‘காஷ்மீர் பண்டிட்களைக் காப்பாற்றுங்கள் பிரதமரே!’ - அர்விந்த் கேஜ்ரிவால் வேண்டுகோள்


காஷ்மீரின் பட்காம் மாவட்டத்தின் சதூரா நகரில் உள்ள தாலுகா அலுவலகத்தில் பணிபுரிந்துவந்த ராகுல் பட் எனும் அரசு ஊழியர், கடந்த வியாழக்கிழமை (மே 12) பயங்கரவாதிகளால் சுட்டுக்கொல்லப்பட்டார். இவர் காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசின் ஆட்சிக்காலத்தில், 2010-11-ல் புலம்பெயர்ந்தோருக்கான சிறப்பு வேலைவாய்ப்புத் திட்டத்தில் அரசுப் பணியில் சேர்ந்தவர். ராகுல் பட்டின் படுகொலையைக் கண்டித்து போராட்டம் நடத்திய காஷ்மீர் பண்டிட்கள் மீது போலீஸார் தடியடி நடத்தியதும் சர்ச்சையானது.

இந்நிலையில், இன்று காணொலி மூலம் உரையாற்றிய டெல்லி முதல்வர் அர்விந்த் கேஜ்ரிவால், “ஒரு காஷ்மீர் பண்டிட்டை அவரது அலுவலகத்தில் வைத்தே பயங்கரவாதிகள் படுகொலை செய்திருக்கிறார்கள். இது திட்டமிடப்பட்ட படுகொலை என்றே தெரிகிறது. ஒரே நாளில் ராணுவம் இரண்டு பயங்கரவாதிகளைச் சுட்டுக்கொன்றிருக்கிறது. எனினும், ராகுல் பட்டின் படுகொலை காஷ்மீர் பண்டிட்களை பீதியில் ஆழ்த்தியிருக்கிறது. காஷ்மீர் பண்டிட்களின் பாதுகாப்பைப் பிரதமர் மோடி உறுதிசெய்ய வேண்டும்” என்று கூறினார்.

மேலும், “அந்தச் சம்பவத்தைக் கண்டித்துப் போராட்டம் நடத்திய காஷ்மீர் பண்டிட்கள் மீது தடியடி நடத்தப்பட்டிருக்கிறது. இதில் சம்பந்தப்பட்ட போலீஸ் அதிகாரிகள் உடனடியாகப் பணிநீக்கம் செய்யப்பட வேண்டும்” என்றும் கேஜ்ரிவால் வலியுறுத்தினார்.

இது தொடர்பாக நேற்று இந்தி மொழியில் வெளியிட்ட ட்வீட்டில், ‘காஷ்மீர் பண்டிட்கள் இனப்படுகொலை பற்றி பேசுவதைவிட, ஒரு படத்தைப் பற்றிப் பேசுவதுதான் பிரதமருக்கு முக்கியம் போலும். பாஜகவின் கொள்கைகளால் காஷ்மீரில் இன்று பயங்கரவாதம் உச்சத்தில் உள்ளது. பிரதமரே, பாதுகாப்புப் பொறுப்பை ஏற்று அமைதியை ஏற்படுத்த முயற்சி செய்யுங்கள்’ என காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி கூறியிருந்தார்.

1990-களில் காஷ்மீர் பண்டிட்கள் பயங்கரவாதிகளால் வெளியேற்றப்பட்ட நிகழ்வை அடிப்படையாகக் கொண்டு விவேக் அக்னிஹோத்ரி இயக்கிய ‘தி காஷ்மீர் ஃபைல்ஸ்’ திரைப்படத்துக்கு பாஜகவினர் மிகப் பெரிய அளவில் ஆதரவளித்தனர். பாஜக ஆளும் மாநிலங்களில் அப்படத்துக்கு வரிவிலக்கு அளிக்கப்பட்டது, வரிவிலக்கு தர மறுத்து படத்தை விமர்சித்த அர்விந்த் கேஜ்ரிவால் இல்லத்தின் முன்பு பாஜகவினர் ஆர்ப்பாட்டம் நடத்தியது குறிப்பிடத்தக்கது.

x