மதுவிலக்கு சட்ட திருத்த மசோதா முதல் லடாக் துயரம் வரை | டாப் 10 விரைவுச் செய்திகள்


> லடாக்கில் 5 ராணுவ வீரர்கள் நீரில் மூழ்கி பலி: லடாக்கில் பயிற்சியின் ஒரு பகுதியாக ஆற்றைக் கடக்கும்போது 5 ராணுவ வீரர்கள் அடித்து செல்லப்பட்டு உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. லடாக் தலைநகர் லே-வில் இருந்து 148 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள பகுதி நியோமோ-சுஷுல். இங்குள்ள எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டுக்கு (எல்ஏசி) அருகே ராணுவ வீரர்கள் பயிற்சியில் ஈடுபட்டு வந்துள்ளனர். இன்று (ஜூன் 29) அதிகாலை 1 மணி அளவில் பயிற்சியின்போது, டேங்கர் லாரியில் ராணுவ வீரர்கள் ஆற்றைக் கடக்க முயன்றுள்ளனர். அப்போது, ஆற்றில் ஏற்பட்ட திடீர் வெள்ளம் காரணமாக 5 ராணுவ வீரர்கள் ஆற்றில் அடித்துச் செல்லப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

> ராணுவ வீரர்கள் உயிரிழப்பு - ராஜ்நாத் சிங் வருத்தம்: லடாக்கில் ராணுவ டேங்க் ஆற்றைக் கடக்கும்போது நேரிட்ட விபத்தில் சிக்கி 5 ராணுவ வீரர்கள் உயிரிழந்த சம்பவம் மிகப் பெரிய வருத்தத்தை அளித்திருப்பதாக பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள இரங்கல் பதிவில், " துணிச்சலான வீரர்கள் நமது தேசத்திற்கு அளித்த முன்மாதிரியான சேவையை நாம் ஒருபோதும் மறக்க மாட்டோம். அவர்களை இழந்து வாடும் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கல். துயரமான இந்த நேரத்தில் தேசம் அவர்களுடன் உறுதியாக நிற்கிறது” எனத் தெரிவித்துள்ளார்.

காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே வெளியிட்டுள்ள பதிவில், “இந்த துயரச் சம்பவத்தில் உயிரிழந்த ராணுவ வீரர்களின் குடும்பத்தினருக்கு எங்களது ஆழ்ந்த அனுதாபங்கள். துக்கமான இந்த நேரத்தில், நமது வீரம் மிக்க ராணுவ வீரர்களின் முன்மாதிரியான சேவைக்கு தேசம் ஒன்று சேர்ந்து வணக்கம் செலுத்துகிறது” எனக் குறிப்பிட்டுள்ளார்.

> டெல்லியில் கனமழை உயிரிழப்பு 8 ஆக அதிகரிப்பு: தலைநகரில் பெய்த கனமழை காரணமாக வசந்த் விஹார் பகுதியில் கட்டுமானப்பணியிடத்தில் சுவர் இடிந்து விழுந்த விபத்தில் சிக்கிய மூன்று தொழிலாளர்களின் உடல்கள் மீட்கப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர். இதன்மூலம் டெல்லியில் மழை தொடர்பான சம்பவங்களால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 8 ஆக அதிகரித்துள்ளது.

கட்டிட சுவர் விபத்தில் உயிரிழந்த மூன்று பேருடன், டெல்லி விமான நிலையத்தின் டெர்மினல் 1 மேற்கூரை இடிந்து விழுந்து கார் ஓட்டுநர், ரோகினி பிரேம் நகர் பகுதியில் மின்சாரம் பாய்ந்து 39 வயது ஆண் ஒருவர், நியூ உஸ்மான்பூர் மற்றும் ஷாலிமார் பாக் பகுதிகளில் தண்ணீரில் மூழ்கி 3 பேர் என எட்டுபேர் இது வரை மழை காரணமாக உயிரிழந்துள்ளனர்.

> “நீதித்துறையை அரசியல் சார்பு இல்லாமல் பார்த்துக் கொள்ளுங்கள்”: நீதித்துறையை அரசியல் சார்பு இல்லாமல் பார்த்துக் கொள்ளுங்கள் என்று உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி சந்திரசூட் பங்கேற்ற நீதித்துறை தொடர்பான மாநாட்டில் மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி வலியுறுத்தி உள்ளார். மாநாட்டில் பேசிய மம்தா பானர்ஜி, “நீதித்துறை எங்களுக்கு மிக முக்கிய கோயில். இது, கோயில், மசூதி, குருத்வாரா போன்றது. மக்களுக்கு நீதி வழங்குவதற்கான மேலான அதிகாரம் கொண்ட அமைப்பு நீதித்துறை. இந்த நீதித்துறை மக்களுடையது, மக்களுக்கானது என்று நான் நம்புகிறேன். நீதித்துறை முற்றிலும் தூய்மையாகவும், நேர்மையாகவும், புனிதமாகவும் இருக்க வேண்டும். மக்கள் அதை வணங்க வேண்டும்" என்று வலியுறுத்தினார்.

> கள்ளச் சாராயம் விற்றால் ஆயுள் தண்டனை - மசோதா தாக்கல்: கள்ளச்சாராயம் தயாரித்து, விற்றால் ஆயுள் தண்டனை வழங்கவும், ரூ.10 லட்சம் அபராதம் விதிக்கவும் வழிவகை செய்து மதுவலிக்கு சட்டத்தில் திருத்தம் கொண்டு வரும் மசோதா தமிழக சட்டப்பேரவையில் சனிக்கிழமை தாக்கல் செய்யப்பட்டது. மதுவிலக்கு திருத்தச் சட்ட மசோதாவை அமைச்சர் முத்துசாமி சட்டப்பேரவையில் தாக்கல் செய்தார். தமிழ்நாடு மதுவிலக்குச் சட்டம் 1937 ஐ திருத்தம் செய்யும் வகையில் மசோதா தாக்கல் செய்யப்பட்டது.

> சாத்தூர் அருகே பட்டாசு ஆலையில் வெடிவிபத்து, 4 பேர் உயிரிழப்பு: விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே உள்ள பந்துவார்பட்டியல் சகாதேவன் என்பவருக்குச் சொந்தமான பட்டாசு ஆலை ஒன்று இயங்கி வருகிறது. மாவட்ட வருவாய் அலுவலரின் உரிமம் பெற்று இயங்கும் இந்தப் பட்டாசு ஆலையில் 10-க்கும் மேற்பட்ட அறைகளில் பட்டாசு தயாரிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், இன்று காலை வழக்கம் போல் பட்டாசு ஆலையில் உற்பத்தி தொடங்கியது. 30-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பணிக்கு வந்திருந்தனர்.

வழக்கம்போல் பட்டாசு தயாரிப்பதற்கான மூலப் பொருட்களை கலவை செய்தபோது உராய்வு ஏற்பட்டு திடீரென வெடி விபத்து ஏற்பட்டது. இதில் மூன்று அறைகள் இடிந்து சேதமடைந்தன. அந்த அறைகளில் பணியாற்றிக் கொண்டிருந்த பட்டாசு தொழிலாளர்கள் 4 பேர் சிக்கி உயிரிழந்தனர்.

இதற்கிடையில், விருதுநகர் பட்டாசு விபத்தில் உயிரிழந்தோரின் குடும்பங்களுக்கு தலா ரூ.3 லட்சம் முதல்வரின் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்கப்படும் என முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

> ‘வன்னியர் இடஒதுக்கீட்டு விவரங்களை வெள்ளை அறிக்கையாக வெளியிடுக’: வன்னியர்களுக்கான இடஒதுக்கீட்டு புள்ளி விவரங்களை வெள்ளை அறிக்கையாக தமிழக அரசு வெளியிட வேண்டும் என சட்டப்பேரவை பாமக தலைவர் ஜி.கே.மணி வலியுறுத்தியுள்ளார். சட்டப்பேரவையில் இருந்து சனிக்கிழமை)வெளிநடப்பு செய்த பின்னர் செய்தியாளர்களிடம் பேசியபோது இதனைத் தெரிவித்தார்.

> பட்டியலின பேராசிரியைக்கு பதவி மறுப்பு: ராமதாஸ் கண்டனம்: சேலம் பெரியார் பல்கலைக்கழகத்தில் பட்டியலினத்தைச் சேர்ந்தவர் என்பதால் பேராசிரியை ஒருவருக்கு பதவி மறுக்கப்பட்டுள்ளது. எனவே இந்த சம்பவம் குறித்து விசாரணை நடத்த ஆணையிட வேண்டும் என தமிழக அரசுக்கு பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

> பொறியியல் முதலாமாண்டு மாணவர்களுக்கு செப்., கல்லூரிகள் திறப்பு: பொறியியல் படிப்புகளில் சேரும் முதலாமாண்டு மாணவர்களுக்கு செப்டம்பர் 15-ம் தேதிக்குள் வகுப்புகள் தொடங்கப்பட வேண்டும் என்று ஏஐசிடிஇ தெரிவித்துள்ளது.

> இறுதிப் போட்டியில் தென் ஆப்பிரிக்காவுடன் இன்று பலப்பரீட்சை: ஐசிசி டி 20 கிரிக்கெட் உலகக் கோப்பை தொடரின் இறுதி ஆட்டத்தில் இந்தியா - தென் ஆப்பிரிக்கா அணிகள் இன்று இரவு 8 மணிக்கு பார்டாஸில் உள்ள கென்சிங்டன் ஓவல் மைதானத்தில் மோதுகின்றன. ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணியும், எய்டன் மார்க்ரம் தலைமையிலான தென் ஆப்பிரிக்க அணியும் ஒரு தோல்வியை கூட சந்திக்காமல் இறுதிப் போட்டியில் கால்பதித்து உள்ளன.

x