கேரளத்தில் முன்கூட்டியே தொடங்கிய பருவமழையால் கடந்த சில தினங்களாகவே கனமழை பெய்துவருகிறது. இந்நிலையில் இன்று அதிகளவில் பெய்த கனமழையின் எதிரொலியாக 7 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. கேரளத்தை ஒட்டிய குமரி மாவட்டத்திலும் இன்று காலை முதலே கனமழை பெய்து வருகிறது.
கேரளத்தில் கனமழை பெய்துவரும் நிலையில் இந்திய வானிலை ஆய்வுமையம், திருச்சூர், பாலக்காடு, மலப்புரம், கோழிக்கோடு, வயநாடு, கண்ணூர், காசர்கோடு ஆகிய மாவட்டங்களுக்கு இன்று நாள் முழுவதுக்கும் ஆரஞ்சு அலர்ட் எச்சரிக்கையை சற்றுமுன் விடுத்துள்ளது. இந்த ஆரஞ்சு அலர்ட் கண்ணூர் மற்றும் காசர்கோடு மாவட்டங்களில் நாளையும் தொடரும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதேபோல் கேரள மாநில பேரிடர் ஆணையம் விடுத்துள்ள அறிக்கையில், “கேரளத்தில் இருந்து விதர்பா பகுதிவரை குறைந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி நிலவுவதால் கேரளம் முழுவதுமே அடுத்த 5 நாள்களுக்கு கனமழை பொழியும்” என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. கேரளத்தில் தென்மேற்கு பருவமழை இம்மாத இறுதியில் 27-ம் தேதி தொடங்கும் என ஏற்கெனவே கணிக்கப்பட்டிருந்த நிலையில், முன்கூட்டியே பெய்யும் கனமழையால் கேரளத்தின் இயல்புவாழ்க்கை வெகுவாகப் பாதிக்கப்பட்டுள்ளது. இதேபோல் அணையோரப் பகுதிமக்கள் எச்சரிக்கையுடன் இருக்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. இரவுநேர பயணங்களை தவிர்க்குமாறும், மலைப்பாங்கான இடங்களுக்குச் செல்லவேண்டாம் எனவும் கேரள அரசு கேட்டுக்கொண்டுள்ளது.
ஆரஞ்சு அலர்ட் என்றால் என்ன?
24 மணி நேரத்தில் அதாவது நாள் ஒன்றிற்கு 20 செ.மீட்டருக்கு மேல் மழை பெய்யும் என விடப்படும் எச்சரிக்கையே ரெட் அலர்ட் ஆகும். இதேபோல் 6 செ.மீட்டர் முதல் 20 செ.மீட்டருக்குள் மழைபெய்யும் என்பதை எச்சரிப்பதே ஆரஞ்சு அலர்ட் ஆகும். 6 முதல் 11 செ.மீட்டர் வரை மழை பெய்யும் பகுதிகளுக்கு மஞ்சள் அலர்ட் விடப்படுகிறது. கேரளத்தில் பெய்துவரும் மழையின் தாக்கம் குமரியிலும் எதிரொலிப்பதால் குமரி மாவட்டத்திலும் இன்று கனமழை பெய்து வருகிறது.