விசா முறைகேடு வழக்கில் காங்கிரஸ் எம்பி கார்த்தி சிதம்பரத்தின் ஆடிட்டர் பாஸ்கர ராமனை சிபிஐ கைது செய்துள்ளது. நேற்று சோதனை நடந்து முடிந்த நிலையில் இந்த அதிரடி நடவடிக்கையை சிபிஐ எடுத்துள்ளது.
சீனர்கள் 263 பேருக்கு சட்ட விரோதமாக இந்தியாவில் பணியாற்ற விசா பெற்றுத்தர ரூ.50 லட்சம் லஞ்சம் பெற்றதாக சிபிஐ வழக்கு புதிவு செய்து முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம், அவரது மகன் கார்த்தி சிதம்பரத்துக்கு சொந்தமான சென்னை, மும்பை, கர்நாடகா உள்பட நாடு முழுவதும் 10 இடங்களில் நேற்று ஒரே நேரத்தில் அதிரடி சோதனை நடத்தினர். சிபிஐயின் இந்த அதிரடி சோதனையின் போது, ப.சிதம்பரம் ராஜஸ்தான் மாநிலத்திலும், அவரது மகன் கார்த்தி சிதம்பரம் லண்டனிலும் இருந்ததாக கூறப்படுகிறது. சென்னை வீட்டில் ப.சிதம்பரத்தின் மனைவி நளினி சிதம்பரம் மட்டும் இருந்தார். அவரிடம் சிபிஐ அதிகாரிகள் வழக்கு தொடர்பாக கைப்பற்றப்பட்ட ஆவணங்களை வைத்து விசாரணை நடத்தினர்.
இந்நிலையில், சீனர்களுக்கு விசா வாங்கி தந்ததற்கு ரூ.50 லட்சம் பெற்ற புகாரில் கார்த்தி சிதம்பரத்தின் ஆடிட்டர் பாஸ்கர ராமனை சிபிஐ இன்று கைது செய்துள்ளது. சிபிஐயின் இந்த நடவடிக்கை சிதம்பரம் மற்றும் காங்கிரஸ் கட்சியினரை அதிர்ச்சியடைய வைத்துள்ளது.