ராஜஸ்தான் மாநிலம் உதய்ப்பூரில் நடந்து முடிந்த ‘சிந்தனை மாநாடு’ காங்கிரஸ் தொண்டர்களுக்கு மிகுந்த உற்சாகத்தைத் தந்திருக்கிறது. கட்சியின் சரிவுக்குக் காரணம் கட்சித் தொண்டர்களுடனும் மக்களுடனும் கட்சிக்கு ஏற்பட்ட விலகல்தான் என்று தலைமையே அடையாளம் கண்டு அறிவித்திருப்பதால் அவர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். இந்தக் குறையைச் சரி செய்ய கட்சியின் தேசியத் தலைமை காஷ்மீரிலிருந்து கன்னியாகுமரி வரையில் பாத யாத்திரையை நடத்தப் போகிறது என்ற செய்தி அவர்களை உற்சாகத்தின் உச்சிக்கே இட்டுச் சென்றுள்ளது. சில குடும்பங்களே கட்சியில் ஆதிக்கம் செலுத்துகின்றன என்ற விமர்சனத்தை நீக்க, குடும்பத்தில் ஒருவருக்கு மட்டுமே இனி போட்டியிட வாய்ப்பு என்ற அறிவிப்பு வெளியாகியிருக்கிறது. சமூகத்தின் அனைத்துப் பிரிவினரும் கட்சி நிர்வாகிகளாக இடம்பெறப் போகின்றனர் என்ற முடிவும் அப்படியே வரவேற்கப்பட்டுள்ளது.
அரசியல், பொருளாதார, கலாச்சாரம் தொடர்பான துணைக் குழுக்கள் தங்களுக்குள் ஆழமாக விவாதித்து பல முடிவுகளை எடுத்துள்ளன. தேர்தலைக் கட்டுக்கோப்பாக எதிர்கொள்ள வேட்பாளர் தேர்வு, தேர்தல் அறிக்கை தயாரிப்பு, தோழமைக் கட்சிகளை அடையாளம் கண்டு கூட்டணியை உருவாக்குவது போன்றவற்றில் கவனம் செலுத்த முடிவு செய்யப்பட்டிருக்கிறது. மக்களைப் பிளவுபடுத்தும் பாஜகவுக்கு தேசிய அளவில் மாற்றுக்கட்சியாக காங்கிரஸ் மட்டுமே வலுவாகச் செயல்பட முடியும் என்று ராகுல் காந்தி தயக்கம் ஏதுமின்றி அறிவித்திருக்கிறார். இதை மதச்சார்பற்ற ஜனதா தளம், ராஷ்ட்ரிய ஜனதா தளம் போன்ற மாநிலத் தோழமைக் கட்சித் தலைவர்கள் விமர்சித்திருந்தாலும் ராகுல் சொல்வது ஒரு வகையில் சரிதான். மக்கள் இப்போது நல்ல அரசியல் அனுபவம் பெற்றிருக்கிறார்கள். கடந்த மக்களவைப் பொதுத் தேர்தலில் பாரதிய ஜனதாவுக்கு அதிகத் தொகுதிகளில் வாக்களித்த மேற்கு வங்க மக்கள், அடுத்து நடைபெற்ற சட்டப் பேரவை பொதுத் தேர்தலில் திரிணமூல் காங்கிரஸையே மூன்றாம் முறையாக ஆட்சியில் அமர்த்தியுள்ளனர்.
மக்களுடைய முன்னுரிமை எது?
மக்கள் இப்போது தங்களுடைய வாழ்க்கைத் தரம் உயர வேண்டும் என்பதற்குத்தான் முன்னுரிமை அளிக்கின்றனர். இதை உறுதி செய்யும் கட்சிகளுக்கு வாக்களிக்கின்றனர். அந்தக் கட்சிகள் தேர்தலில் அறிவிக்கும் சில விலையில்லாத் திட்டங்கள், வங்கிக் கணக்கில் நேரடியாகப் பணம் செலுத்துவது ஆகியவற்றுக்காகவே வாக்களித்தனர் என்று பெரும்பாலான அரசியல் விமர்சகர்களும் தோல்வி அடையும் எதிர்க் கட்சிகளும்தான் தரக் குறைவாக விமர்சிக்கின்றனர்.
விலைவாசி உயர்வு, வேலையில்லாத் திண்டாட்டம், ஆட்சியாளர்களின் ஊழல் எல்லாம் மக்களால் பிரச்சினைகளாகப் பார்க்கப்படாமல் இல்லை. ஆனால் இவையெல்லாம் சிரஞ்சீவித்தன்மை வாய்ந்தவை. இந்தியா போன்ற மக்கள் நெருக்கம் மிகுந்த, முதலீடுகளுக்கு நிதி போதாத நாட்டில் இந்தப் பிரச்சினைகள் யார் ஆட்சிக்கு வந்தாலும் நீடிக்கும் என்பது மக்களுக்கும் தெரியும். கோவிட்-19 பெருந்தொற்று, பிறகு தொடர்ந்த உக்ரைன் – ரஷ்யா மோதல் ஆகியவற்றால் உலக அளவில் ஏற்பட்டுவரும் பாதிப்புகளை மக்கள் அறிந்துதான் வைத்திருக்கிறார்கள். சில வேளைகளில் தங்களுடைய பிரச்சினைகளைவிட தேசியப் பிரச்சினைகளுக்கு அதிக முக்கியத்துவம் தருகிறார்கள். காஷ்மீர் மாநிலத்தை இரண்டாகப் பிரித்ததையும் அதன் அந்தஸ்தைக் குறைத்ததையும் எதிர்க் கட்சிகள் கடுமையாகக் குறை கூறினாலும் மக்களைப் பொறுத்தவரை அது நெருக்கமில்லாத விஷயம். காங்கிரஸ் ஆட்சிக்காலத்திலும் காஷ்மீரில் அமைதி நிலவவில்லை.
அப்போதும் பாதுகாப்புப் படையினர் குவிக்கப்பட்டுத்தான் பொதுத் தேர்தல் உள்ளிட்டவையே நடந்தன. எனவே எது தேசப் பிரச்சினை, எது நம்முடைய பிரச்சினை என்று பிரித்துப் பார்க்கும் ஆற்றல் மக்களிடம் இருக்கிறது.
பிரச்சினைதான் பிரச்சினை!
எனவே காங்கிரஸ் கட்சி தேர்தலுக்குத் தயாராகும்போது இவற்றையும் கவனத்தில் கொள்ள வேண்டும். ஒரு மாநிலத்தில் பிரச்சினையாக இருப்பது இன்னொரு மாநிலத்தில் பிரச்சினையாகாது. நீட் பொதுத் தேர்வும் இந்தி எதிர்ப்பும் தமிழ்நாட்டில் மட்டுமே எடுபடும். ஹிஜாப்பும் ஆசானும் கர்நாடகத்தில் மட்டுமே கவனம் பெறும். மாட்டுக்கறிக்கு தடையும் கட்டுக்கடங்காத மாடுகள் வயல்களில் மேய்ந்து பயிர்களுக்கு ஏற்படுத்தும் சேதமும் உத்தரப் பிரதேசத்துக்கு மட்டுமே உரிய பிரச்சினை. வங்கதேசத்தில் வந்து குடியேறியவர்களின் உரிமைகள் பறிக்கப்படும் என்ற விவகாரம் அசாமில் பாஜகவுக்கு வெற்றியையும் மேற்கு வங்கத்தில் தோல்வியையும் தந்தது. வட கிழக்கு மாநிலங்களில் அமைக்கப்படும் தேசிய நெடுஞ்சாலைகளும் மலைப்பகுதி மேம்பாட்டுத் திட்டங்களும் மதம் கடந்த ஆதரவை பாஜக கூட்டணிக்கு வழங்கியிருக்கிறது. எந்த ராஜா எந்தப் பட்டணத்தை ஆண்டால் என்ன – எங்களுக்கு பிஜு ஜனதா தளத் தலைவர் நவீன் பட்நாயக் ராஜா ஒருவர் போதும் என்று தொடர்ந்து அவருக்கு வாக்களிக்கின்றனர் ஒடிசா மக்கள்.
பாஜக கூட்டணியை எதிர்க் கட்சிகள் எவ்வளவு கடுமையாக விமர்சித்தாலும் அதன் கட்டுக்கோப்பான கட்சி அமைப்பும் அதற்குப் பின்புலமாக இருக்கும் ஆர்எஸ்எஸ் அமைப்பும் அதன் தேர்தல் வேலைகளை முன்கூட்டியே திட்டமிட்டுச் செய்கின்றன. காங்கிரஸின் மகிளா காங்கிரஸோ இளைஞர் காங்கிரஸோ அப்படி இருக்கின்றனவா? சேவா தளம் பெயரளவிலாவது இருக்கிறதா? அதே சமயம் எல்லா மாநிலங்களிலும் ஊருக்கு 10 பேராவது காங்கிரஸை ஆதரிக்கின்றனர். காங்கிரஸ் கட்சிக்கு சோனியா, ராகுல், பிரியங்கா கூட்டுத் தலைமை அவசியம் என்பதையே உதய்ப்பூர் மாநாடும் உணர்த்தியிருக்கிறது. சோனியாவின் தலைமையைக் கேள்விகேட்ட 23 காங்கிரஸ் தலைவர்களில் இருவர் சோனியா பக்கம் வந்துவிட்டனர்.
எஞ்சிய 21 பேர் புத்திசாலிகளாகவும் கட்சிக்காக உழைத்தவர்களாகவும் இருக்கலாம். அவர்கள் அனைவரும் கோபுரத்து பொம்மைகள். காங்கிரஸ் என்ற கட்சியின் அரவணைப்பு இல்லாவிட்டால் சொந்த செல்வாக்கில் ஏதும் சாதிக்க முடியாதவர்கள். சோனியாவை எதிர்த்த சரத் பவார், ஒய்எஸ்ஆர் ஜெகன்மோகன் ரெட்டி, மம்தா பானர்ஜி ஆகியோர் தனிக்கட்சி தொடங்கி ஆட்சியைக்கூட பிடித்துவிட்டனர். அந்த 21 பேரால் அப்படி ஏதும் செய்ய முடியாது.
தோழமையில் ஏழமை
பாரதிய ஜனதா மட்டுமல்ல காங்கிரஸ் கட்சியும் தோழமைக் கட்சிகளைத் தக்க வைத்துக் கொள்வதில் திறமைசாலி இல்லை. இப்போது ஆட்சியில் இருக்கும் மகாராஷ்டிரத்திலேயே காங்கிரஸுக்கும் தேசியவாத காங்கிரஸுக்கும் இடையே உரசல்கள் அதிகரித்து வருகின்றன. கூட்டணி ஆட்சி நடத்தும் ஜார்க்கண்டில் தோழமைக் கட்சித் தலைவரான முதலமைச்சர் ஹேமந்த் சோரனின் பதவி பறிக்கப்படுமா என்ற கேள்வி பெரிதாகிக் கொண்டிருக்கிறது. சோரனின் மனைவி கல்பனாவை அடுத்து முதல்வராக்க ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா நினைக்கிறதே தவிர காங்கிரஸுக்கு மீண்டும் செல்வாக்கு ஏற்பட்டுவிடக் கூடாது என்பதில் கவனமாக இருக்கிறது. மத்தியப் பிரதேசத்தில் ஜோதிர் ஆதித்ய சிந்தியாவுக்கும் கமல்நாத்துக்கும் ஏற்பட்ட மோதல் காங்கிரஸை ஆட்சியிலிருந்து இறக்கியது. ராஜஸ்தானில் முதலமைச்சர் அசோக் கெலாட்டுக்கு சோனியா ஆதரவு இருப்பதால் புரட்சியாளர் சச்சின் பைலட் அமைதி காக்கிறார். சத்தீஸ்கட்டில் முதலமைச்சர் பூபேஷ் பகேலுக்கும் மூத்த காங்கிரஸ் தலைவர் டி.எஸ். சிங் தேவுக்குமான மோதல் வெடிக்கவில்லையே தவிர நீறுபூத்த நெருப்பாக கனிந்துகொண்டே இருக்கிறது.
உத்தர பிரதேசத்தில் சமாஜ்வாதி கட்சியுடன் கடந்த முறை கூட்டணி அமைத்தும் பேரவைத் தேர்தலில் தோல்வி கிட்டியதால் இந்த முறை காங்கிரஸைக் கூட்டணியில் சேர்க்கவே இல்லை அகிலேஷ் யாதவ். கூட்டணிக்கு அழைத்தும் வராத மாயாவதியை, ஊழல் வழக்குகளுக்காக பயந்துவிட்டார் என்று பேசி அவருடைய கோபத்தைக் கிளறிவிட்டிருக்கிறார் ராகுல். பிஹாரில் காங்கிரஸைத் தோழமைக் கட்சியாகச் சேர்த்துக்கொண்டு அவர்கள் பிடிவாதம் பிடித்ததால் அதிகத் தொகுதிகளையும் விட்டுக் கொடுத்து ஆட்சியமைக்கும் வாய்ப்பை நூலிழையில் தவறவிட்டார் ராஷ்ட்ரிய ஜனதா தளத்தின் தலைவர் தேஜஸ்வி யாதவ். கர்நாடகத்தில் மதச்சார்பற்ற ஜனதா தளத் தலைவர் எச்.டி. குமாரசாமி, இனி காங்கிரஸோடு சேரவே மாட்டோம் என்று அறிவித்திருக்கிறார்.
தமிழ்நாட்டில் திமுக வலுவான கட்சியாக இருப்பதால் காங்கிரஸ் தொடர்ந்து மாப்பிள்ளைத் தோழனாகத் தொடர முடிகிறது. அதே சமயம் மகாராஷ்டிரம், ஜார்க்கண்ட் போல தமிழக அமைச்சரவையில் இடம்பெற முடியாமல் வெளியிலேயே இருக்கிறது. இப்படி இருந்தால் கட்சி எப்படி அரசியல் செல்வாக்கு பெறும்? இந்தக் கூட்டணியால் தொடர்ந்து பலன் பெறுவது யார் என்பதை தமிழக காங்கிரஸ் தலைமை குட்டி சிந்தன் ஷிவிர் நடத்தி யோசிக்க வேண்டும். மேற்கு வங்கம், ஒடிசா மாநிலங்களில் காங்கிரஸ் கட்சியின் இருப்பே கரைந்துவிட்டது. உத்தர பிரதேசம், பிஹாரும் அப்படித்தான். சமீபத்தில் இமாசலத்தில் கட்சிக்குக் கிடைத்த வெற்றி நம்பிக்கை ஊட்டினாலும் அடுத்த பேரவைத் தேர்தலில் பாஜக இரட்டிப்பு வேகத்துடன் இழப்பை ஈடுகட்ட முயலும். எனவே காங்கிரஸ் பலமடங்கு வேகத்தில் உழைக்க வேண்டும்.
மீண்டும் கையடக்கக் குழுக்கள்
காங்கிரஸ் ஆட்சிமன்றக் குழு அமைப்பை மீண்டும் ஏற்படுத்த வேண்டும் என்ற கோரிக்கையை உதய்ப்பூர் மாநாடு நிராகரித்துவிட்டது. சிறிய அளவிலான கையடக்கக் குழுவே போதும், முக்கிய விஷயங்களை உடனுக்குடன் விவாதிக்க அதுவே ஏற்றது என்று முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்தக் குழுவில் தலைமைக்குப் பிடித்தவர்களே இடம் பெறுவார்கள். இதனால் கட்சி எடுக்க வேண்டிய முடிவுகள் தீர அலசப்படாமல், கருத்தொற்றுமையுடன் தவறாகவே எடுக்கப்படும் வாய்ப்புகள் அதிகரிக்கும். இத்தனைத் தோல்விகளுக்குப் பிறகும் கட்சி இதில் சறுக்குவது, தன்னுடைய போக்கை மாற்றிக்கொள்ளத் தலைமை தயாரில்லை என்பதையே காட்டுகிறது. கட்சியின் தலைவர் சோனியா காந்திக்கு வயதாகிவிட்டது. உடல் நலம் தளர்ந்து வருகிறது. இருபதாண்டுகள் கட்சியின் தலைவராக இருந்தாலும்கூட நாட்டின் பல்வேறு மாநிலங்களின் அரசியல் அடுக்குகள் அவருக்கு அத்துப்படியாகவில்லை. ராகுல் காந்தி வேகமும் துடிப்பும் கொண்ட இளம் தலைவராகவே தொடர்கிறார். அனுபவத்துக்கேற்ற பக்குவமும் முதிர்ச்சியும் போதவில்லை. தேசிய அளவில் பாஜகவை எதிர்கொள்ள மாநிலக் கட்சிகளிடம் சித்தாந்தம் வலுவாக இல்லை என்று மாநாட்டில் பேசியிருக்கிறார். உண்மைதான் என்றாலும் இப்படியா பகிரங்கமாகப் பேசுவது?
இவ்வளவு தூரம் நடந்த மாநாட்டில், கட்சியின் தொடர் தோல்விக்கான காரணம் தகவல் தொடர்பு துண்டிப்புதான் என்று வெகு எளிதாகக் கடந்து போகப்பட்டிருக்கிறது. அதற்குக்கூட யார் காரணம் என்று திட்டவட்டமாக விரல் நீட்டி சுட்டப்படவில்லை. கட்சிக்கு வெற்றி கிடைத்தால் அதைத் தலைமையின் காலடியில் போடுவது, தோல்வி என்றால் தங்கள் தலையில் போட்டுக் கொள்வது என்று முடிவெடுப்பது காங்கிரஸாரின் உரிமை. அது எந்த விதத்தில் மக்களிடையே கட்சிக்கு செல்வாக்கை ஏற்படுத்தும் என்று தெரியவில்லை. பாத யாத்திரைகள் முழுமையாக வெற்றி பெற தலைவர்கள் தங்களுடைய முயற்சியில் தீவிரமாக இருக்க வேண்டும். ஆந்திரத்தில் ஜெகன்மோகனின் யாத்திரை தெலங்கானாவில் கேசிஆர் யாத்திரை, உத்தர பிரதேசத்தில் யோகி ஆதித்ய நாத் யாத்திரை, மேற்கு வங்கத்தில் மம்தாவின் யாத்திரை உணர்த்தும் பாடங்களை காங்கிரஸ் படிக்க வேண்டும். ‘பாதி யாத்திரையாக’ அமைந்தால் முயற்சிகள் வீணாகிவிடும்.
பாரதிய ஜனதாவுக்கு வலுவான தேசிய மாற்று அவசியம். ராகுல் பேசியதிலும் உண்மை இருக்கிறது. மாநிலக் கட்சிகள் சரியான மாற்று தேசிய சக்திகளாகிவிட முடியாது. அடுத்த பிரதமராக யாரை ஏற்பீர்கள் என்றால் அவரவர் மாநிலத்தைத் தவிர வேறு எந்த மாநிலத்திலும் ஒரு முதலமைச்சரையும் மக்கள் சுட்டிக்காட்ட மாட்டார்கள். ஆம் ஆத்மி கட்சி இரண்டு மாநிலங்களில் மின்னினாலும் அது காக்கைப் பொன் போலத்தான். காங்கிரஸுக்கு ஈடாகாது. மாநாட்டில் எடுத்த முடிவுகளை அமல்படுத்துவதுதான் அடுத்த சவாலான வேலை.