மே 31 வரை கோதுமைக் கொள்முதல் செய்யலாம்: மாநிலங்களுக்கு உத்தரவிட்ட மத்திய அரசு!


கோதுமை உற்பத்தி செய்யும் மாநிலங்களும் ஒன்றியப் பிரதேசங்களும் மே 31 வரை கோதுமை கொள்முதல் செய்யலாம் என நுகர்வோர் விவகாரங்கள், உணவு மற்றும் பொது விநியோக அமைச்சகம் அறிவித்திருக்கிறது. கோதுமைக் கொள்முதல் சீஸனில் காலநீட்டிப்பு செய்யப்பட வேண்டும் என மாநில மற்றும் ஒன்றியப் பிரதேச அரசுகள் கேட்டுக்கொண்டதன் பேரில் இந்த முடிவை மத்திய அரசு எடுத்திருக்கிறது.

மத்திய தொகுப்பு வரம்பின் அடிப்படையில் கோதுமைக் கொள்முதலைத் தொடர இந்திய உணவுக் கழகத்துக்கு (எஃப்சிஐ) ஏற்கெனவே உத்தரவிட்டிருப்பட்டிருக்கிறது. இந்நிலையில் கொள்முதல் சீஸனை நீட்டிப்பது விவசாயிகளுக்குப் பலனளிக்கும் என்றும் மத்திய அரசு தெரிவித்திருக்கிறது.

ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் முதல் மார்ச் வரை ரபி சந்தை சீஸன் நடைபெறுகிறது. இந்த முறை மத்திய பிரதேசம், ஹரியாணா, உத்தர பிரதேசம், உத்தராகண்ட், இமாசல பிரதேசம், காஷ்மீர், குஜராத், பிஹார் மற்றும் ராஜஸ்தானில் ரபி சந்தைப்படுத்துதல் சீஸன் (ஆர்எம்எஸ்) 2022-23 சுமுகமாக நடைபெற்றதாக உணவு மற்றும் பொது விநியோக அமைச்சகம் தெரிவித்திருக்கிறது.

அதேசமயம், கடந்த ஆண்டை ஒப்பிட இந்த ஆண்டு மத்திய தொகுப்பு கையிருப்பு அளவின் கீழ், இந்த ஆண்டு கோதுமை கொள்முதல் குறைவு என்று மத்திய அரசு தெரிவித்திருக்கிறது. குறைந்தபட்ச ஆதரவு விலையைவிட சந்தை விலை அதிகம் என்பதுதான் இதற்கு முக்கியக் காரணம். தனியார் நிறுவனங்களுக்கு கோதுமையை விவசாயிகள் விற்பதன் காரணமாக இந்த விலை உயர்வு ஏற்பட்டிருக்கிறது.

இந்தியாவில் இந்த ஆண்டில் வெப்ப அலைகள் அதிகம் என்பதால், பல மாநிலங்களில் கோதுமை விளைச்சல் பாதிக்கப்பட்டிருக்கிறது. இதன் காரணமாக கோதுமை விலையும் அதிகரிக்கத் தொடங்கியிருக்கிறது. இந்தச் சூழலில், கோதுமை விலையைக் கட்டுப்படுத்தவும், தட்டுப்பாடு ஏற்படும் சூழலைத் தவிர்க்கவும் கோதுமை ஏற்றுமதிக்கு மத்திய அரசு பெருமளவிலான கட்டுப்பாடுகளை விதித்திருக்கிறது. உக்ரைன் போர்ச் சூழல் காரணமாகப் பல்வேறு நாடுகளில் கோதுமை ஏற்றுமதி தடைபட்டிருக்கும் சூழலில், கோதுமை உற்பத்தியில் உலகின் இரண்டாவது பெரிய நாடான இந்தியா அனுப்பிவந்த கோதுமை பல நாடுகளுக்கு உதவிகரமாக இருந்தது.

தற்போது, ஏற்றுமதிக்குக் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருந்தாலும், அண்டை நாடுகள் / உணவுப் பற்றாக்குறையால் பாதிக்கப்படிருக்கும் நாடுகளிடமிருந்து வரும் கோரிக்கைகளுக்கு மதிப்பளித்து அந்நாடுகளுக்கு மட்டும் கோதுமை ஏற்றுமதியைச் செய்ய இந்தியா முடிவெடுத்தது குறிப்பிடத்தக்கது.

x