிலிருந்து நீக்க சிலர் சதிசெய்வதாக ஹர்திக் படேல் குற்றம்சாட்டத் தொடங்கினார். மாநில காங்கிரஸ் தலைமை தன்னை எந்தக் கூட்டத்துக்கும் அழைப்பதில்லை என்றும், எந்த முடிவு குறித்தும் தன்னிடம் ஆலோசிக்கப்படுவதில்லை என்றும் அவர் ஆதங்கப்பட்டார். இதுகுறித்து காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியின் கவனத்துக்குக் கொண்டு சென்றிருப்பதாகக் கூறிய அவர், இவ்விஷயத்தில் குஜராத் மாநில காங்கிரஸார் மீது கட்சித் தலைமை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்றும் தெரிவித்திருந்தார். காங்கிரஸ் தலைமையை விமர்சித்ததுடன், பாஜகவைப் புகழ்ந்துபேசியும் வந்தார்.

கசப்பு முற்றிய நிலையில், நேற்று காங்கிரஸ் கட்சியிலிருந்து அவர் விலகினார். இந்நிலையில், அகமதாபாதில் இன்று செய்தியாளர்களைச் சந்தித்த ஹர்திக் படேல், காங்கிரஸுக்குத் தொலைநோக்குப் பார்வை இல்லை என்றும், காங்கிரஸ் கட்சியினர் குஜராத்துக்கு எதிராகப் பாரபட்சம் காட்டுகின்றனர் என்றும் குற்றம்சாட்டினார். ஏசி அறையில் சிக்கன் சாண்ட்விச் கிடைக்கிறதா என்பதில்தான் காங்கிரஸ் உயர்மட்டத் தலைவர்கள் அதிக ஆர்வம் காட்டுகின்றனர் என்றும் அவர் விமர்சித்தார்.

இனி சேரப்போவது பாஜகவிலா ஆம் ஆத்மி கட்சியிலா எனும் கேள்விக்கு, “இப்போதுவரை எந்தக் கட்சியில் சேர்வது என்பது குறித்து எந்த முடிவும் எடுக்கவில்லை” என்று பதிலளித்தார்.

குடியுரிமைத் திருத்தச் சட்டம், வாராணசியின் மசூதியில் சிவலிங்கம் இருப்பதாகக் கண்டறியப்பட்ட விவகாரம் போன்றவற்றைச் சுட்டிக்காட்டிய அவர் இந்துக்கள் தொடர்பான எந்தப் பிரச்சினையிலும் காங்கிரஸ் கருத்து தெரிவிப்பதில்லை எனக் குற்றம்சாட்டினார்.

“சாதி அடிப்படையிலான அரசியலில்தான் குஜராத் காங்கிரஸ் அதிக கவனம் செலுத்துகிறது. இந்தக் கட்சியில் நான் எனது 3 வருடங்களை வீணடித்துவிட்டேன்” என்று கூறிய அவர், குஜராத்தைச் சேர்ந்த அதானி, அம்பானி போன்றோர் மீது காங்கிரஸ் கட்சியினர் பாரபட்சத்துடன் நடந்துகொள்வதாகவும் குறிப்பிட்டார். அடுத்த 20 வருடங்களுக்குக் காங்கிரஸ் கட்சியால் குஜராத்தில் வெற்றி பெறவே முடியாது என்றும் கூறினார்.

மேலும், படேல் சமூகத் தலைவர்களுக்குக் காங்கிரஸில் எந்த மதிப்பும் இல்லை என்றும் அவர் கூறியிருப்பது அக்கட்சிக்கு பின்னடைவைத் தரும் எனக் கருதப்படுகிறது.

x